ஒளியின் மக்கள் இருளில் வாழார்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

30 ஏப்ரல் 2025
பாஸ்கா 2ஆம் வாரம் - புதன்
தி.பணிகள் 5: 17-26
யோவான் 3: 16-21
ஒளியின் மக்கள் இருளில் வாழார்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், தலைமைக் குருவும் சதுசேயர்கள் என்று அழைக்கப்பட்டோரும், இயேசுவைப் பற்றிய போதனைகளைப் பரப்பும் திருத்தூதர்களால் மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கு குறைந்துவிடும் என்றும் அஞ்சினர். அதனால், அவர்கள் திருத்தூதர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும், இரவில் இறை தூதர் திருத்தூதர்களை விடுவித்து, மீண்டும் கோவிலுக்குச் சென்று போதனையைத் தொடரச் சொன்னார். மறுநாள் காலை, திருத்தூதர்கள் அதன்படியே செய்தார்கள்.
தலைமைக் குருவும் அவருடைய குழுவினரும் திருத்தூதர்கள் சிறையிலிருந்து மர்மமாக வெளியேறி ஆலயத்தில் போதனை செய்வதை அறிந்தபோது, காவல் தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் என்று அவர்களை மீண்டும் அழைத்துவரச் சொல்லவே, காவலர்கள் மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி வன்முறை ஏதும் பயன்படுத்தாமல் திருத்தூதர்களை அழைத்து வந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள் என்று லூக்கா விவரிக்கிறார்
நற்செய்தி.
கடவுள் உலகத்தை மிகவும் அன்பு செய்கிறார். அதனால், தம்மீது நம்பிக்கை கொள்ளும் ஒவ்வொருவரையும் அழிவிலிருந்து காப்பாற்றவும், அவர்களுக்கு நிலைவாழ்வு அளிக்கவும் அவர் தம்முடைய ஒரே மகனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பினார் என்று இயேசு நிக்கதேமுக்கு அறிவிக்கிறார். இயேசு உலகைக் கண்டிக்க வரவில்லை, அதைக் மீட்கவே வந்தார் என்பதை வலியுறுத்துகிறார.
அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை. ஆனால் கடவுளின் ஒரே மகனான இயேசுவில் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர் என்று விவரிக்கிறார் யோவான் போதிக்கிறார்.
அத்துடன், ஒளியாகிய இயேசு உலகில் வந்தும் தீய செயல்களில் உழல்வோர் இருளையே விரும்புவதோடு ஒளியை வெறுக்கிறார்கள் என்றும், ஒளியோ அவர்களின் தீய செயல்களை வெளிப்படுத்துகிறது என்றும், உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள் என்பதையும் வலியுறுத்துகிறார் ஆண்டவர்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களில் இருள் மற்றும் ஒளி ஆகிய இரண்டிற்குமான வேறுபாட்டை அறிகிறோம். ஒளியின் மக்கள் கடவுளின் மக்கள். திருத்தூதர்களின் அணுகுமுறை இன்றைய நற்செய்தியில் ஒளியின் வல்லமையைப் பிரதிபலிக்கிறது: தவறு செய்பவர்கள் இருளை விரும்புகிறார்கள், அதே வேளை நேர்மையாளர்கள் இளியின் மக்களாகச் செயல்படுவார்கள். இவ்வாறு, சிறையில் இருளில் இருந்த திருத்தூதர்கள் சூரியன் உதிக்கும்போது, ஆலயத்தின் திறந்த வெளிக்குள் வந்து இயேசுவின் செய்தியைப் போதிக்கிறார்கள். அவர்கள் இருண்ட மனம் கொண்ட வஞ்சகர்களுக்கு அஞ்சவில்லை.
இருள் பரவியிருந்த உலகின் மீது கடவுள் ஒளியைப் படைத்து, இருளையும் ஒளியையும் பிரித்தார் (தொ.நூ. 1:3) ஏனெனில், தம் மக்களை ஒளியின் மக்களாக வாழ வைக்க விரும்பினார். ஆனால், மக்களோ ஒளியைக் காட்டிலும் இருளை விரும்பும் மக்களாக வாழத்தொடங்கினார். இதன் விளைவாக, உலகத்தின் துவக்கம் முதல் இன்று வரை இருளுக்கும், வெளிச்சத்துக்கும் தொடர் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. இருளை அகற்ற ஒரே வழி, நம்மில் ஒளியே ஏற்றுவதாகும்.
“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசாயா 9 : 2 )” எனும் இறைவாக்கு ஒளியின் நாயகனாம் இறைமகன் இயேசுவின் ஒளி வரவை வார்த்தைகளால் குறிப்பிடுகிறது. மரித்த ஆண்டவர் அவரது உயிர்ப்பினால் நம்மில் நிலைவாழ்வுக்கான ஒளியை ஏற்றியுள்ளார். பாஸ்கா திருவிழிப்பில் இந்த உண்மை நமக்குப் புலப்படுத்தப்படுகிறது.
கடவுள் நமக்காகவும், நமது பாவத்திற்கும் உலகத்தின் பாவத்திற்கும் பரிகார பலியாக தம்முடைய ஒரே பேறான மகனை நமக்குக் கொடுப்பதன் மூலம் நம்மீதுள்ள அன்பை நிரூபிக்கிறார். அவருடைய அன்பு நம் அனைவரையும் மற்றும் முழு உலகத்தையும் அரவணைக்கும் ஒரு மீட்பின் அன்பு. பிள்ளைகளான நாம் அவரது இல்லம் திரும்பும் வரை அவர் ஓய்வெடுக்க மாட்டார்.
உனவே, கிறிஸ்தவ வாழ்வில் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இருளுக்கும் ஒளிக்கும் பணிவிடை செய்ய இயலாது. கடவுளுடனான நமது உறவை தைரியமாக அறிவிக்கவும் சாட்சியம் பகரவும் துணிவு தேவை. இந்த வரத்திற்காக தூய ஆவியாரிடம் மன்றாடுவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, திருத்தூதர்களின் முன்னுதாரணத்தால் நான் திடம்பெறவும். வாழ்நாள் எல்லாம் உமது ஒளியின் பரிதிபலிப்பில் வாழவும் எனக்கு உதவுவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
