எப்போது தணியும் இந்த ஆடம்பர மோகம் | ஆர்.கே. சாமி | VeritasTamil

29 ஏப்ரல் 2025
பாஸ்கா 2ஆம் வாரம் – செவ்வாய்
தி.பணிகள் 4: 32-37
யோவான் 3: 7-15
எப்போது தணியும் இந்த ஆடம்பர மோகம்!’
முதல் வாசகம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம், எருசலேம் பகுதியில் இருந்த தொடக்கத் திருஅவையினர் இயேசு மற்றும் அவரது தந்தையாம் கடவுளுடன் மட்டுமல்லாமல், கிறிஸ்து இயேசுவில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுடன் நல்லுறவில் ஒன்றித்திருந்தார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் உடைமைகளையும் வளங்களையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட நடைமுறை வாழ்வையும் விவரிக்கிறது.
1.நம்பிக்கையாளர்களின் ஒற்றுமை:
கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் "ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர் " என்று நூலின் ஆசிரியர் லூக்கா விவரிக்கிறார். இது அவர்களிடையே நிலவிய வலுவான ஒருமைப்பாட்டை குறிக்கிறது.
2.சமூகப் பகிர்வு:
நம்பிக்கையாளர்கள் யாரும் தங்கள் உடைமைகளின் மீது தனிப்பட்ட உரிமையைக் கோரவில்லை என்றும், அவர்கள் தங்களுக்குப் பொதுவான அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர் என்றும் நூலாசிரியர் சாட்சியம் பகர்கிறார்.
3.உயிர்த்தெழுதலுக்குச் சாட்சி:
தொடக்கக்காலக் கிறிஸ்தவ சமூகத்தில் தலைமைப் பொறுப்பேற்றிருந்த திருத்தூதர்கள், மிகுந்த வல்மையுடன் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியமளித்தனர். இது உயிருள்ள கிறிஸ்தவச் சமூகத்தை ஆங்காங்கே கட்டியெழுப்பியது.
4.வறியவர்களுக்கான ஆதரவு:
அடுத்து, தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் அவர்களின் பொதுவுடமை பகிர்வின் காரணமாக அவர்கள் மத்தியில் வறுமையுற்றோர் யாரும் இல்லை. சொத்து அல்லது வீடுகளை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை திருத்தூதர்களிடம் கொண்டு வந்து கொடுத்தனர். அவை ஒவ்வொரு நபரின் தேவைக்கேற்ப விநியோகிக்கப்பட்டது என்கிறார் லூக்கா.
5. பர்னபாவின் உதாரணம்:
சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்ற பர்னபாவின் உதாரணத்தைக் கொடுப்பதன் மூலம் வாசகப் பகுதி முடிவடைகிறது. அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார் என்கிறார் ஆசிரியர் லூக்கா.
நற்செய்தி.
ஒரு பரிசேயரும் யூதத் தலைவர்களுள் ஒருவருமான நிக்கதேமிடம் இறையரசுக்குள் நுழைய ‘நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்’ என்று கூறியதுப் பற்றி வியப்படைய வேண்டாம் என்று இயேசு கூறுகிறார்.
நிக்கதேம் அவரைப் பார்த்து, ‘இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்ட போது, இயேசு காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாதல்லவா?’ என்று ஓர் உவமையைப் பயன்படுத்தி, அவ்வாறே, ஒரு மனிதனின் வாழ்க்கையில் தூய ஆவியாரின் வல்ல செயல் குறித்து மனிதரால் ஆய்ந்தறிய இயலாது என்கிறார்.
ஆனாலும், நிக்கதேம் இயேசுவின் இந்த பதிலால் குழப்பமடைந்து, எப்படி ஒருவர் மீண்டும் தாயின் பிறக்க முடியும் என்று இயேசுவிடம் கேட்கிறார். நிக்கதேமு ஒரு சாதாரண யூதர் அல்ல. அவர் சிறந்த மறைநூல் வல்லுநரும் ஆவார். ஆகவே, இயேசு அவரிடம் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். அவர், மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்? என்று மற்றொரு கேள்வியை நிக்கதேமுவிடம் கேட்கிறார்.
நிறைவாக, இஸ்ரயேலரை மரணத்திலிருந்து காப்பாற்ற மோசே பாலைநிலத்தில் ஒரு பாம்பை உயர்த்திய நிகழ்வை பழைய ஏற்பாட்டிலிருந்து இயேசு குறிப்பிட்டு, அதேபோல், மானிடமகனும் மீட்புக்காக உயர்த்தப்படுவார் (சிலுவையில் அறையப்படுவார்) என்று முன்னுரைக்கிறார்.
சிந்தனைக்கு.
கடவுளின் தூய ஆவியாரின் கொடையானது காணக்கூடிய அல்லது கணிக்கக்கூடிய ஒன்றல்ல என்பதை இயேசு நிக்கோதேமுவுக்கு நினைவூட்டுகிறார். இக்கொடையானது இயேசு உயிர்ப்பிலிருந்து நமக்கு அருளப்பட்ட கொடை. இன்றைய நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளை ஆழ அலசிப் பார்த்தால், 'தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும்' என்று அவர் கோடிட்டு சொல்வதன் வழியாக, அவரைத் தவிர மற்றவர்களும் தூய ஆவியால் பிறக்க முடியும் என்பதையும் இயேசு வலியுறுத்துகிறார்.
இயேசு விவரிப்பதைப்போல் காற்றின் தொடக்கமும் அதன் முடிவும் யாருக்கும் தெரியாது. காற்றை வேலி போட்டு நிறுத்தவோ, அதன் திசையை மாற்றவோ எவராலும் இயலாது. அது நமது சக்திக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. அவ்வாறே தூய ஆவியாரின் செயல்பாட்டையும் நம்மால் தடுக்கவோ, தடைபோடவோ இயலாது.
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எவ்வாறு கூட்டு வாழ்க்கையை வாழ்ந்து தங்கள் உடைமைகளைப் பகிர்ந்து கொண்டனர் என்பதை முதல் வாசகம் விவரித்தது. அவரகள் தூய ஆவியாரால் இயக்கப்பட்டார்கள், எனவே அவ்வாறு கூட்டாகச் செயல்பட்டார்கள். தங்களக்கென்று உள்ளதைப் பதுக்காமால் பொதுவில் வைத்துப் பகிர்ந்துகொண்டார்கள். சமத்துவமும் சமூக அக்கறையும் அவர்கள் மத்தியில் மேலோங்கியது.
‘கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்’
என்ற தத்துவம் அன்று மக்கள் மனதில் விதைக்கப்பட்டது. ஆனால், இன்றோ ‘மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்’ என்ற தன்னலம் தாண்டவமாடுகிறது. ஆடம்பரத்தில் அல்ல, எளிமையிலும் பகிர்ந்துண்டு வாழ்வதிலும்தான் திருஅவை மிளிரும். இதை உலகறிய வாழ்ந்து காட்டியவர் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் என்றால் மிகையாகாது.
நம்மில் பலர் ‘இயேசுவை அறிந்தவர்களாக வாழ்கிறோமே தவிர அவரில் வாழ்வதில்லை. அவரில் முழுமையைத் தேடுவதில்லை. நமது கிறிஸ்தவ வாழ்வு கிறிஸ்துவில் பற்றற்ற வாழ்வாக முடிந்து விடுகிறது. இப்படிப்பட்ட வாழ்வால் நாம் ஆலயத்தில் கூடும் கூட்டமாகவே காலமும் இருந்து மடிகிறோம். இறையரசைக் கட்டியெழுப்ப நமது அகவாழ்விலும் புறவாழ்விலும் தூய ஆவியார் செயல்பட அவரை அனுமதிக்க வேண்டும். இல்லையேல் நிலைவாழ்வு என்பது எட்டா கனியாகும்.
இறைவேண்டல்.
உம்மை தேடி வந்த நிக்கதேமுவுக்கு நிலைவாழ்வக்கான வழியைக் காட்டிய இயேசுவே, உமது உயிர்ப்பிலும், தூய ஆவியாரின் வழிகாட்டுதலிலும் நானும் புதுப்பிறப்பால் நிலைவாழ்வுக்கு என்னை தயாரிக்க அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
