குழப்பம் தீர்ந்தால் கவலைத்தீரும், குழப்பம் தீர்ப்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

26 செப்டம்பர் 2023,                                                                                           பொதுக்காலம் 25ஆம் வாரம் –வியாயன்

சபை உரை 1: 2-11
லூக்கா 9: 7-9

 
 குழப்பம் தீர்ந்தால் கவலைத்தீரும், குழப்பம் தீர்ப்போம்!


முதல் வாசகம்.

இன்று தொடங்கி தொடர்ந்து மூன்று நாள்களுக்கு  முதல் வாசகமானது  சபை உரையாளர் நூலிலிருந்து எடுக்கப்படுகிறது.

'வீண் முற்றிலும் வீண்!' என இன்றைய முதல் வாசகம் தொடங்குகிறது.  இங்கு எதுவம் நிலையானது கிடையாது என்ற மையக்கருத்தை வெளிப்படுகிறது. இந்நூலின் ஆசிரியரான சபை உரையாளர் தான் கடவுளுக்குப் பயந்து நடந்தாலும், கடவுளுக்கு உகந்த பலி செலுத்தினாலும், ஏதோ ஒரு வகையில் அவருக்கு  இறப்பு வரத்தான் போகிறது. ஒருநாள் அவர் இறக்கப்போவது திண்ணம்.  அப்படியிருக்க   கடவுளுக்கு ஏன் பயப்பட வேண்டும்? கடவுளுக்கு ஏன் பலி செலுத்த வேண்டும்? என்ற கேள்விக்கேட்டு குழம்புகிறார். 

தொடக்க நூலில் காயின் ஆபேல் கதையில் ஆபேல் நல்லவன். கடவுளுக்கு   தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்து காணிக்கையாகக் கொடுத்தான். கடவுள் அதனை கனிவுடன் கண்ணோக்கினார்.   காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. இதனால், சினமுற்று காயின் ஆபேலைக் கொன்றான். 

'ஹபேல்' என்றால் எபிரேயத்தில் ‘வீண்’ என்று பொருள்படும். ஆபேலின் வாழ்வு வீணாக அழிந்தது.   எனவேதான் தொடக்க நூல் ஆசிரியரர் இவருக்கு ‘ஆபேல்’ என்று பெயர் வைத்தார். அது போலவே, ஆபேலைப் போல கடவுளுக்குப் பயந்து நடந்தாலும், கடவுளுக்கு உகந்த பலி செலுத்தினாலும், ஏதோ ஒரு தீயவன் வழியாக மரணம் வரக்கூடும்  என்றால், கடவுளுக்கு ஏன் பயப்பட வேண்டும்? கடவுளுக்கு ஏன் பலி செலுத்த வேண்டும்? என்னும் கேள்விகள் சபை உரையாளருக்கு எழுகின்றன.  எனவே, இவர் ‘எல்லாம் தலைவிதிப்படித்தான் நடக்கும் எனும் எண்ணத்திற்கு அடிமையாகிறார். 

அத்தோடு நின்றுவிடாமல்,  மனிதரின் உழைப்பும்  வீண் என்கிறார் சபை உரையாளர். ஏனெனில், மனிதரின் உழைப்பால் பெரிய மாற்றங்கள எதுவும் நிகழப்போவதில்லை. முன்பு இருந்ததே பின்பும் இருக்கும், முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை என்றும் பிரபஞ்சத்திலும் மாற்றங்கள் உண்டாகப்போவதில்லை என்றும்  மனம்  
சலித்துக்கொள்கிறார்.  நிறைவாக, 'புதியது என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை!' என்ற முடிவுக்கு வருகிறார்.


நற்செய்தி.


இயேசுவின் அரும்பெரும் செயல்கள் வெகுவாக கலிலேயாப் பகுதி எங்கும் மக்களால் பேசப்படுகிறது. இதை ஏரோது அரசன் கேள்விப்படுகிறான்.  இயேசுவை ஓர் இறைவாக்கினராகப் பார்க்கத் தொடங்கினான். இவன்தான்  'திருமுழுக்கு யோவானின் தலையை  வெட்டச் செய்தவன்.  ஆகவே, இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர் ஓர் இறைவாக்கினராக இருக்கக்கூடும் என்று  மனம் குழம்புகின்றான். 

அச்சமயத்தில்,   ஆண்டவர் இயேசு செய்துவந்த செயல்களையும் இயேசுவைக் குறித்து மக்கள் பலவாறாக பேசுவதையும் கேள்விப்பட்டு, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே! இயேசுவைக் குறித்து, தனது   குற்ற உணர்ச்சி மிகுதியால் அவரைக் கண்டு உரையாட முற்படுகிறான். அது இயலவில்லை. இறுதியில் இயேசுவைக் கைது செய்தப்பின்புதான் விசாரனையின்போது இயேசுவை நேரில் சந்திக்கிறான்.  
 

சிந்தனைக்கு.


ஏரோது ஒரு சமயத்தில் அவசரப்பட்டு செய்த குற்றத்தை நினைத்து கலங்கத் தொடங்கினான். நல்லதொரு இறைவாக்கினரைக் (திருமுழக்கு யோவானை)  கொன்ற  குற்ற உணர்வு அவனை  வாட்டத் தொடங்கியது.   ஏரோது இயேசுவைப் பார்க்க முயன்றுகொண்டே இருந்ததாக இன்றைய நற்செய்தி நிறைவு செய்கிறது. நிச்சயமாக, ஏரோது, அந்தப் பகுதியில் வசிக்கும் எவரையும் போலவே, எந்த நேரத்திலும் இயேசு போதித்துக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று அவரைச் சந்தித்திருக்க முடியும்.   ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.  ஏதோ ஒரு தடை அவரில் இருந்தது.

குழப்பத்தில் தொடர்ந்து வாழ்வது சிறந்ததல்ல. குழப்பம் மனக்கவலைக்கு வழிவகுக்கும். இயேசு சொல்வதைக் கேட்க வேண்டுமானால், தான் மாற வேண்டும் என்பதை ஏரோது அறிந்திருக்கலாம். ஆனால், அவர் பெரும்பாலும் மாற விரும்பவில்லை.

இது நம் அனைவருக்கும் ஒரு சிறந்ததொரு பாடமாக அமைகிறது.  நாம் ஒவ்வொருவரும் இறைவனிடமிருந்து வரும் மனமாறத்திற்கான   அழைப்புகளை எளிதில் நிராகரித்துவிடுகிறோம்.  எனவே, நமது பார்வை மங்கிவிடுகிறது, குழப்பங்கள் அதிகரிக்கின்றன.

‘பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் (குழப்பம்) கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்’

என்பது ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் ஒலித்த ஒரு பாடலின் சில வரிகள்.

கவலையும் குழப்பமும் நமது வாழ்வை இருளாக்கும். முதல் வாசகத்தில்  கூறப்பட்டத்தைப் போல், எதுவும் மாறப்போவதில்லை என்று முடங்கிக் கிடப்பதில் பயனொன்றுமில்லை. மாற்றம் முதலில் நம்மில் தொடங்க வேண்டும். ஏரோது. சற்று முயன்று இயேசுவைச் சந்தித்திருந்தால் குழப்பத்திலிருந்து விடுதலைப் பெற்றிருப்பான். இன்று வான்வீட்டில் இயேசுவோடு வாழும் வாய்ப்பைப் பெற்றிருந்திருக்கலாம். 


இறைவேண்டல்.


என்றுன்றும் வாழும் என் ஆண்டவரே, இரவும் பகலும் நீர் என்னை அழைக்கிறீர், நான் உமது தூய வார்த்தைக்குச் செவிசாய்க்கும்போது என்னை என் குழப்பதிலிருந்து விடுவிக்க விழைகிறீர். ஆண்டவரே உமக்கு நன்றி. ஆமென்

 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452