இறையரசுப் பணிக்கே நமது எளிய வாழ்வு! | ஆர்.கே. சாமி | VeritasTamil
25 செப்டம்பர் 2023, பொதுக்காலம் 25ஆம் வாரம் –புதன்
நீதிமொழி 30: 5-9
லூக்கா 9: 1-6
இறையரசுப் பணிக்கே நமது எளிய வாழ்வு!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையையும், வார்த்தைக்கு உண்மையாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. நூல் ஆசிரியர் தனக்கு என்ன வேண்டுமோ அவற்றை மட்டுமே கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கிறார். அவர், வஞ்சகத்தை விட உண்மையால் சூழப்பட வேண்டும் என்ற வரம் கேட்டு மன்றாடுகிறார்.
இப்பகுதியல் நீதிமொழிகளை எழுதிய ஆசிரியர் கடவுள் தனக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொடுக்காமல் அவரது நல்வாழ்வுக்கு வேண்டியதை மட்டும் அளிக்க வேண்டும் என்று அவரது இரு விண்ணப்பங்களை கடவுளிடம் முன் வைக்கிறார்.
1. வஞ்சனையும் பொய்யும் அவரை விட்டு அகலச் செய்ய வேண்டும்.
2. அவருக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; அவருக்கு தேவையான உணவை மட்டும் தந்தால் போதும் என்கிறார்.
மேலும், செல்வந்தராக இருப்பது பெருமைக்கு வழிவகுக்கிறது என்றும், இதனால், கடவுள் மீது நம்பிக்கைக் குறைந்திருக்கும் என்றும், அதே வேளையில் ஏழையாக இருப்பது திருடுவதற்கும், ஆசைப்படுவதற்கும், நம்பிக்கையின்மைக்கும் வழிவகுக்கும் என்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் இயேசு "திருத்தூதர்கள் பன்னிருவரையும் அழைத்து, இறையாட்சிக்கான நற்செய்தியைப் பறைசாற்றும் அவருடைய பணியைத் தொடர அவர் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறார். அவர்கள் இறையாட்சி பற்றிப் பறைசாற்ற வேண்டும், நற்செய்தியை அறிவிக்க வேண்டும் இவை இரண்டும் அவர்களின் தலையாயப் பணியாக உள்ளது. இவ்வாறு பணியாற்றும்போது திருத்தூதர்கள் உடல் நலம் குன்றியோரின் பிணிகளையும் போக்குவதற்கும் அதிகாரத்தை வழங்குகிறார் இயேசு.
அவர், பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம் என்ற நிபந்தனையையும் அளிக்கிறார். அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற கடவுளையே நம்பியிருக்க வேண்டும் என்றும், வீடுவீடாகச் சென்று உதவி கேட்காமல் பிறர் கொடுப்பதைப் பெற்று நிறைவடைய வேண்டும் என்கிறார்.
நிறைவாக, அவர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது, அவர்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டு செல்ல வேண்டும் என்கிறார்.
சிந்தனைக்கு.
இயேசு தனது திருத்தூதர்களை நற்செய்தியைப் பறைசாற்றும் பணிக்கு அனுப்புவது இதுவே முதல் முறை. இந்த பணியில், இயேசு இறந்து, உயிர்த்தெழுந்து விண்ணகத்திற்குச் சென்ற பிறகு, உலங்கெங்கும் ஆற்ற வேண்டிய பணிக்காக அவர் அவர்களைத் தயார்படுத்துகிறார். ஆனால் இப்போதைக்கு, இயேசு இந்த திருத்தூதர்களுக்கு மூன்று காரியங்களைச் செய்யும்படி கட்டளையிடுகிறார்: பிசாசுகளைத் துரத்துவது, நோயுற்றவர்களைக் குணப்படுத்துவது மற்றும் இறையரசை அறிவிப்பது.
முதல்வாசகத்தில்
1. வஞ்சனையும் பொய்யும் வேண்டாம்.
2. செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; அவருக்கு தேவையான உணவை மட்டும் தந்தால் போதும் என்று நீதிநூல் ஆசிரியர் இறைவனிடம் மன்றாடி விண்ணப்பித்ததை அறிதோம். அதற்கொப்ப இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்கு அறிவுறுத்திப் பணிக்கு அனுப்புகிறார்.
இயேசு அன்று கொண்டிருந்தத் திருத்தூதர்களைப் போலவே, அலகைகளை எதிர்த்துப் போராட நாம் அழைக்கப்படுகிறோம். அவை விண்ணிலிருந்து விரட்டப்பட்ட வானதூதர்கள். அவை விண்ணுலகில் கொண்டிருந்த இயற்கையான சக்திகளை இழந்துவிடவில்லை. அவற்றைத் தக்க வைத்துக் கொண்டவர்கள். அவை, அந்த இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி நம்மை ஏமாற்றவும், நம்மை ஒடுக்கவும், சில சமயங்களில் நம்மை அவை வசம் வைத்துக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அவை பொல்லாதவை, நச்சுக் கலந்தவை, இறையரசுக்கு எதிரானவை. எனவேதான், அவற்றை விரட்டும் ஆற்றலைத் தம் சீடர்களுக்கு ஆண்டவர் அளித்தார்.
அலகைக்கு உரியதான உலகப் பற்றைக் கொண்டிருக்கும் போது நம்மால் இறையரசுக்கான பணியில் ஒருபோதும் முழுமையாக ஈடுபட முடியாது. ‘எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது’ (மத் 6:24) என்ற ஆண்டவரின் எச்சரிக்கையை மனதில்கொள்ள வேண்டும். உலகப் பற்றும் இறையரசும் ஒன்றக்கொன்று முறனானவை. எனவேதான், பற்றற்ற வாழ்க்கை முறைக்கு இயேசு தம் திருத்தூதர்களைத் தயார்படுத்தினார்.
கடவுளின் முன் பேய்கள் சக்தியற்றவை. எனவேதான், கடவுள் அவற்றின் மீது ஆன்மீக அதிகாரத்தை நமக்குத் தருகிறார். இந்த அதிகாரத்தை நாம் நன்முறையில் பயன்படுத்தினோமானால், திருத்தூதர்களைப் போல் இன்றும் நம்மால் இறையரசுப் பணியில் பீடுநடைப்போடமுடியும். முயற்சி திருவினையாக்கும்.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, உமது சீடர்களுக்கு நீர் அளித்த அறிவுரையை, நானும் ஏற்று, மனம் தளராமல் தொடர்ந்து நற்செய்திப் பணியாற்ற எனக்கு ஊக்கமும், ஆற்றலும் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452