பெண் அடிமை திருஅவைக்கு ஆகாது! | ஆர்.கே. சாமி | VeritasTamil

20 செப்டம்பர்  2024 
பொதுக்காலம் 24 ஆம் வாரம்–வெள்ளி

1 கொரி  15: 12-20
லூக்கா   8: 1-3
 

பெண் அடிமை திருஅவைக்கு ஆகாது!


முதல் வாசகம்.


அக்காலத்தில், கொரிந்தியர்களில் சிலர் மரித்தோர் உயிர்த்தெழுவர் என்ற கருத்துக்கு எதிராகப் பேசி வந்தனர்.  பரிசேயர்கள் இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று நம்பினாலும், சதுசேயர்கள் அக்கருத்தை ஏற்கவில்லை.  இதனால், சதுசேயர்களால் பயிற்றுவிக்கப்பட்ட  யூதர்கள் இறந்தோர் உயிர்த்தெழுவர் என்பதை நம்பவில்லை.  

புனித பவுல், அவர் ஒரு பரிசேயராக இருந்ததால் மட்டுமல்ல, முக்கியமாக அவர் உயிர்த்த ஆண்டவர் இயேசுவை நேரில் அனுபவித்ததால், இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைதத் தற்காத்துப் பேசுகிறார்.  ஏனெனில்  இறந்தவர்களின் உயிர்த்தெழுதலை மறுப்பவர்கள்   இயேசுவின் பாஸ்கா மறைபொருளான பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றையும் மறுப்பவர் ஆவர்.

 
நற்செய்தி.

லூக்காவின் நற்செய்தி "உலகளாவிய நற்செய்தி" என்று அழைக்கப்படுகிறது.  லூக்கா இயேசுவை சமூகத்தின் அனைத்து மக்களையும் சீடரகளாகக் கொண்டிருந்தார் என்பதை  தம் நற்செய்தியில் சித்தரிக்கிறார்.  மற்ற நற்செய்திகளில் குறிப்பிடப்படாத, இயேசுவின் ஊழியத்தில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டதை லூக்கா தனது வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்.  

பெண்கள் தூரத்திலிருந்து இயேசுவின் போதனைகளை மட்டும் கேட்கவில்லை. மாறாக,  அவர்கள் பணியிலும் சேவையிலும் ஈடுபட்டார்கள்.   இன்றைய நற்செய்தியில், பன்னிரண்டு திருத்தூதர்களுக்குப் அடுத்து  பெண்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.  லூக்காவின் நற்செய்தியில் காணப்படுவது போல் பெண்களும் இறையரசுக்கானப் பணியில் மதிப்பில் உயர்ந்தவர்கள் என்பது உணர்த்தப்படுகிறது. 


சிந்தனைக்கு.


நம்மில் சிலர் ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை மரணத்தில் மட்டும் தங்கள் நம்பிக்கையை மையப்படுத்துகிறார்கள்.  ‘நமக்காக இவர் போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலின்படியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்’ என்பது நமது முழுமையான நம்பிக்கை.  இங்கே இயேசுவின் உயிர்ப்பு நமது நம்பிக்கையின் மையமாகிறது. 

கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களில் சிலர் இயேசுவின் உயிர்ப்பை ஏற்கவில்லை. அவர்களை  இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை வைக்க வலியுறுத்துகிறார் பவுல். இயேசுவின் மரணமும் உயிர்ப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றதாகும்.

நற்செய்தியில், இறையரசுக்கானப் பணியில் பெண்களின் சிறப்பை வெளிப்படுத்துகிறார் லூக்கா.  அக்காலத்தில், ஆண் வர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள், உரிமை பறிக்கப்பட்டவர்கள், இரண்டாம் தரக் குடிமக்கள் என பின்தள்ளப்பட்டவர்களாக இருந்தனர். இயேசு இவர்களுக்கு சம மதிப்பளித்து தமது சீடர்களாகக் கொண்டார். இயேசுவின் பணி வாழ்வில் அவருக்கு தோளோடு தோள் கொடுத்து உதவியோர் பெண்கள் என்றால் மிகையாகாது. ஆண் சீடர்கள் இயேசுவை விட்டு ஓடிவிட்டபோதிலும்  துணிவுடன் இறுதிவரை நின்று கல்வாரி வரை சென்று அவர்தம்  உடலுக்கு நறுமண எண்ணெய் பூச விரைந்தவர்களும் பெண்கள்தான். 

இன்றும், நமது பங்குகளில் பணிகளில் அதிகம் ஈடுபடுபவர்களும், தியானங்கள், சொற்பொழிவுகள் ஆகியவற்றில் அதிகம் பெங்கேற்பவர்களும் பெண்கள்தான் என்று துணிந்து கூறலாம். சமுதாயத்தில்  பெண்களுக்கென்று கட்டுப்பாடுகள் வைத்திருந்தாலும், அந்த கட்டுப்பாட்டிற்குள் தங்களால் கடவுளுக்காக, கடவுளின் பணியாளர்களுக்காக எதைச் செய்ய முடியுமோ, அதை அவர்கள் செய்ய  துணிவு கொண்டுள்ளனர். இது இயேசு அன்று விதைத்த சமூகப் புரட்சியின் பலன் என்றே கூற வேண்டும்.   

இயேசுவின் சீடத்துவத்தில் “கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற ஆண்கள், பெண்கள் என அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” (கலா 3:28) என்று பவுல் அடிகள் நமது சமத்துவத்தை எடுத்துரைப்பதை நினைவில் கொண்டு செயல்படுவோம்.


இறைவேண்டல்.


சமூகப் புரட்சிக்கு வித்திட்ட ஆண்டவரே, உமது மீட்புப் பணியில் ஆண்களும் பெண்களும் சமப் பங்கு வகிக்கிறார்கள் என்பதை ஏற்று வாழும் சீடராக நான் திகழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452