கடவுளின் அன்பு பாவத்தின் அளவைப் பார்ப்பதில்லை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

19 செப்டம்பர்  2024 
பொதுக்காலம் 24 ஆம் வாரம்–வியாழன்

1 கொரி  15: 1-11
லூக்கா  7: 36-50
 

கடவுளின் அன்பு பாவத்தின் அளவைப் பார்ப்பதில்லை!


முதல் வாசகம்.


இன்றைய முதல் வாசகத்தில் பவுல் அடிகள் அவர் பெற்றுக்கொண்ட  நற்செய்தியைக்  கொரிந்து கிறிஸ்தவச் சமூகத்துக்கு நினைவூட்டுகிறார். இயேசு  சிலுவையில் அறையப்பட்டு, மரித்து உயிர்த்தெழுந்த  உண்மைகளைத் திருத்தூதர்கள் எடுத்துரைத்தனர். பவுல் அவரே நேரடியாக  இயேசு கிறிஸ்துவிடமிருந்து ஒரு திருத்தூதுப் பணிக்கான வெளிப்பாட்டைப் பெற்றார் (கலா 1:11). அவர் எருசலேமில் பேதுரு மற்றும் யாக்கோப்பைச் சந்தித்தார் என்பதை உறுதிப்படுத்துகின்றார்.

மேலும், கிறிஸ்து மக்களின் பாவங்களுக்காக’ மரித்தார் என்றும் மறைநூலில்  ஏசாயா 53:5-12 உள்ளபடி இயேசுவே துன்புற்ற கடவுளின் ஊழியர் என்பதையும் எடுத்துரைக்கிறார். பின்னர் அவர் பேதுருவுக்கும் (கேபா) அதன்பின்  திருத்தூதர் அனைவருக்கும் தோன்றியதையும், எருசலேமில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோருக்குத்  தோன்றியதையும்  இறுதியில் அவருக்குத் தோன்றியதையும் குறிப்பிட்டு கிறிஸ்துவுக்குச் சாட்சியமாக எழுதுகிறார். 

கடவுளின் தயவால்தான் பவுல் ஓர் அழைக்கப்பட்ட திருத்தூதராகப்  பணியை ஏற்றார் என்பதை   ஒப்புக்கொள்வதோடு, அவரது முந்தைய வாழ்வைச் சுட்டிக்காட்டுகிறார்.   அவர் கடவுளின் திருஅவையைக் கொடுமைப்படுத்தியவர் என்றும்  திருத்தூதர்  என்ற பெயரைப் பெற அவர் தகுதியற்றவர் என்றும், கடவுளின் அருளே  மற்ற எல்லா திருத்தூதர்களை விடவும் கடினமாக உழைக்கும் விருப்பத்தையும் திடத்தையும் கொடுத்தது என்றும் தம் எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிட்டு எழுதுகிறார. 


நற்செய்தி.


நற்செய்தியில் இன்று விவரிக்கப்படும்  நிகழ்வுகள் கடவுளின் மன்னிப்பை அனுபவித்தவர்களால் வெளிப்படுத்தப்படும் நன்றியுணர்வாகப் பார்க்கலாம்.   ஒருவர் எவ்வளவு அதிகமாக மன்னிக்கப்பட்டு, கடவுளின் இரக்கத்தின்  மேன்மையை  உணர்ந்துகொள்கிறாரோ, அவ்வளவு அதிகமாக மன்னிப்பு என்ற கடவுளின் கொடையைப்  போற்றும் வகையில் கடவுளை அன்பு செய்வார் என்பது தெளிவாகிறது.    

பெரும்  பாவியாக இருந்த பெண், இயேசு ஒரு பரிசேயரின் இல்லத்தில் விருந்துண்ணும் வேளையில்,  இயேசுவின் பாதங்களை தண்ணீரில் கழுவுவதற்குப் பதிலாக, அவள் தன் கண்ணீரால் அவற்றைக் கழுவுகிறாள்.   அவற்றை ஒரு துண்டைக்கொண்டு துடைப்பதற்குப்  பதிலாக, அவள் தன் கூந்தலைப்  பயன்படுத்துகிறாள்.  கன்னத்தில் அமைதி முத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பெண் இடைவிடாமல் இயேசுவின் பாதங்களை முத்தமிட்டாள்.  இயேசுவின் தலையில் எண்ணெய் பூசுவதற்குப் பதிலாக, அவர் காலில் விலையுயர்ந்த தைலத்தைப் பூசி மகிழ்கிறாள். இப்படிப்பட்ட ஒரு பொதுப் பாவி தன்னைத் தொட அனுமதித்தத்காக இயேசு விமர்சிக்கப்படுகிறார்.  

அவரை அழைத்த பரிசேயர் “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். அதை அறிந்த இயேசு,  அவருக்குச்  சவால் விடுகிறார். 

அச்சூழலில் கடவுளின் அளவற்ற இரக்கத்தை எடுத்துரைக்க ஓர் உவமையைக் கூறுகிறார். “கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்கிறார். 

பிறகு, அப்பெண் மிகவும் தாழ்ச்சியுடன் செய்த பணிவிடையைத் தன்னை அழைத்தப் பரிசேயரோடு ஒப்பிட்டு ‘குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்’ என்றும், “உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” என்றும் அப்பெண்ணை உயர்த்தி அனுப்புகிறார்.


சிந்தனைக்கு.


முதல் வாசகத்தில் ஒரு கொடுமைக்காரராக இருந்த பவுல் மனமாறி கடவுளின் இரக்கத்தைப்பெற்று நல்ல ஊழியராக மாறியதை அறிந்தோம். நற்செய்தியில் பலரால் பெரும்பாவி என்று விலக்கப்பட்டவள் கடவுளின் தயவைப்பெற்று புனிதத்தை நாடிய ஒரு பெண்ணின் கதையைக் கேட்டோம். நாம் எவ்வளவு பெரும் பாவத்துக்குரியவர்கள் என்பது முக்கியமல்ல, பாவச் செயலை உணர்ந்து மன்னிப்புக்கு வழிகாண்பதும், மனமாறுவதும் இன்றியமையாத பண்புகள் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். 

ஆண்டவராகிய இயேசுவிடம் நாம் நெருங்கி  வரும்போது, அவரால் நாம் தொடப்படுகிறோம்.  கிறிஸ்து இயேசுவில் ஊற்றெடுக்கும் அன்பால் நாம் அவரது அரவணைப்பைப் பெறுகிறோம்.  இன்றைய பதிலுரை திருப்பாடலில் ‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என்று ஆர்ப்பரிக்க அழைக்கப்படும் நாம், அவரது பேரன்பை நினைவுகூர்ந்து மன்னிப்புப்பெற்று வாழ வேண்டும்.

 நற்செய்தியில், இயேசு அந்தப் பெண்ணைப் பாரத்து,  “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று சொல்வதோடு உரையாடல் முடிகிறது. மேசையில் இருந்தவர்களின் எதிர்வினை விமர்சனத்தைக்  கவனித்தோமானால்,  அவர்கள் தங்களுக்குள், "பாவங்களை மன்னிக்கும் இவர் யார்?" என்று கேட்பதில் குறியாக இருந்தனர். அந்தப் பாவியான பெண் உள்ளே வருவதை அவர்கள் பார்த்தார்கள்,   அவள் துணிவோடு இயேசுவை அணுகி, தனது பாவத்தைக் கொட்டித்தீர்க்கும் வகையில், அவளதுச் செயலையும் அதன் விளைவாக  இயேசு உடனே அவளை மன்னிப்பதைக் கண்டார்கள்.

இந்தப் பெண்ணின் பாவங்களை மன்னித்ததில் அங்கிருந்ந்தோர் வெளிப்படுத்திய ஆச்சரியமும் பிரமிப்பும் கடவுளின் இரக்கம் மற்றும் மன்னிப்பு குறித்த நமது சொந்த அணுகுமுறையை ஆராய நமக்கு உதவ வேண்டும். பாவ அறிக்கைக்குத் தயக்கம் என்பது ஒரு தடை. அதை நீக்கி முன்னோக்கிச் செல்லும்போது கடவுளின் தயவையும் மன்னிப்பையும் பெற முடியம். கடவுளின் அன்பு மகத்தானது, அது  நம்மை தேடிவந்த அன்பு. அது நமது பாவத்தின் அளவைப் பார்ப்பதில்லை.    தன் சீடர்களைக் கொடுமைப்படுத்திய சவுலை புறக்கணித்தவர் அல்ல இயேசு. தன்னிடம் பல பேர் முன்னிலையில் வந்த பெரும்பாவியான பெண்ணை விரட்டியடித்தவர்  அல்ல இயேசு. ஆதாலால், கடவுளின் அன்பு  நம்மை ஒருபோதும் புறக்கணிக்காது என்பதை மட்டும் நினைவில் கொள்வோம்.


இறைவேண்டல்.

“உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க”  என்று பெரும் பாவிக்கு மன்னிப்பு வழங்கிய ஆண்டவரே, என் குறைகளையும் மன்னித்து ஆசீர்வதிப்பீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452