அன்பு நமக்கில்லையே நாம் உதவாக்கறையே! | ஆர்.கே. சாமி | VeritasTamil

18 செப்டம்பர்  2024 
பொதுக்காலம் 24 ஆம் வாரம்–புதன்

1 கொரி  12: 31- 13: 13
லூக்கா 7: 31-35 
 

அன்பு நமக்கில்லையே நாம் உதவாக்கறையே! 


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், புனித பவுல் ஒரு சீடரின் வாழ்க்கையில் அன்பே அனைத்துக்கும் மேல் எனும் படிப்பினையை மிகைப்படுத்தகிறார்.   ஒருவர் கொண்டுள்ள எந்த கொடையும்,  பரவசப்பேச்சு மற்றும்  அறிவு உட்பட அனைத்தும் அழிந்துப்போகும், ஆனால, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் ஒருவரில் நிலைக்கக்கூடியவை என்றும், இந்த மூன்றில்  அன்பே தலைசிறந்தது என்று தம் கடிதத்தில் கொரிந்தியருக்குக் குறிப்பிட்டு எழுதுகிறார்.  

ஒருவர் எல்லா கொடைகளையும் பெற்றிருந்தாலும், மக்களை அன்புடன் நடத்த முடியவில்லை என்றால், அனைத்துக் கொடைகளும் பயனற்றவை என்று அன்பை உயர்த்திப் பேசும் பவுல் அடிகள், அன்பில் வாழ்பவர்கள் இயேசுவின் அன்பான சேவை மனப்பான்மையை பிரதிபலிப்பர் என்று  வலியுறுத்துகிறார்.  


நற்செய்தி.


நற்செய்தியில், மற்றவர்களிடம் எப்போதும்  குறை காண்பவர்களைப் பற்றி இயேசு விவரிக்கிறார்.  இயேசு தம் காலத்து மக்களில் பலரை  திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் குறித்து விளையாட்டுத்தனமாகப் பேசி விளையாடும்  குழந்தைகளுடன் ஒப்பிடுகிறார்.   ஒரு குழு   திருமணத்தையொட்டிய விளையாட்டை விளையாட அழைக்கும் போது மற்ற குழுவோ  இறுதி சடங்குகள் குறித்த  விளையாட்டுக்கு அழைப்பர்.  அது போன்றுதான் அத்தலைமுறையின் மக்கள் உள்ளனர் என்று ஒப்பிட்டுப் பேசுகிறார். 

திருமுழுக்கு யோவானை ‘பேய் பிடித்தவன்’ என்றும் இயேசுவை பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’என்றும் உண்மையறியாது,   சிறுபிள்ளைதனமாக பிதற்றுவார்கள் உளர்  என்கிறார் ஆண்டவர். இவர்கள்  தங்கள் வாழ்க்கையைப் பற்றிய பார்வையில் மிகவும் சுயநலமாக இருப்பதால், மற்றவர்களுடன் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்று  குறிப்பிடுகிறார்.


சிந்தனைக்கு.

 
இன்றைய வாசகங்களையொட்டி சிந்திக்கையில், என் கவனம் அன்பு பற்றிய புனித பவுலின் வார்த்தைகளில் பதிகிறது.  நேற்றைய முதல் வாசகத்தில் கேட்டது போல, நம் அனைவருக்கும் பலதரப்பட்ட கொடைகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், இக்கொடைகளை நாம் பிறரின் வளர்ச்சிக்குப்   பயன்படுத்தாவிட்டால், பெற்ற கொடைகளை வீணாக்குகிறோம் என்றும் அறிவுறுத்துகிறார் பவுல் அடிகள். நாம் எவ்வளவுதான் கல்வியிலும் செல்வத்திலும்  உயர் நிலையில் இருந்தாலும் அன்பு நமக்கில்லையேல்  நாம் ஒன்றுமில்லை.  'தந்தை தன்னை அன்பு செய்கிறார் எனவும், தந்தை தன்னை அன்பு செய்வது போல தன் சீடர்களை தான் அன்பு செய்வதாகவும்' சொல்கிறார் இயேசு. அத்தோடு நிறுத்தவில்லை அவர். நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ளவேண்டும் என்பதைக்  கட்டளையாகவும் தருகின்றார்.  ஆக, மேலிருந்து வருகின்ற அன்பை நாம் நமக்குக் கீழ்நோக்கி செலுத்த வேண்டும். இல்லையேல் நாம் ஓர் உதவாக்கறையே.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை  என்பது ஒரு சிறந்த பழமொழி. எல்லாரிடத்திலும் குறைகள் உண்டு. நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகளிடமும் குற்றம் இருக்கும். குற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் உறவோ, நட்போ நீடிக்காது. தனி மரம் தோப்பாவதில்லை. தனித்து வாழ்வதால் நம் இன்பத்துன்பங்களில் யாரும் பங்குகொள்ளப் போவதில்லை. 

பிறரை பற்றி புறம் பேசுவது அல்லது அவரது குறைகளைப் பெரிதுபடுத்திப்  பேசுவதில்  நம்மில் பலர் பேரார்வம் காட்டுவதுண்டு.   அதுவே நமக்கென்று  வரும் போது நம்மால அதை ஏற்க முடிவதில்லை.  “எப்படி என்னைப் பற்றி அவதூறு பேசலாம். எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசவேண்டியது தானே” என்று வரிந்துக்கட்டி கொண்டு நிற்போம்.  தனக்கு ஒரு நீதி அடுத்தவருக்கு ஒரு நீதி என்பது நல்ல சீடருக்கு  அழகல்ல.  

‘பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ!’

என்ற கவிஞர் வாலியின் வரிகள் இன்று நமது சிந்தனைக்கு நல்லதொரு படைப்பாக உள்ளது.


இறைவேண்டல்.


என் அன்பு ஆண்டவரே, உமது அருளின் தூண்டுதலால், ‘என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை’ என்பதை நினைவில் கொண்டு, அன்பு பணி செய்து வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452