ஒன்றிப்பும் பற்றுணர்வும் இறைமக்கள் உயிர்நாடி! | ஆர்.கே. சாமி | VeritasTamil

16 செப்டம்பர்  2024 
பொதுக்காலம் 24 ஆம் வாரம் -திங்கள்

1 கொரி  11: 17-26
லூக்கா 7: 1-10
 
 
ஒன்றிப்பும் பற்றுணர்வும் இறைமக்கள் உயிர்நாடி!


முதல் வாசகம்.


பவுல் அடிகள் கொரிந்து இறைமக்கள் சிலரின் நடவடிக்கையில்  வருத்தமுற்றிருந்தார் என்று அறிகிறோம். ஏனெனில்,  அவர்கள் மத்தியில்  வேறுபாடுகளும் பிளவுகளும் நிலவின.    கொரிந்திய கிறிஸ்தர்களில்  சிலர் (நல்ல நிலையில் இருப்பவர்கள்) ஆண்டவருடைய திருவிருந்தில் பங்கேற்க முன்னதாகவே  வருகிறார்கள்.  ஆண்டவரின் இராவுணவு நிகழ்வைக் கொண்டாடும் முன்னரே  ஒவ்வொருவரும்  கொண்டுவந்த உணவை  உண்டுவிடுகிறார்கள்.  இதனால் பகிர்ந்துண்ணும் கிறிஸ்தவக் கொள்கை மங்கிவிட்டது.

கிறிஸ்தவச் சமூகத்தில் சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள் என்று பவுல் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார். வயிராற உண்பதற்கும் குடிப்பதற்கும்  வீடுகள் இல்லையா? என்று கேள்வியை முன்வைத்து, திருஅவையை  இழிவுப்படுத்தக் கூடாது என்கிறார். அத்துடன், நற்கருணை கொண்டாட்டத்தில்,  ஆண்டவருடைய இறப்பை அவர் வரும்வரை அறிவிக்கிறோம் எனும் இறையியலை வலியுறுத்துகிறார்.


 நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு கலிலேயா கடலின் வடக்குக் கரையில் உள்ள கப்பர்நாகூம் நகருக்குள் நுழைகிறார்.  அந்த ஊரில்  யூத நம்பிக்கைக்கு மிகவும் ஆதரவாக இருந்த ஓர் உரோமை நூற்றுவர் தலைவர் இயேசுவிடம் வருகிறார். அவர்  தனது சொந்தப் பணத்தில் அவ்வூர் மக்களுக்குத் தொழுகைக் கூடம் கட்டிருத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நூற்றுவர் தலைவர் இயேசு அங்கு வந்திருப்பதைக்  கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் குணப்படுத்த வருமாறு வேண்டினார். ஊர் மக்களும் அவருக்காக இயேசுவிடம் பரிந்து பேசினர்.  

இயேசு நூற்றுவர் தலைவரின் வீட்டிற்குச் செல்லத் தொடங்குகிறார்.  வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பி   “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார் என்று அவர் சார்பாகக்  கூறச் சொல்கிறார்.   நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையை இயேசு பாராட்டுகிறார்.

நூற்றுவர் தலைவர் தனது உயர்ந்த நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தாழ்ந்து இயேசுவின் உதவியை நாடினார்.  இயேசு அவரைக் குறித்து வியப்புற்று,  தம்மைப் பின் தொடரும் மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். நிறைவாக, அந்த பணியாளன் பிழைத்துக்கொண்டார் என்றும் லூக்கா குறிப்பிடுகிறார்.


சிந்தனைக்கு.


நமது உண்மை நிலையைச் சிந்தித்துப் பார்ப்போமானால், நாமும்  கொரிந்தியர்களைப் போல்தான்  பல வகையில் வேறுபட்டிருக்கிறோம்.  பங்குகளில் அடிப்படை திருஅவை சமூகங்களில் (அன்பியங்களில்)  ‘இது எங்கள் குழு’, ‘அது உங்கள் குழு’ ‘இவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள்’ என்றெல்லாம் பிரித்துப் பார்க்கும் சமூகமாக வாழ்கிறோம்.  ஒன்றிப்பு என்பது நம்மில் இன்னும் குறைந்தே காணப்படுகிறது.  

நாம் திருஅவை எனும் நம்பிக்கையாளர்களின்  சமூகமாக இருக்க அழைக்கப்பட்டவர்கள். நம்மில் பிளவு என்பது இயேசுவின் திருவுடலைக் கூறுபோடுவதாகும். இது இயேசுவைச் சிலுவையில் அறைந்ததைவிட கொடூரமான செயல் என்றால் மிகையாகாது. திருஅவையின் பலம் நமது ஒன்றிப்பில் உள்ளது. நம்மை ஒன்றிக்கும் அருளடையாளம்தான் நற்கருணை. இதையே பவுல் அடிகள் முதல் வாசகத்தில் எடுத்துரைக்கிறார். 

நற்செய்தில் என்னைக் கவர்ந்தது  என்னவென்றால், உரோமை நூற்றுவர் தலைவரால் கூறப்பட்ட அந்த தாழ்மையான வார்த்தைகள் உண்மையில் நூற்றுவர் தலைவரால் இயேசுவிடம் பேசப்படவில்லை. ஏனென்றால், தான் இயேசுவிடம் செல்வதற்குத் தகுதியானவராக  நூற்றுவர் தலைவர் நம்பவில்லை. ஆகையால், தன் சார்பாக இயேசுவிடம் இந்த வார்த்தைகளைப் கூறும்படி தன் நண்பர்கள் சிலரை அனுப்பினார். 

அந்த நூற்றுவர் தலைவரின் நண்பர்கள் இயேசுவுக்கு முன் பரிந்துரை செய்பவர்களாக இருந்தனர். ஆம், தன் தலைவருக்காக நண்பர்கள் முன்வைத்தப் பரிந்துரையை இயேசு மதித்து ஏற்றுக்கொண்டதோடு, பரிந்துரையை நிறைவேற்றுகிறார். கத்தோலிக்கத் திருஅவையில் பரிந்துரை இறைவேண்டல்களுக்குத் தனி சிறப்புண்டு. சிலர், ஏன் புனிதர்களிடம் வேண்டுகிறீர்கள், ஏன் அன்னை மரியாவிடம் வேண்டுகிறீர்கள், நேரடியாக இயேசுவிடமே வேண்டுவதுதான் முறை என்று பிதற்றுவார்கள். 

இத்தகையோருக்கு நூற்றுவர் தலைவர் நல்ல பாடம் கற்பிக்கிறார். இயேசு, அந்த பணியாளர்களடம், ‘நீங்கள் ஏன் உங்கள் தலைவருக்காகப் பரிந்துரைக்கிறீர்கள். அவர் எங்கே?’ என்று கேள்வி கேட்கவில்லை. அவர் மதிப்பளித்து, அவர்களின் பரிந்துரைக்குப் பணிந்தார். பரிந்துரை வேண்டல்களுக்கு ஆற்றல் அதிகம் என்பதை நினைவில் கொள்வோம்.


இறைவேண்டல்.


ஆண்டவரே, ‘நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்’ என்ற நூற்றுவர் தலைவன் போல் தாழ்ச்சியோடு இறைமக்கள் சமூகத்தில் நான் இணைந்திருக்க என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்


    
 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452