நமது கடவுள் தெய்வமல்ல! | ஆர்.கே. சாமி | VeritasTamil
12 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 23 ஆம் வாரம் – வியாழன்
1 கொரி 8: 1b-7, 11-13
லூக்கா 6: 27-38
நமது கடவுள் தெய்வமல்ல!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், ‘இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை', ‘கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை’ என்ற இறையியலை நம்முன் வைக்கிறார் பவுல். விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருந்தாலும், நமக்குக் கடவுள் ஒருவரே என்ற படிப்பினையை உறுதிபடுத்துகிறார். நமது கடவுள் தெய்வமல்ல, உயிருள்ள கடவுள்.
அவர் கொரிந்து கிறிஸ்தவச் சமூகத்தினரை அவர்களின் செயல்களை அவரவர் சொந்த மனசாட்சியின்படி அமைந்தால், அதனால் ஏற்படக்கூடிய விளைவை விவரிக்கிறார். அவர்களின் தனிப்பட்ட செயல்கள் இதர சகோதர சகோதரிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி சிந்தித்துச் செயல்பட அழைக்கிறார்.
நமது சொந்த அறிவுக்கும் மனசாட்சிக்கும் சில நடவடிக்கைகள் நல்லதாகவும் புனிதமாகவும் தோன்றலாம். ஆனால, அவை உண்மையிலேயே பிறருக்கு துன்பம் தருவிப்பதாக அமையக்கூடும் என்கிறார் பவுல், எனவே, பிறரின் நம்பிக்கை வாழ்வுக்கு இடையூராக இருக்கக்கூடிய செயல்களைப் பிறர் நலம் கருதி தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்துகிறார்.
குறிப்பாக ஒரு கிறிஸ்தவ நம்பிக்கையாளர் சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், நம்பிக்கையில் வலு குறைந்தவர்களுக்குப் பாதகமாக இருக்கக்கூடும் என்று கருதினால் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றும் விவரிக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம் சீடர்களின் பார்வையை விரிவுப்படுத்த அழைக்கிறார்.
அவற்றில் ஒன்றுதான் ‘மன்னியுங்கள். மன்னிப்புப் பெறுவீர்கள்’ என்பதாகும். மன்னிப்பது சற்றுக் கடினமான காரியமாக இருந்தாலும் அது இயலாத காரியமல்ல. ஏனென்றால் மன்னிக்கச் சொல்லும் நம் ஆண்டவர் இயேசுவே தன்னைச் சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற பகைவர்களை மன்னித்தார். பிற மக்கள் சீடர்கள் மீது விரோதமாகவும் அக்கறையற்றவர்களாகவும் இருந்தாலும், சீடர்களாக இருப்பதனால் மற்றவர்களை அன்பு செய்யவும், அவர்களுக்குச் சேவை செய்யவும் வேண்டும் என்கிறார்.
‘உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்’ என்பது இயேசுவின் ஆழ்ந்த போதனையாக உள்ளது. அதிலும், ‘உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்’ என்பது பெரும் சவாலுக்குரியதாக உள்ளது. மற்றவர்களை இயேசுவின் சீடர்கள் எப்படி நடத்துகிறார்களோ அதே வழியில் அவர்களும் நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதியுடன் இயேசு இன்றைய போதனையை முடிக்கிறார்.
சிந்தனைக்கு.
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் எனும் இயேசுவின் போதனை எளிதாகத் தோன்றும். நடைமுறை வாழ்வில் இயேசுவின் இந்த அறிவுறையை நாம் ஏற்று வாழ்ந்தாலே போதும், எல்லாம் இன்பமயமாகும். பொதுவாக, இயேசுவின் இப்படிப்பினையைப் ‘பொன் விதி’ என்பார்கள்.
இன்றைய வாசகங்களில் இயேசு சொல்வது போல், கடவுள் கேடு நினைப்பவர்களையும் பொல்லாரையும், அநியாயக்காரர்களையும் அன்பு செய்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே நாம் எப்பொழுதும் நமக்கு எதிராக இருப்பவர்களையும் அன்பு வேண்டும். இயேசுவின் இன்றைய போதனைக்கொப்ப நமது வாழ்க்கைமுறையும் அணுகுமுறையும் மாற வேண்டும் என்றுதான் இயேசு எதிர்பார்க்கிறார்.
நாம் மற்றவர்களிடம் எவ்வளவு தாராளமாகவும் அக்கறையுடனும் இருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அது நம்மிடம் திரும்பும் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவ்வாறே, நாம் எவ்வளவு கடுமையாகவும் அக்கறையற்றவர்களாகவும் இருக்கிறோமோ, அதுவும் எதிர்மறையாக நம்மிடம் திரும்பும். கடவுள் நம் இதயங்களைப் பார்க்கிறார். ‘உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்’ என்று இயேசு சொன்னது, அவரது முதல் சீடர்களைத் திடுக்கிடச் செய்திருக்கும். இப்படியொரு போதனையா என்று வியந்திருப்பர். நமக்கும் திடுக்கிடும் செய்திதான் அது.
நம்மிடம் அன்பாக இருப்பவர்களுடன் கூடி குலாவுவது எளிது. ஆனால் அதே அன்பை வேண்டாதவர் மீதும் செலுத்த வேண்டும் என்பதுதான் நமக்கான சவால். அனைவரும் மீட்கப்பட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பதால், இயேசுவின் படிப்பினையை ஏற்பதன் வழியே நமது பகைவரையும் மீட்பரிடம் கொண்டுவர முடியும்.
முதல் வாசகத்தில், நாம் கொண்டிருக்கும் அறிவு நம்மை இறுமாப்படையச் செய்யும்; ஆனால் அன்பு உறவை வளர்க்கும் என்று பவுல் அடிகள் கூறுகிறார். மேலும், ‘கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை’ என்றும் வலியுறுத்தி போதிக்கிறார். நமது அறிவைக் கொண்டு கடவுளும் தெய்வமும் ஒன்றென்று எண்ணுகிறோம். ‘உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள்’ (இ.ச. 10:17) என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, கடவுளை தெய்வம் என்று அழைப்பதும் தவறு. தெய்வங்கள் என்பன மனிதரின் படைப்பு. நமது திருப்பலி இறைவேண்டல்களிலும் ‘தெய்வம்’ என்று சொல்லப்படவில்லை. எனவே, பாடல்களில் ‘தெய்வம்’ என்று இருப்பதைத் தவிர்த்தல் வேண்டும். நமது வழிபாடு தெய்வங்களுக்குரியது அல்ல. அது முற்றிலும் வாழும் கடவுளுக்குரியது.
இறைவேண்டல்.
அன்பின் ஊற்றாகிய ஆண்டவரே, பகைவரை மன்னித்து, அன்புகாட்டி வாழும் வரத்தை எனக்கு ஈந்தருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452