நாமே திருஅவை... இயேசுவின் திருவுடல்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

19 அக்டோபர் 2024, பொதுக்காலம் 28ஆம் வாரம் – சனி
எபேசியர் 1: 15-23
லூக்கா 12: 8-12
நாமே திருஅவை... இயேசுவின் திருவுடல்!
முதல் வாசகம்.
இன்றைய வாசகங்கள் கடவுளின் வல்லமையும் அவரது மாட்சியும் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவை எனும் ஆழ்ந்த படிப்பினையை நமக்கு நினைவூட்டுகின்றன. நாம் கடவுளிடம் எவ்வளவு அதிகமாக நெருங்கிச் செல்கிறோமோ, அவ்வளவு அதிகமாக பாவமுள்ள, எளிய மனிதர்களாகிய நாம் அவரது ஆற்றலையும், மாட்சியையும், அற்புதச் செயல்களையும் கண்டுணரலாம் என்று பவுல் அடிகள் வெளிப்படுத்துகிறார்.
புனித பவுல் எபேசியர்களின் உண்மை நம்பிக்கை வாழ்வுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். அவர்களுக்கு இன்னும் கூடுதலான அருளையும் ஞானத்தையும் பொழிந்தருள கடவுளிடம் வேண்டுகிறார். கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலால் இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார் என்ற இறையியல் உண்மையை வெளிப்படுத்துகிறார்.
மேலும், உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருஅவைக்குத் தலையாக தந்துள்ளார் என்றும், நிறைவாக, பவுல் திருஅவையே (நாமே) அவரது உடல் என்ற மறைபொருளை எடுத்தியம்புகிறார்
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களுக்கு அவர் வழங்கவுள்ள தூய ஆவியாரின் வல்லமை மற்றும் சிறப்பைக் குறித்து எடுத்துரைக்கிறார். இதில் முக்கியமாக, மானிட மகனான இயேசுவுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார் என்ற உன்னதப் படிப்பினையைக் கற்றுத் தருகிறார்.
மேலும், மண்ணுலகில் மானிட மகனான இயேசுவை ஏற்று அவரோடு உறவு கொண்டு வாழ்வோரை ஒருநாள் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார் என்றும், மக்கள் முன்னிலையில் அவரை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார் என்றும் வலியுறுத்திக் கூறுகிறார், ஆவியானவர் தங்கள் வாழ்க்கையில் செயல்பட அனுமதிப்பவர்களுக்கு, ஆண்டராகிய இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் நேரம் வரும்போது பேசுவதற்கு வார்த்தைகள் கொடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்கள் நமக்குப் புதிய தெம்பைக் கொடுக்கின்றன. கடவுளின் ஞானத்தின் மகத்துவத்தால் நாம் வியப்படைகிறோம். முதல் வாசகத்தில், உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருஅவைக்குத் தலையாக தந்துள்ளார் என்றும், நிறைவாக, திருஅவையாகிய நாமே அவரது உடல் என்ற மறைபொருளைப் பவுல் உணரச் செய்தார். ஆம், அவரது திருவுடலாக இருக்கும் நமக்கு ஆண்டவர் அவரது ஞானத்தையும் நம்மோடு பகிர்வதோடு, அவரில் நாளுக்கு நாள் முதிர்ச்சியடையச் செய்கிறார்.
இந்த நற்செய்தி வாசகத்தில் இயேசு மற்றொரு விடயத்தைத் தெளிவுப்படுத்துகிறார். மானிட மகனான இயேசுவுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார், ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார் என்கிறார். இது நமக்கு ஓர் எச்சிரிக்கையாகவும் தரப்படுகிறது.
தூயாவியார் யார்? அவர் தந்தையிடமிருந்து இயேசு அனுப்பிய துணையாளர். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் மூன்றாம் ஆள், (யோவான் 15:26). ஆகவே, உலகில் உண்மையை நோக்கி நம்மை வழிநடத்தும் தூய ஆவியாரைப் பழித்துரைக்கும் எவருக்கும் மன்னிப்பு என்பது எட்டா கனி என்கிறார் ஆண்டவர்.
இங்கே, இயேசு கொடுக்கும் முக்கிய செய்தி என்னவென்றால், நாம் பணிவுடன், தொடர்ந்து தூய ஆவியாரின் ஒவ்வொரு தூண்டுதலையும் பின்பற்ற முயலும்போது, தூய ஆவியானவர் நம்மை எப்போதும் வழிநடத்துவார் என்று நம்ப வேண்டும் என்பதாகும்.
கடவுளின் திட்டங்களின் பரந்த தன்மையை நாம் ஒருபோதும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தூய ஆவியாரின் வழிநடத்தலில் கடவுளின் திட்டத்தில் நம்மால் பங்கெடுக்க இயலும். தூய ஆவியானவர் நம்முடன் பேசுபவர் நமக்கு ஆறுதல் அளிப்பார் மற்றும் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப நம்மை இயக்குபவர். நாம் அவரில் இணைகிறோமா?
எனவே, தூய ஆவியாரில் நாம் கொள்ளும் துணிவே துணை என்ற நம்பிக்கையில் இயேசுவுக்கான சாட்சிய வாழ்வில் மகிழ்வுறுவோம். சாட்சியம் என்பது கறிக்கு உதவா ஏட்டுச் சுரக்காய் அல்ல. அது நம்மையே கையளிக்கும் உண்மை வாழ்வு.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, என் அன்றாட வாழ்வின் பரபரப்புக்கு மத்தியில் தூய ஆவியாரின் குரலைக் கேட்டுணர்ந்து கொள்ளும் வரத்தைத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452
Daily Program
