புறவினத்தார் நாமும் இயேசுவில் அகமகிழ்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

18 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 28ஆம் வாரம் – வெள்ளி
புனித லூக்கா - நற்செய்தியாளர்

திமொத்தேயு 4: 9-17
லூக்கா 10: 1-9


புறவினத்தார் நாமும் இயேசுவில் அகமகிழ்வோம்!


முன்னுரை:

இன்று திருஅவை நற்செய்தியாளர் புனித லூக்காவின் விழாவைக் கொண்டாடுகிறது.  மருத்துவர், கலைஞர் மற்றும் நற்செய்தியாளருமான  புனித லூக்காவின்    வாழ்க்கை மற்றும் பணியைப்  பற்றி இன்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.  சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். இவர் ஓர் ஓவியருமாவார் என்று கூறப்படுகிறது.  இர் ஒரு யூதரல்ல, புறவினத்த்தார்.  இவர், திருத்தூதர்  பவுலுடன் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வாசகம் புனித லூக்காவைப் பற்றி மட்டுமே பேசுகிறது என்றாலும், புதிய ஏற்பாட்டில் இவர் எழுதிய இரு படைப்புகளான "மூன்றாவது" நற்செய்தி மற்றும் திருத்தூதர்கள் நடவடிக்கை நூலிலிருந்தே இவரைப் பற்றி நிறைய தகவல்களை நாம் பெறுகிறோம்.

இவர் புனித பவுல் அடியாரின்  உடன் உழைப்பாளர். புனித பவுல் தமது இரண்டாம் நற்செய்திப் பயணத்தின்போது,  லூக்காவை துரோவாவில் சந்தித்தார். அத்தருணத்தில் இருந்து பவுல் அடிகள் இவரைத் தன்னுடன் இணைந்துக்கொண்டார்  (திப 16:10). 

புனித லூக்கா, பவுல் அடிகளின் பயணங்களிலும் போதும் அவரது சிறைவாழ்வின் போதும் அவருக்கு உற்ற துணையாக இருந்தார் என்று அறிகிறோம.  புனித லூக்கா பவுல் அடிகளுடன் இணைந்து ஆற்றிய பணியின் காரணமாகவும் அவரோடு  கொண்டிருந்த உறவின் காரணமாகவும்  லூக்கா புறவினத்தாரின்  திருஅவைகளில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார் எனலாம்.  

இவரது நற்செய்தியைக் கூர்ந்து, ஆழ்ந்து வாசித்தால் கடவுளின் மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டுமல்ல அது உலக மக்கள் அனைவருக்குமானது என்பது புலப்படும். இவரது நற்செய்தியின் தொடக்கத்திலேயே ‘இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி’ (2:32) என்று குறிப்பிடுவார். மேலும், 3:6-ல், ‘மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்’ என்றுரைப்பார்.

அக்காலத்தில் ஆண் வர்க்கத்தால் பெண்கள் வஞ்சிக்கப்பட்டார்கள்.  யூதச் சமூகத்தில் அவர்களுக்கு பல  உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. லூக்கா தமது நற்செய்தியில்  இவர்களை  மதித்து இவர்களுக்குச் சிறப்பிடம் அளித்து உயர்த்துகிறார். இதற்கு அன்னை மரியா மற்றும் எலிசபெத்து ஆகியோரின் சந்திப்பு நிகழ்வு ஒரு முத்தாயிப்பு எனலாம். 

தொடர்ந்து, இயேசுவின் காலத்தில் காணப்பட்ட ஒதுக்கப்பட்டோர், ஓரங்கட்டப்பட்டோர், பாவிகள், வரி வசூலிப்பவர்கள், விலை மாதர்கள், சமாரியர்கள் போன்றோரை அவரது நற்செய்தியில் இயேசுவின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்களாகக் காட்டினார். 

ஆண்டவர் இயேசுவை விடுதலையின், மீட்பின் போதகராகவும் இறைவாக்கினராகவும் விவரிக்கும் புனித லூக்கா, மீட்பரை பற்றிய எசாயாவின் முன்னறிவிப்போடு இயேசுவின் வருகையை இணைத்து   (4:18-19) இயேசுவின் வருகைக்கு பொருள் கூறுவார். 

‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’ (6:36) என்று கடவுள் கொண்டிருக்கும் இரக்கத்தை நமக்கு எடுத்துரைத்தார். ஆம், லூக்கா இயேசுவைக் கனிவுள்ளவராக, இரக்கமுள்ளவராக, எல்லோருக்கும் வாழ்வளிப்பவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

அடுத்து, அவரது இரண்டாம் நூலாகிய ‘திருத்தூதர் பணிகள்’ நூலை இவர் எழுதாதிருந்தால்,  தொடக்கத் திருஅவையின்  பல தகவல்களும், நிலவிய் பிரச்சனைகளும்   நாம் அறிய வாய்ப்பிருந்திருக்காது. 


சிந்தனைக்கு.

புனித  லூக்கா நம்மைப்போன்று, இயேசுவை நேரில் கண்டதில்லை. அவரது போதனைகளை நேரில்  கேட்டதுமில்லை. இவர் ஒரு யூதனும் இல்லை. ஆனாலும் நம்மைவிட பன்மடங்கு இயேசுவைப் பற்றிய செய்திகளை இவ்வுலகிற்கு இன்றும்  வழங்கி வருகிறார்.  

நம்மில் பலரைப்  போன்று இவர் ஒரு மறைக்கல்வி ஆசிரியர். மாண்புமிகு தியோபில் என்பவருக்கு இயேசுவின் பிறப்பு முதல் உயிர்ப்பு வரையிலான அனைத்தையும் துள்ளிதமாக ஆராய்தறிந்து  விவரித்து எழுதினார் (1:1-4).  இயேசுவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத்  தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர்கள் அவரிமிடம் ஒப்படைத்தவாரே அவற்றை  முறைப்படுத்தி கூறுகிறார். இவது போதனாமுறையை நமக்கு ஒரு நல்ல வழிகாட்டி எனலாம். அவர் எதையும் திரித்துப் போதிக்கவில்லை. இயேசு மனுவுருவானதின் நோக்கத்தை இவரைவிட வேறு யாரும்  பழைய ஏற்பாட்டைத் தொடர்புப்படுத்தி கூறவில்லை  (4:18-19).

இன்று நற்செய்தியில், இயேசு நம்மையும் போதிக்கும் பணிக்கு அனுப்புதை உணர்கிறோம். புனித லூக்காவைப் போன்று,  நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட  நற்செய்தியை உள்ளபடி போதிக்க நாமும் அனுப்பப்படுகிறோம்.   இப்பணியில் சிறந்து விளங்க புனித லூக்காவின் உதவியை நாடுவோம். 

இறைவேண்டல்.

 நீர் விரும்பியோரை எல்லாம் உமது நற்செய்திப் பணிக்கு அழைக்கும் அன்பு இயேசுவே, புனித லூக்காவைப்போல என்னையும் அழைத்துள்ளீர் என்பதை நான் உணர்ந்து பணி செய்ய எனக்கு உதவிப்புரிவீராக. ஆமென்

புனித லூக்காவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              

ஜெனிசிஸ்

விவிலியக் கல்வி மையம்                                                                                

+6 0122285452