சீடத்துவத்தில் வெளிவேடம் சீடத்துவத்தைச் சீரழிக்கும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
17அக்டோபர் 2024, பொதுக்காலம் 28ஆம் வாரம் – வியாழன்
எபேசியர் 1: 1-10
லூக்கா 11: 47-54
சீடத்துவத்தில் வெளிவேடம் சீடத்துவத்தைச் சீரழிக்கும்!
முதல் வாசகம்.
முன்னுரை.
இன்று தொடங்கி அடுத்த இரு வாரங்களுக்குப் பவுல் அடிகள் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து முதல் வாசகங்களைக் கேட்கவுள்ளோம். பவுல் அடிகள் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் எபேசில் நற்செய்தி அறிவித்தார் என்பது வரலாறு (திப 18:23-19:4). கடவுளின் திட்டம் என்பது மனித குலத்தை மட்டுமல்ல, படைப்பு அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் கடவுளுடன் ஒப்புரவாக்குவது என்னும் உயரிய இறையியல் படிப்பினையை இத்திருமுகம் கொண்டுள்ளது. மனிதகுலம் கடவுளின் தூய மக்களாகத் திகழ வேண்டும் என்பதே கடவுளின் உன்னதத் திட்டம்.
இத்திருமுகத்தில் பல உருவகங்கள் இடம் பெற்றுள்ளன. திருஅவை உடலாகவும், கட்டடமாகவும், மணமகளாகவும், கிறிஸ்து தலையாகவும், மூலைக்கல்லாகவும், மணமகனாகவும் உருவகிக்கப்படுவதைக் காண்கிறோம்.
இன்றைய வாசகத்தில், புனித பவுல் கடவுளுக்கு ஒரு திட்டம் உள்ளது என்றும், காலப்போக்கில் கடவுள் அந்த திட்டத்தை மனிதர்களுக்கு வெளிப்படுத்தி வருக்கிறார் என்றும் எண்பிக்கிறார். இயேசுவின் வாழ்க்கை மற்றும் பணி, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் முழுமையை அடைந்த இந்தத் திட்டத்தைப் பற்றி எபேசு நகர் மக்களுக்கு புனித பவுல் நினைவூட்டுகிறார்.
பவுல் அடிகள் தன்னை ‘திருத்தூதர்’ என்று அழைத்துக் கொள்வதோடு, அவர் தன்னை கடவுள் தேர்ந்தெடுத்த ஒரு நற்செய்தி பணியாளராக வெளிப்படுத்துகிறார். பவுல் அடிகள், கடவுள் எல்லா மக்களுக்கும் இயேசுவின் வழியாக மீட்பைக் கொண்டுவர திட்டமிட்டார் என்றும், இயேசு கல்வாரியில் இரத்தம் சிந்தியதில் கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவைக் கண்டது என்றும் விவரிக்கிறார்.
ஆம், கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிய மறைவானத் திட்டமானது, கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள் என்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு அவரது காலத்தில் வெளிவேடம் கொண்டு செயல்பட்ட யூதச் சமயத் தலைவர்களான மறைநூல் அறிஞர்களிடம் வெளிப்படையாகவும் துணிவாகவும் பேசுகிறார். ஒரு காலத்தில், கடவுள் அனுப்பிய உண்மையான இறைவாக்கினர்களைத் துன்புறுத்திய அவர்களது முன்னோர்களின் அடிச்சுவடுகளை இந்த போலி சமயத் தலைவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று அவர்களோடு விவாதிக்கிறார்.
ஆபேலின் இரத்தம் முதல் உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக அந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும் என்கிறார். மீண்டுமாக மறைநூல் அறிஞர்களை நோக்கி, ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு’ என்று சாபத்தை முன்னறிவிக்கிறார்.
சிந்தனைக்கு.
ஆண்டவராகிய கடவுள் தூயவர். ஆதலால், அவரது பிள்ளைகளும் படைப்பு அனைத்தும் தூயதாக இருக்க வேண்டும் (லேவி 19:2). இதுவே கடவுளின் திருவுளம் ஆகும். இன்றைய முதல் வாசகத்தில் பவுல், “நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்” என்கிறார். ஆம், நாம் திருமுழுக்கால் தூய்மைப்பெற்று அத்தூய்மையைக் கட்டிக்காத்து அவரது பிள்ளைகளாக வாழ வேண்டும் என்றுதான் கடவுள் விரும்புகிறார். இது ஓர் அன்பான தந்தையின் ஏக்கம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு மறைநூல் அறிஞர்களோடு இத்தூய்மை வாழ்வு குறித்தே மோதுகிறார். ஏனெனல், “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; தூயோராய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!’ (லேவியர் 19:2) என்று கடவுள் மோசேயிடம் குறியது அவர்களுக்குத் தெரியும். கடவுள் முன் தூயோராக இருப்பது என்பது இறைவழிபாட்டில் இரவும் பகலும் மூழ்கி இருப்பது என்பதல்ல. பிறரோடு உண்மை அன்பு கொண்டு வாழ்தல் ஆகும்.
மறைநூல் அறிஞர்களுக்கு அறிவுறுத்திய இயேசு நம்மையும் விட்டுவைக்கவில்லை, “மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை’ (யோவான் 5:41) என்று எச்சரிக்கிறார். ஆகவே. நம்மை கடவுளுக்கு நன்றாகத் தெரியும். அவரிடத்தில் அன்றைய மறைநூல் அறிஞர்களைப் போல் இரட்டை வேடம் போட முடியாது. ‘கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு திக்கு தாளம் எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்’ என்பதுபோல் வெளிவேடம் நிலைக்காது.
உண்மையில் கடவுள் மனிதர்களைப் படைத்தார், அவர்கள் பாவம் செய்வார்கள் மற்றும் கடவுளை விட்டு விலகுவார்கள் என்பது அவர் அறிந்த ஒன்று. ஏனெனில் எதுவும் அவரது பார்வைக்கு மறைவாக இருக்க முடியாது. ஆனாலும் அவர் மனிதனைப் படைத்த அவர் ஏற்கனவே மீட்பின் திட்டத்தையும் கொண்டிருந்தார், காத்திருந்தார். காலம் நிறைவேறியபோது மீட்புத் திட்டத்தை முழுமையாக அரங்கேற்ற அவர் மனுவுருவானார். இந்த இறையியலை எடுத்துரைக்கும் பவுல் நமக்கும் இறைத்தட்டத்தை தெளிவுப்படுத்துகிறார்.
இறைவேண்டல்.
எங்கள் மீட்பராக உலகில் மனுவுருவான இயேசுவே, நான் உம்மில் தூய சீடராக வாழவும், உமது மீட்புப் பணிக்குரியச் சீடராகத் திகழவும் என்னை ஏற்பீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452