வாழ்வுக்குப் புறத்தூய்மை அல்ல, அகத்தூய்மை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

15 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 28ஆம் வாரம் – செவ்வாய்

கலா 5: 1-6
லூக்கா 11: 37-41


வாழ்வுக்குப் புறத்தூய்மை அல்ல, அகத்தூய்மை!


முதல் வாசகம்.

அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரமாக்குவது நம்பிக்கை என்பதை இன்றைய முதல் வாசகத்தில்  பவுல் அடிகள் வலியுறுத்துகிறார். சட்டம் அடிமைப்படுத்தும் என்பது அவரது முதன்மையான படிப்பினையாக உள்ளது. ஏனெனில், பவுல் அடிகளைப் பொறுத்தமட்டில்  சட்டமும் நம்பிக்கையும் முற்றிலும் வேறானவை. எனவேதான் கலாத்தியருக்கு அவர் நம்பிக்கையின் மேன்மையை வலியுறுத்துகிறார். 
ஆம், கடவுள் இஸ்ரயேலருக்கு மோசே வழியாகக் கொடுத்த சட்டங்களை விட   அதற்கு முன்னதாக ஆபிரகாம் வழி தந்த வாக்குறுதியே பெரிதும்  மேன்மையானது  என்பதைச் சுட்டிக்காட்டுகிறோர். அந்த வாக்குறுதியே இயேசு என்பது பவுல் அடிகளின் இறுதியான, உறுதியான படிப்பினையாகக் கலாத்தியருக்குத் தெரியப்படுத்துகிறார்.
 
நற்செய்தி.

நற்செய்தியில் பரிசேயர் ஒருவர் இயேசுவை விருந்துக்கு அழைத்ததும், இயேசு அழைப்பை ஏற்று அவரது இல்லத்தில் உணவு உண்ண அமர்ந்தபோது பரிசேயரைப்போன்று இயேசு கைகளைக் கழுவாததைக் கண்டு அவர் ஆச்சரியப்படுக்கறார். ஏனெனில், உணவு உண்ணும் முன் கைகளைக் கழுவ வேண்டும் என்பது யூத பாரம்பரியம்.
இதைக் குறித்து அந்த பரிசேயர் இயேசுவிடம் வினவியிருக்கலாம் அல்லது வினவத் தயங்கியிருக்கலம். இயேசுவே பரிசேயரின் மனதில் தோன்றிய சந்தேகத்தைப் புரிந்துகொள்கிறார்.  இதனிமித்தம்,  இயேசு அவரிடம், “ நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயமையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.... உட்புறத்தில் உள்ளவற்றை தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும்” என்கிறார்.
   
சிந்தனைக்கு.
நற்செய்தயில் இயேசுவை தம் இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்த அந்த   பரிசேயர் இயேசுவின் போதனைகளைத்  தொழுகைக்கூடத்திலோ அல்லது வெளியிலோ கேட்டிருக்க வேண்டும். அவரது படிப்பினையால் கவரப்பட்ட அவர்,  மகிழ்ச்சியின் வெளிப்பாடாக அவரை  தம் இல்லதிற்கு அழைத்தார்.  
பல பரிசேயர்கள் அவரைத் தீர்த்துக்கட்ட வழிதேடும் போது, இந்த பரிசேயரோ பந்திக்கு அழைக்கிறார். எனவே, இயேசு அழைப்பை ஏற்று உணவருந்த அமர்ந்த வேளை,  அவர் தன் கைகளைக் கழுவவில்லை. அது பரிசேயருக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஒருவேளை, அந்த பரிசேயருக்கு ஒரு சிறப்பு போதனையை அளிக்க இயேசு இவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம். அதற்கொப்ப பரிசேயரின் வியப்பும் வெளிப்பட்டது.
ஏனெனில்   பரிசேயர்கள்  வெளிவேடக்காரர்கள் என்பது இயேசு அறிந்த ஒன்று.   வெளிப்புறச் செயல்கள் அல்ல உள்ளத்தின் தூய்மைக்கான செயல்களே மேன்மையாவை என்பதை இயேசு எடுத்துரைக்க வேண்டும் என்று எண்ணியிருக்கலாம். 
அந்தப்  பரிசேயர், பல பரிசேயர்களைப் போலவே பல்வேறு வெளிப்புற சடங்குகளில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். அவற்றுள் ஒன்றுதான் சாப்பிடுவதற்கு முன்பு கைகளைக் கழுவுதல். அவ்வாறு செய்வது அவருடைய தூய்மை மற்றும் கடவுளுடன் நெருக்கமாக இருப்பதற்கான அடையாளம் என்பது அவரது நம்பிக்கையாக இருக்க வேண்டும். மோசேயின் சட்டங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிப்பர். அவை நன்னெறி சட்டங்க்ள, சமூகச் சட்டங்க்ள மற்றும் திருச்சடங்கு சட்டங்கள். இவற்றில் கைகழுவுதல், திருச்சடங்கு சட்டங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.
அந்தப் 
பரிசேயரோ திருச்சட்டத்திற்கு அளித்த மதிப்பை மக்களுக்க்குக் கொடுக்கவில்லை. மற்றவர்களை இழிவாகப் பார்த்து தங்களை உயர்த்திக் கொள்பவர்கள்தான்  பரிசேயர்கள். இந்த, பரிசேயர்   வெளிப்புறத்தின் தூய்மையை மட்டும் பெரிதுப்படுத்துகிறார். அவர் தம்  அகத்தைப் பற்றி கவலைக்கொள்ளவில்லை. 
நமது   உள்ளம், நடத்தை, சொல், செயல் இவை அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும்.  தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர் (மத் 5:8) என்கிறார் இயேசு. கடவுளுக்கு நம்மைப் பற்றி ஒரு கனவு உண்டு. அது, நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் (எபே 1:4) வாழ வேண்டுமென்பதே. அவரது கனவுக்கு நாம் நம் வாழ்வால் உயிரூட்டுகையில் அவரே தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்பதே அவரது வாக்குறுதி. எனவேதான், இயேசு உள்ளத் தூய்மையை மிகவும் வலியுறுத்துகிறார்.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள் சட்டம் அடிமைப்படுத்தும் என்றும் அது நம்மை விடுவிக்காது என்றும் கூறுகிறார்.  ஆம், வெறும் விதிமுறைகளக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதில் பயன் ஏதுமில்லை என்பது பவுல் அடிகளின் படிப்பினையும் கூட. உண்மையில், தூய உள்ளத்தோர் கடவுளைக் காணத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அவர்களே கடவுளின் மறுவுரு என்றால் மிகையாகது.  
எனவேதான் உரோமையருக்கு எழுதிய மடலில், பவுல் அடிகள், ‘கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு’ (12:1) என்று வலியுறுத்தினார்.

ஆகவே, பரிசேயரைப்போலன்றி, உள்ளார்ந்த உள்ளத் தூய்மையைப் பேணிக்காப்பதில் அக்கறை கொள்வோம், வாழ்வுப் பெறுவோம்.

இறைவேண்டல்.

ஆண்டவரே! என் தூய உள்ளத்துக்குள்ளே வாழும்.  எனதுள்ளத்தைக் கறைபடுத்தி உம்மைக்  காயப்படுத்தாமல் வாழ எனக்கு  வரம் தாரும். ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452