குறைகள் மத்தியில் சகோதரத்துவம் தழைக்கட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

9 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 27ஆம் வாரம் – புதன்

கலா 2: 1-2, 7-14 
லூக்கா 11: 1-4

 
குறைகள் மத்தியில் சகோதரத்துவம் தழைக்கட்டும்!
 

முதல் வாசகம்.

திருஅவையில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதும் மறைவதும் இயல்பான ஒன்று என்பதற்கு இன்று நல்லதொரு எடுத்துக்காட்டு தரப்பட்டுள்ளது. புனித பேதுருவுடன்   கருத்து வேறுபாடு கண்டதை  பவுல் அடிகள் குறிப்பிட்டு கலாத்தியருக்கு எழுதுகிறார். 
முதல் வாசகத்தில், புனித பவுல் தனது வாழ்க்கைக் கதையில் சிலவற்றை கலாத்தியாவில் உள்ள சபையுடன் பகிர்ந்து கொள்கிறார், குறிப்பாக அவர் எவ்வாறு "புறவினத்தாருக்கு திருத்தூதர் " ஆனார் என்பதும்   பல வருட பணிக்குப் பின்  யாக்கோப்பு, பேதுரு  மற்றும் யோவான் உட்பட திருஅவை தலைவர்களை  சந்திக்க அவர் மீண்டும் எருசலேமுக்குச் சென்றதை விவரிக்கிறார்.  அடுத்து, .
பேதுரு ஒரு யூதர் என்பதால் புறவினத்தாருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது. ஆனால் பேதுரு ,  அந்தியோக்கியாவில்  இருந்தபோது,  எருசலேமில் இருந்து யூதக் கிறிஸ்தவர்கள்  வந்தபோது பேதுரு புறவினத்தாருடன் உணவருந்தவில்லை. ஆனால், யூதர்கள் இல்லாதபோது, பேதுரு புறவினத்தாருடன் உணவு உண்டார். இதைக் கேள்விப்பட்ட பவுல் அடிகள் பேதுருவின் இந்த இரட்டை வேடத்தை கண்டித்து வாக்குவாதம் புரிகிறார். இதனிமித்தம்,  இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு தலைத்தூக்கியது. 
  
நற்செய்தி.

நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் இறைவேண்டல் செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இயேசுவை கேட்கிறார்கள்.  அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்” என்று சொல்லிக்கொடுத்ததை லூக்கா விவரிக்கிறார்.

சிந்தனைக்கு.

பேதுரு மற்றும் பவுல் இருவரும் தொடக்கத் திருஅவையில் இரு தூண்களாகச் செயல்பட்டனர். இருவரும் இயேசுவின் திருவுடலில் துடிப்புள்ள உறுப்புகளாகத் திகழ்ந்தனர். ஆனாலும் அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு தோன்றியது. ஆனாலும்   பணி தொடர்ந்தது. உண்மையில் நாம் களமிறங்கி பணி செய்யும்போது கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு. ஆனால், அவற்றால் பணி தடைபடக்கூடாது. மன்னிப்பும், மன்னித்து  ஏற்றுலும் இன்றியமையாதப் பண்பாக நம் மத்தியில் நிலவ வேண்டும். இதற்காகவே, ஆண்டவர் இறைவேண்டல் ஒன்றை மாதிரியாகத் தருகிறார்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தந்தையாம் கடவுளை தன்  தந்தையாகப் பார்க்க வேண்டும்.  நாம் கடவுளின் குழந்தைகளாக நம்மைப் பார்ப்பதோடு,  நம்பிக்கையுடன் அவரை அணுக வேண்டும்.  அன்பான பெற்றோரைக் கொண்ட குழந்தை அந்த பெற்றோருக்கு பயப்படுவதில்லை.  மாறாக, குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் எந்த விடயத்திலும் தங்களை அன்பு செய்கிறார்க்ள  என்ற மிகப்பெரிய நம்பிக்கையைக் கொண்டிருப்பர்.    
அவ்வாறே, எதுவாக இருந்தாலும் கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்ற புரிதலுடன் பணியில் இறங்க வேண்டும்.   கடவுள் நம் தந்தை என்ற உணர்வு இன்றியமையாதது என்பதை இயேசு வலியுறுத்துகிறார். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், அது பெரும் போராட்டமாக நீடிக்கக்கூடாது. திருஅவையின் இரு பெரும் தூண்களான பேதுருவும் பவுலும் மோதிக்கொண்டார்கள். ஆனால், திருஅவை எனும் கட்டடம் பாதிக்கப்படவில்லை. ஆண்டவர் இட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பணியைத் தொடர்வதில் அக்கறைக் காட்டினர். 
ஒருவர் பொறை இருவர் நட்பு என்கிறது நாலடியார் ஆம், இரண்டு பேருக்கு நடுவே நட்பு நீடிக்க வேண்டுமானால் ஒருவர் பொறுமையாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் வரும். அப்போது ஒருவர் பொறுத்துப் போனால் தான் நட்பு தொடரும். விட்டுக்கொடுத்துப் பொறுத்துப்போகுதல் நமது வாழ்க்கை முறையாக இருத்தல் அவசியம். எனவேதான் ஆண்டவர், ‘எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும்’என்று  இறைவேண்டலில் தந்தையை நோக்கி இறைஞ்சுமாறு கேட்டுக்கொண்டர்.  

இறைவேண்டல்.

நாங்கள் ஒருவரையொருவர் மன்னித்து வாழ வேண்டும் என்று பணித்த ஆண்டவரே, மன்னிக்கும் பணியாளனாக நான் விளங்க என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்
 
 
ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452