பலவற்றைப் பற்றிய கவலையே நமது பலவீனம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
8 அக்டோபர் 2024, பொதுக்காலம் 27ஆம் வாரம் – செவ்வாய்
கலா 1: 13-24
லூக்கா 10: 38-42
பலவற்றைப் பற்றிய கவலையே நமது பலவீனம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள் இயேசுவால் அழைக்கப்படுவதுற்கு முன்பு இயேசுவை கடவுளின் மகன் என்று கூறியக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த முயன்றதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் அனுபவத்தைப் பெற்ற பிறகுதான் அவர் ஒளியைக் காணத் தொடங்கினார். எந்த மனித அறிவுரையும் தன்னை சரியான பாதையில் கொண்டு செல்லவில்லை என்று பவுல் பெருமையுடன் கூறுகிறார்; பவுலை அவர் பிறப்பதற்கு முன்பே அறிந்திருந்த கடவுளின் வெளிப்பாடு அது.
தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார் என்று உணர்ந்து இயேசுவின் புறவினத்தாருக்கான நற்செய்தி ஊழியரானார் என்று தம்மை வெளிப்படுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஓர் ஊருக்குச் செல்கின்றார். யோவான் நற்செய்தியில் அந்த ஊரின் பெய்ர பெத்தானியா என்று அறிகிறோம் ( யோவான் 11:1 ) அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும், சகோதரரான லாசரும் வாழ்ந்து வந்தனர். இயேசு அவ்வூருக்கு வந்தபோது, அங்கே ஒரு பெண் அவரைத் தம் வீட்டில் வரவேற்கின்றார். அவர் பெயர் மார்த்தா.
மார்த்தாவின் சகோதரியான மரியா வாட்டில், இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்க, மார்த்தாவோ பற்பல பணிகளில் மிகவும் பரபரப்பாக இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய சகோதரி தனக்கு ஒத்தாசை செயவில்லை என்றும் குறைபட்டுக் கொள்கின்றார். அப்போது இயேசு அவரிடம், “மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகின்றாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்கின்றார்.
மார்த்தாவோ, தன்னுடைய வீட்டிற்கு வந்த இயேசுவை நல்லவிதமாய் கவனிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். அது தேவைதான். ஆனால் அதைவிட முக்கியம் அவருடைய காலடியில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்பது. மரியா இயேசுவின் காலடி அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்டார். அதனால்தான் அவரை நல்ல பங்கைத் தேர்தெடுத்துக் கொண்டார் என்று இயேசு பாராட்டுகின்றார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களிலும், பவுல் மற்றும் மார்த்தா இருவரையும் பற்றி என்னைத் சிந்திக்க வைப்பது என்னவென்றால், அவர்கள் எது சரியோ அதைத் துணிவோடு தேர்ந்துக்கொண்டனர் என்பதாகும். தங்களைச் சுற்ற என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. அழைப்புக்கு ஏற்ற வாழ்வுக்கு அடிப்பணிந்தனர்.
இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்த மரியா நாம் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கியமான பணிக்கு ஒரு முன்மாதிரியாகிறார். சமைத்தல், சுத்தம் செய்தல், வேலை செய்தல், பொழுதுபோக்குதல் மற்றும் பிறரைப் பராமரிப்பது போன்ற பல அத்தியாவசியக் கடமைகளால் நாம் மூழ்கியிருந்தாலும், நாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்பதற்கான உன்னத நோக்கத்தை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்'' என்றார். அதற்கு இயேச, மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்கிறார்.
முதல் வாசகத்தில் பவுல் அடிகளும் இயேசுவைச் சந்தித்தப்பின் ஒரு நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டார் என்று அறிகிறோம். இன்று, வாழ்க்கையில் எது மிக முக்கியமானது என்பதைப் பற்றி சிந்திக்க அழைக்கப்ப்டுகிறோம். இவ்வுலகில் ஆயிரிமாயிரம் மக்கள் இருக்கையில் ஆண்டவர் நம்மைத் தேர்ந்துகொண்டார். (யோவான் 15:16) ஏனெனில் அவரது பார்வையில் நாம் சிறந்தவர்களாகக் கணப்பட்டோம்.
கடவுள் அளித்த ஞானத்தின் துணைகொண்டு சிறந்ததைத் தேர்வுச் செய்ய வேண்டும். இதற்கு, இறைவேண்டலுக்காகவும் இறைவனோடு சிறிது நேரத்தைச் செலவழிப்பதற்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். மார்த்தாளைப் போல கவனச்சிதறல்களுக்கு இடமளித்தால் எல்லாம் சிதறிப்போகும். ஆண்டவர் பாதத்தில் அமர்வதென்பது சிறிது நேரம் உலகப்பற்றைத் துறப்பது என்பாதாகும்.
உலகப் பற்று உள்ளத்தில் அலைமோதிக்கொண்டிருக்கும் போது, பரபரப்புக்கு இடமளிக்கும் போது, இறைப்பற்றும் அமைதியும் மறைந்துவிடும். பலவற்றைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் போது, இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்படுவோர் மத்தியில் நாமும் ஒருவராவோம்.
இறைவேண்டல்.
“என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்” என்றருளிய ஆண்டவரே, பரபரப்பு மிகு வாழ்வில் பலவற்றைப் பற்றி கவலைப்படும் என்னில் அமைதி நிலவச் செய்வீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452