இயேசுவின் திருப்பெயரால் தீமை வெல்வோம் | ஆர்.கே. சாமி | VeritasTamil

5 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 26ஆம் வாரம் – சனி

யோபு 42: 1-3, 5-6, 12-17
லூக்கா 10: 17-24


இயேசுவின் திருப்பெயரால் தீமை வெல்வோம்! 
 

முதல் வாசகம்.

இன்று நாம் யோபு எனும் ஞான நூலின் இறுதிப் பகுதிக்கு வருகிறோம்.  யோபு தனது குழப்பத்திற்கு விடை காண்கிறார். தனக்கு ஏன் துன்பம் என்ற கேள்விக்கு கடவுளிடமிருந்து நல் பதிலைப் பெற்று தெளிவடைகிறார். 
அவர் கடவுளுக்கு முன்பாகக் கொண்ட  மனத்தாழ்மை அல்லது தாழ்ச்சியின் ஆழம் வெளிப்படுகிறது.  மகத்தான துன்பங்களைச் சகித்துக் கொண்டு, சோதனைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிந்துணர்ந்தப் பிறகு, யோபு கடவுளின் இறையாண்மையையும் ஞானத்தையும் ஒப்புக்கொள்கிறார்.
தனிப்பட்ட மாற்றம்: 
கடவுளைச் சந்தித்த பிறகு, யோபு மனந்திரும்புதலையும் மனத்தாழ்மையையும் வெளிப்படுத்துகிறார், அவருடைய சொல்லிலும் செயலிலும் மாற்றத்தைக் காட்டுகிறார்.
மறுசீரமைப்பு மற்றும் ஆசீர்வாதம்: 
யோபின் மனந்திரும்புதலைத் தொடர்ந்து, கடவுள் அவரது வாழ்வை  மீட்டெடுக்கிறார், முன்பை விட அதிக செல்வத்தையும் அன்பான குடும்பத்தையும் அவருக்கு ஆசீர்வதிக்கிறார்.
நீண்ட ஆயுள்: யோபு நீண்ட ஆயுளைப் பெறுகிறார். இது அவரது பிற்காலங்களில் முழுமையையும் நிறைவையும் குறிக்கிறது.
 
நற்செய்தி.

நேற்றைய நற்செய்தியில், இயேசு எழுபத்திரண்டு சீடர்களை மறைத்தூதுப் பணிக்கு சில ஊர்களுக்கு அனுப்பினார் அல்லவா?  அவர்கள் திரும்பி வந்து இயேசுவோடு   பகிர்ந்ததை இன்று வாசிக்கிறோம். அவர்கள் உற்சாகமாகத் திரும்பி வந்து இயேசுவிடம், “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர். அதற்கு இயேசு, “சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுவதைக் கண்டேன். எல்லா ஆபத்துகளையும் வெல்லும் சக்தியை நான் உங்களுக்கு அளித்துள்ளேன், எதுவும் உங்களுக்கு தீங்கு செய்யாது. ஆனால் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிவதால் மகிழ்ச்சியாக இருக்காதீர்கள்; உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியாக இருங்கள் என்று திடப்படுத்துகிறார்.
அந்த நேரத்தில், இயேசு கடவுளைப் புகழ்ந்து, “தந்தையே, வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, உமக்கு நன்றி. நீங்கள் இந்த உண்மைகளை ஞானிகளிடமிருந்து மறைத்துவிட்டீர்கள், ஆனால் அவற்றை எளியவர்களுக்கு வெளிப்படுத்தினீர்கள்’ என்றும், ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றும்  தந்தையைப் புகழ்ந்தேற்றுகிறார்.  
பிறகு, தம்முடைய சீடர்களிடம் தனிமையில் பேசி, “நீங்கள் பார்ப்பதைக் காணும் உங்கள் கண்கள் பேறுபெற்றவை. பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் செய்வதைப் பார்க்கவும் கேட்கவும் விரும்பினர், ஆனால் அவர்களால் முடியவில்லை என்று நிறைவுச் செய்கிறார்.

சிந்தனைக்கு.

அன்று இயேசுவோடு இருந்த  சீடர்கள் அவரைப் (மெசியாவை)  பார்க்கும் பாக்கியம் பெற்றார்கள். பல இறைவாக்கினர்களும்  மன்னர்களும்  மெசியாவைப் பார்க்க விரும்பினர். அவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு சீடர்களுக்குக் கிடைத்தது. மேலும் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டியதாகக் கூறி அகமகிழ்கிறார்கள். அதிலும், தங்களுடைய கைகளால் ஆன வல்ல செயல்களையும் தீய ஆவிகள் தங்களுக்கு அடிபணிவதையும் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். ஒருவகையில் இயேசு ஆற்றிய  வல்ல செயல்களை இவர்களும் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறார்கள்.
இதற்கு இயேசு, அவர்களது மகிழ்ச்சியானது இங்கு அல்ல மாறாக, அவர்களது பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டுள்ளன என்பது குறித்து மகிழ வேண்டும் என்கிறார்.  
பல தருணங்களில் நமது வெற்றிக்குப் பின்னால் கடவுளின் கரம் இருப்பதை  நாம் எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறோம். ஆம். கடவுளின் அருளும் தயவுமின்றி   நம்மில் எதுவும் நிறைவேறாது. ‘நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது’ (யோவான் 15:5) என்பதை இயேசு அறிவுறுத்தியதை நாம் மறக்கலாகாது.
யோபுவும் இறுதியாகத்தான் கடவுளின் ஆற்றலைப் புரிந்துகொண்டார். எனவே, இறைவனின் அருளால் எல்லாம் நல்லவிதமாய் நடந்திருக்க நாம்தான் அதற்குக் காரணம் என்று தம்பட்டம் அடிக்கக் கூடாது. அது இயேசுவோடு கொண்ட சீடத்துவத்திற்கு அழகல்ல. ‘என்னால்தான் அந்தத் திட்டம்  வெற்றிபெற்றது. நான் இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்திருக்க முடியாது’ என்றெல்லாம் தப்பட்டம் அடிப்போர் இயேசுவின் சீடத்துவத்திற்குத் தகுதியற்றவர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 
இன்று நற்செய்தியில் உள்ள சீடர்களைப் போலவே நாமும் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்க முடியும் என்று நம்ப வேண்டும்.   ஏனென்றால் நாம் பலர் பார்க்க ஏங்கிய மெசியாவை நற்கருணையில் காண்கிறோம் தொடுக்கிறோம், சுவைக்கிறோம்.
எனவே, இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை, எல்லாம் அவரது தயவு என உணர்ந்து வாழவேண்டும்.   
 
இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, உமது தூய ஆவியின் வல்லமையால் நானும் எனது வாழ்நாளில்  உமது திருப்பெயரால் பலர் துன்பங்களைத் துடைக்கும் சீடனாக வாழ அருள்புரிய இறைஞ்சுகிறேன். ஆமென்.
 
ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452