நம்மை ஆய்ந்தறிந்தவரே நம் ஆண்டவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
4 அக்டோபர் 2024, பொதுக்காலம் 26ஆம் வாரம் – வெள்ளி
யோபு 38: 1, 12-21; 40: 3-4
லூக்கா 10: 13-16
நம்மை ஆய்ந்தறிந்தவரே நம் ஆண்டவர்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம், இறை ஞானத்தோடு ஒப்பிடும்போது மனித ஞானம் நிறைவற்றது என்பது வெளிப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஏன் தான் பெரும் துன்பத்திற்கு ஆளானார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் யோபுக்கு கடவுள் சவால் விடுகிறார். யோபிடம் எல்லாவற்றிற்கும் பதில்கள் இருக்கிறதா என்று கடவுள் கேட்கிறார்.
இன்று, யோபின் புலம்பலுக்குக் கடவுள் பதிலளிக்கிறார். அவருக்கு ஏன் பெரும் துன்பம் நேரிட்டது என்பதை ஆழந்துணர கடவுள் யோபுவிடம் தொடர்ச்சியான கேள்விகளை முன்வைக்கிறார். இறைத் திட்டங்கள் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவை என்பதை யோபு உணர வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
கடவுள் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. இன்றைய வாசகத்தின் இறுதியில், யோபுவைப் போன்ற ஒரு நல்ல மனிதர் ஏன் இத்தகைய துயரங்களைச் சந்தித்தார் என்பதை விளக்குமாறு கடவுளிடம் கேட்டிருக்கக் கூடாது என்று யோபு ஒப்புக்கொள்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், கலிலேயா கடலுக்கு வடக்கே உள்ள பகுதியில் நற்செய்தி பணியையும் குணப்படுத்தலையும் முடித்தப் பிறகு, இயேசு வழங்கிய நற்செய்தியை ஏற்கத் தவறியவர்களை இயேசு சந்திக்கிறார். இயேசுவையும் அவரை அனுப்பிய அவருடைய தந்தையையும் ஏற்றுக்கொள்ளாததன் மூலம், மக்கள் தீர், சீதோன் என்ற புறவினத்தார் நகரங்களை விட பொறுப்பற்றவர்களாகவும் பாவமுள்ளவர்களாகவும் இருந்தார்கள்.
எனவே, தீர், சீதோன் மக்களுக்கு முன்பே நற்செய்தி அறிவிக்கப்படிருந்தால், சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். ஆகவே, தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட நற்செய்தியைக் கேட்ட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என்று இயேசு மொழிகிறார். மேலும், மனமாறாத கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய் என்றும் சபிக்கிறார்.
சிந்தனைக்கு.
கடவுளின் திட்டமும் எண்ணங்களும் நமது அறிவையும் புரிதலையும் விட பெரியது அளவிட முடியாதது. நமக்குப் பல தருணங்களில் நாம் கேட்காமலேயே கடவுள் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார். ஆனாலும், சில நேரங்களில் கடவுள் ஏன் சில விரும்பத்தகாத விடயங்களை நடக்க அனுமதித்தார் என்று நாம் கடவுளிடம் கேள்வி கேட்பதுண்டு. நாம் யோபுவை விட வித்தியாசமானவர்கள் அல்ல. புரியாமையால் நாமும் கடவுளை நொந்துக்கொள்வதுண்டு.
திருப்பாடலில் கண்டதுபோல ஆண்டவர் நம்மை ஆய்ந்து அறிந்திருக்கிறார். அவர் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி வருகிறார் என்பதை நான் சிந்திக்க வேண்டும். நமது செயல்களும் நடவடிக்கைகளும் அவரது திருவிளத்தற்கு ஏற்ப அமையுமேயானால் நம்மில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.
நற்செய்தியில் மனமாறாத நகர மக்களை ஆண்டவர் சபிக்கிறார். அத்தகைய சாபம் நமக்கு ஏற்படா வண்ணம் நம்மைக் காத்துக் கொள்வது இன்றியமையாதது. கடவுள் நம்மில் என்ன விரும்புகிறார்? இயேசு சொல்வதைக் கேட்டு, அவர் நம்மில் எதை எதிர்பார்கிறார் என்பதை அறிந்துணர நம் செவிகளைத் திறக்க வேண்டும் என்பதாகும்.
ஆண்டவர் கூறுவதுபோல, நாம் யாருக்கு எதிராக பாவம் செய்தோமோ அதைக் குறித்த நமது மனம் வருந்தலுக்கான அடையாளமாக மன்னிப்பை நாட வேண்டும். நாம் நடப்பதையும் படுப்பதையும் அவர் அறிந்துள்ளார்; நம் வழிகள் எல்லாம் அவருக்குத் தெரிந்தவையே. ஆகவே, அவரில் ஒப்புரவாகுதல் நமக்கு வாழ்வாக மாறும்.
இறைவேண்டல்.
என்னை ஆய்ந்தறிந்துள்ள ஆண்டவரே, உமது திருவுளத்திற்கு அஞ்சி நடக்கும் வாழ்வு எனதாக இருக்க அருள்புரிய உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452