இறைப் பணிக்குத் துணிவும் உற்றத் துணை! | ஆர்.கே. சாமி | VeritasTamil
3 அக்டோபர் 2024, பொதுக்காலம் 26ஆம் வாரம் – வியாழன்
யோபு 19: 21-27
லூக்கா 10: 1-12
இறைப் பணிக்குத் துணிவும் உற்றத் துணை!
முதல் வாசகம்.
என்னைப் பொறுத்தவரை, இன்றைய வாகங்களின் மையக்கருத்தானது ‘நம்பிக்கை’ யாக உள்ளது. கடவுளின் பாதுகாப்பில் யோபின் நம்பிக்கை உயர்ந்துள்ளது வெளிப்படுக்கிறது.
யோபுவின் நண்பர்கள் அவர் செய்த பாவத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று யோபுவை தொடர்ந்து வற்புறுத்துகின்றனர். அவரது பாவங்கள்தான் யோபுவின் சொல்லொன்னா துன்பங்களுக்குக் காரணம் என வாதிடுகிறார்கள். யோபுவோ, அவர்களின் கருத்துக்களை நிராகரித்து, அவரது இழிநிலையின் மத்தியிலும் கடவுள் மீது கொண்ட அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
‘என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என்மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது. இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்?’என்று நண்பர்களோடு எதிர்வாதம் புரிகிறார். அத்துடன் விரைவில் அவர் கடவுளைச் சந்திக்க நேரிடும் என்று அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம் சீடர்களில் எழுபத்திரண்டு பேரைத் தேர்வுச் செய்து, அவர்களை ஊர்களுக்குள் சென்று, இயேசு செல்ல திட்டமிட்டுள்ள நகரங்களில் உள்ள மக்களை தயார்படுத்தப் பணிக்கிறார்.
அவர்களிடம் அறிவிக்க வேண்டிய நற்செய்தியைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் மற்றும் அவர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது கடவுள் அவர்களுக்குத் தேவையானதை வழங்குவார் என்று நம்ப வேண்டும். அவர்கள் தங்கள் வார்த்தைகள் வழியாகவும், இரக்கம் மற்றும் குணப்படுத்தும் செயல்கள் வாயிலாகவும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பது இயேசுவின் வேண்டுகோளாக இருந்தது.
நற்செய்தியைத் தாங்கிச் செல்லும் அவர்கள், எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், அவர்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது திரும்பிவிடும் என்றும் கூறுகிறார். மேலும், அன்றாட உணவுக்கு, மக்கள் அருளும் உணவை ஏற்று அந்த வீட்டிலேயே தங்கி போதிக்க வேண்டும். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவர் என்பதை வலியுறுத்துகிறார்.
அனைத்திற்கும் மேலாக, ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்’ என்றும் தம் சீடர்களை எச்சரிக்கிறார். நிறைவாக, சீடர்கள் செல்லும் ஊர்களில் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, ‘அவர்கள் கால்களில் ஒட்டியுள்ள அவர்களது ஊர்த் தூசியையும் அவர்களுக்கு எதிராக உதறிவிட வேண்டும் என்றும் பணிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த செய்தி, ஓநாய்களுக்கு நடுவே ஆட்டுக்குட்டிகளைப் போல் நம் ஆண்டவர் ஏன் தம் சீடர்களை அனுப்பினார்? என்பதாகும்? இங்கே "ஓநாய்கள்" என்று இயேசு குறிப்பிடுவது, அந்தக் காலத்தின் சில கொடூரமான சமய தலைவர்கள் எனலாம். ஒரு பழம் பாடலில் ‘காட்டிலுள்ள நரி ரொம்ப நல்லதுங்க உங்க நாட்டிலுள்ள நரி ரொம்ப பொல்லாதுங்க’ என்று நரியின் குணத்தை விவரித்து இரு வரிகள் எழுதப்பட்டது. நரி நம்பகத்தன்மையற்றது. அக்காலத்தில் நரிகளிடமிருந்தே தங்கள் ஆடுகளைப் பாதுகாத்து வந்தனர் இடையர்கள்.
முதல் வாசகத்தில் யோபுவின் வார்த்தைகளால் நாம் ஈர்க்கப்படுகிறோம். ஒரு ஏழை துன்புறுவது வேறு. நன்றாக, செல்வச் சீமானாக வாழ்ந்தவர் அனைத்தும் இழந்த நிலையில் நோயுற்ற உடம்போடு துன்புறுவது வேறு. தன்னை சூழ்ந்து நின்று அவரை மீது குற்றப்பழிகளைச் சுமத்தும் நண்பர்கள் மறுபுறம். ஆனாலும், யோபு மனந்தளரவில்லை.
'என் மீட்பர் வாழ்கின்றார்’ என்றும் இறுதியில் மண்மேல் எழுவார், தன்னை மீட்பார் என்றும் உறுதியோடு, தன் மீட்பர் வாழ்கின்றார் என்ற நம்பிக்கையை யோபு இழந்துவிடவில்லை. அவரது இறை அனுபவம் அவருக்கு மன வலிமையைத் தந்தது. இழித்துரைக்கும் நண்பர்களையும் மனைவயையும் அவர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.
யோபு கொண்ட மனநிலையும் உறுதிபாடும் தம் சீடர்களும் பெற வேண்டும் என்று இயேசு அவர்கள் அனுப்புகிறர். ஒன்றுமில்லாமையில் நிலைத்து நின்று நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதற்கு இயேசு அளிக்கும் பயிற்சியாக இது உள்ளது. மேலும், ‘வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்’ என்றும் சீடர்களை அறிவுறுத்துகிறார். ஆம், அக்காலத்தில், ஏழைகள் செல்வந்தர்களைக் கண்டால் (பண்ணையார்கள்) துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு குனிந்து வணக்கம் சொல்ல வேண்டும். இது அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் ஒர் செயலாக இருந்தது. இயேசுவின் சீடர்கள் உலகில் யாருக்கும் அடிமைகள் அல்ல என்பதை இயேசு எடுத்துரைக்கிறார்.
ஆகவே, இறைப்பணி செய்வோர் சாக்குப்போக்குகள் கூறி தப்பிக்க நினைப்பது வருந்த த்தக்கது. கடவுள் பக்கம் நின்றால், நமது தேவைகளை அவர் கவனித்துக்கொள்வர் என்ற எதிர்நோக்குச் சிந்தனை நமக்கு இன்றியமையாதது. நம்மைச் சுற்றியும் பல நரிகள் நடமாடுவதைக் கவனத்தில கொண்டு செயல்பட ஆண்டவர் அழைக்கிறார்.
இறைவேண்டல்.
ஓநாய்கள் மத்தியில் பணிக்கு உம் சீடர்களை அனுப்பிய ஆண்டவரே, அதே ஓநாய்கள் மத்தியில் நானும் இருப்பதால் எனக்குத் துணை நின்று காப்பீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452