கொண்ட கொள்கையில் நிலைத்திருப்பதே சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
இன்றைய இறை உணவு
1 அக்டோபர் 2024, பொதுக்காலம் 26ஆம் வாரம் –செவ்வாய்
யோபு 3: 1-4a, 11-17, 20-23
லூக்கா 9: 51-56
கொண்ட கொள்கையில் நிலைத்திருப்பதே சீடத்துவம்!
முதல் வாசகம்.
நாம் விரும்புவதுபோல் தம் வாழ்வு அமையாதபோது, கோபம் நம்மை ஆட்கொள்கிறது. நாம் மற்றவர்களைக் குறை கூற விரும்புகிறோம். இன்றைய வாசகம் இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளான யோபுவின் மனநிலையை நமக்கு எடுத்துரைக்கிறது. யோபு தாம் பிறந்த அந்த நாளையே சபிக்கிறார். நீதிமான் துன்புறலாமா?’ என்ற கேள்வியும் எழுகிறது.
யோபு தான் அனுபவித்த துயரங்களைச் சிந்தித்து குப்பை மேட்டில் அமர்ந்தவராக கலங்குகிறார். “ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண் மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே! அந்த நாள் இருளாகட்டும்’ என்று கதறுகிறார். அவரது சொல்லொன்ன துயரமும் துக்கமும் அவரை வாட்டுகிறது. அவர் இவ்வுலகைக் காணாது, கருப்பையிலேயே இறந்திருந்தால் மேல் என்று பிதற்றுகிறார்.
இத்துணை துன்பங்களுக்கு மத்தியிலும் அவர் கடவுளை சபிக்கவில்லை. ஆனால், தனக்கு நேரிட்ட பேரழிவு குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தமது இறுதி பாடுகள் நிறைந்த நாள்களை எருசலேமில் கழிக்க வேண்டியதால், அங்கு நோக்கி பயணிக்கும்போது, அவரும் அவருடைய சீடர்களும் சமாரியா வழியாகத் தெற்கு நோக்கிச் செல்கிறார்கள்.
அப்போது, சமாரியர்களால் வரவேற்கப்படாததைக் கண்டு, அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அதற்கு உடன்படாத இயேசு அவர்களைக் கடிந்துகொண்டதோடு, அங்கிருந்து வேறொரு ஊருக்குப்புறப்பட்டுப் போனார்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில் இயேசு எருசலேம் நோக்கிப் போகும் வழியில் அவர் சமாரியா ஊடே போகிறார். சமாரியர்களுக்கும் யூதர்களுக்கும் ஆகாது. ஆகவே, இயேசுவை ஏற்றக்கொள்ளத் தயங்குகிறார்கள். அதே வேளையில் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இயேசுவிடம் நல்ல பெயர் வாங்கும் பொருட்டு, 'சமாரியக் கிராமத்தின்மேல் வானத்திலிருந்து தீ விழுமாறு செய்யவா?' எனக் கேட்கின்றனர் அவரது சீடர்கள் யாக்கோபும் யோவானும். இயேசு அவர்களது எண்ணத்தைக் கண்டிப்பதோடு, ஏற்றுக்கொள்ளாதவர்களை எல்லாம் அழிக்க நினைப்பது மடமை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். நம்மை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு எனும் படிப்பினை இங்கே மேலோங்கி நிற்கிறது.
சமுதாயம் என்பது நாம் ஒருவர் மட்டுமல்ல. பலதரப்பட்ட எண்ணங்களும் சிந்தனைகளும் கொண்ட மக்களின் கூட்டடைப்பு. ஆக்க நினைக்கும் பலர் இருக்கையில் அழிக்க நினைக்கும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். எனவேதான் இயேசு தம் சீடர்களை அமைதிப்படுத்துகிறார். சமாரியாவிலேயே தமது பயணம் தடைபடக்கூடாது என்பதற்காக வேறொரு ஊருக்குப் பயணமாகிறார். ஒரு வழி அடைக்கப்பட்டால் மறு வழி தேடிப்போக வேண்டும். யோபு தன் பிறந்த நாளைச் சபிக்கத் தொடங்குகின்றார். எல்லாம் முடிந்துவிட்டதாகப் புலம்புகிறார்.
யோபு ஏன் இந்நிலக்கு ஆளானார் என்பதை கடவுள் அறிவார், அவர் அனுப்பிய சாத்தான் அறிவான். ஆனால்,யோபுக்கோ அது புரியாதப் புதிராக உள்ளது. ஆம், நம்மைப் படைத்த, அழைத்த கடவுள் நம்மை அறிவார். நம் கண்முன் மட்டும் இருப்பதைப் பார்க்கும்போது நாமும் யோபு போல, இயேசுவின் சீடர்கள்போல குறுகிய பார்வை கொண்டிருப்போம். பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுக்காண்பது என்பது எளிதல்ல. வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதுமில்லை. விடியலை நோக்கி நம்பிக்கையோடு பயணிப்பதே சாலச் சிறந்தது. ஆண்டவரை நம்புவோர் கெடுவதில்லை.
இயேசுவின் துன்பமும் மரணமும் நெருங்கி வரும்போது, தம்முடைய உயிரைக் கொடுப்பதன் மூலம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் இயேசு உறுதியாக இருந்தார். அதுபோல, துன்பங்கள் துயரங்களைக் கண்டு எண்ணத்தையும் செயலையும் மாற்றிக்கொள்ளாமல், யோபுவைப் போல கடவுளைத் திட்டித் தீர்க்காமல் இறுதிவரை அடையவிருக்கும் குறிக்கோளில் நிலைத்திருப்பது சிறப்பு.
இறைவேண்டல்.
அழிக்க நினைத்த சீடர்களுக்கு ஆக்கத்தைக் கொற்றுக்கொடுத்த ஆண்டவரே, கொண்ட கொள்கையில் மனந்தளரா வாழ்வு வாழந்திட என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452