தாழ்ச்சி இகழ்ச்சி அல்ல, கிறிஸ்துவில் மகிழ்ச்சி! | ஆர்.கே. சாமி | VeritasTamil
21 மே 2024
பொதுக்காலம் 7ஆம் வாரம் - செவ்வாய்
யாக்கோபு திருமுகம் 4: 1-10
மாற்கு 9: 30-37
முதல் வாசகம்.
தாழ்ச்சி, பணிவு என்பது இன்றைய வாசகங்களில் வலியுறுத்தலாக உள்ளது. முதல் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு கடவுளின் முன்பாக நமது தாழ்ச்சி இன்றியமையாததொன்று என்பதை அறிவுறுத்துகிறார், மேலும் தாழ்ச்சி அணிகலனாய் கொள்வோரை கடவுள் உயர்த்துவார் என்கிறார்.
தொடர்ந்து, கிறிஸ்தவர்களுக்கிடையில சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமாக இருப்பவற்றை பட்டியலிட்டும் காட்டுகிறார். அவற்றுள் சிற்றின்ப நாட்டங்கள் முதன்மை இடத்தைப் பெறுகின்றது. அடுத்து, ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள் என்று நமக்குள் நிகழும் சண்டை சச்சரவுகளுக்கான அடிப்படை காரணங்களையும் அடுக்குகிறார்.
மேலும், தீய எண்ணத்தோடு கேட்பதால்தான் கடவுள் நமது விண்ணப்பங்களை நிறைவேற்றுவதில்லை என்கிறார். அடுத்து, நாம் உலகத்திற்கும் கடவுளுக்கும் நிறைவாகப் பணி செய்ய இயலாது என்கிறார். உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார் என்பது யாக்கோப்பின் படிப்பினையாகத் தரப்படுகிறது.
கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள் என்றும் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறும் யாக்கோபு, நிறைவாக ‘ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்’ என்று முடிக்கிறார்...
நற்செய்தி.
நற்செய்தியில் இயேசு, அவரது சீடர்களகளில் எவராவது முதலாவதாக இருக்க விரும்பினால், தன்னைக் கடைசியாக எண்ணி, அனைவருக்கும் பணியாளனாகச் செயல்பட வேண்டும் என்ற படிப்பினையைத் தருகிறார்.
நற்செய்தியில், இயேசுவும் அவருடைய சீடர்களும் கலிலேயா வழியாகப் பயணம் செய்கிறார்கள். ஆனால் இயேசு அப்பயணத்தை இரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார். அப்போது, அவர் “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று நடக்கவிருப்பதை முன்மொழிகிறார். சீடர்களுக்கு அவர் அவ்வாறு கூறுவதன் பொருள் புரியவில்லை, ஆனாலும் அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சுகிறார்கள.
அவர்கள் தொடர்ந்து கப்பர்நாகூமுக்கு வருகிறார்கள். இயேசு தம் சீடர்களிடம் அவர்கள் வழி பயணத்தின் போது என்ன விவாதித்தார்கள் என்று கேட்க, சீடர்கள் தங்களில் யார் பெரியவர் என்று விவாதித்துக் கொண்டிருந்ததால் அதை இயேசுவிடம் வெளிப்படுத்தத் தங்கினார்கள். அச்சூழலை இயேசு பயன்படுத்திக்கொண்டு, தாழ்ச்சியுடன் மற்றவர்களுக்குச் சேவை செய்தால் உண்மையான மாட்சிக்கு வாய்ப்புண்டு என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கிறார். “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்கதை சீடர்களுக்கான தனித்துவம் பெற்ற போதனையாக இயேசு எடுத்தியம்புகிறார்.
நிறைவாக, ஒரு சிறு பிள்ளையை அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றுரைத்து, தாழ்ச்சியுன் மகத்துவத்தை எடுத்துரைக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் இயேசு அவருடைய சீடர்களுடன் கலிலேயா வழியாகப் பயணம் செய்யும்போது, பயணம் ஊர் மக்களுக்குத் தெரியாமல் இருக்க விரும்புகிறார். ஏனெனில், இயேசு தமக்கு நேரிடவிருக்கும் பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி தனது சீடர்களோடு பகிர்வதில் கவனம் செலுத்தியதே இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது
இங்கே மூன்று தருணங்களை நாம் அறிய வருகிறோம். முதலில், அவர்கள் பயணம் செய்யும் போது; இரண்டாவதாக, அவர்கள் கப்பர்நாகூமுக்கு வந்து ஒரு வீட்டிற்குள் நுழைந்தபோது; மூன்றாவது, இயேசு ஒரு குழந்தையை அழைத்து எடுத்துகாட்டாகக் காட்டியபோது.
மேற்கண்டவாறு, பல வழிகளில், நம்முடைய ஆண்டவர் நமக்கும் தனிப்பட்ட வகையில் கற்பிக்கிறார் என்றால் மிகையாகாது. இன்று நம்மில் பலருக்கு இயேசுவோடு தனித்திருக்கவும், அவரோடு பயணிக்கவும் நேரம் இல்லை. ஆதலால் அவரது செய்தியைக் கேட்டோ, வாசித்தோ கிரகிக்க முடிவதில்லை. முதல் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கூறியதைப்போல் நாம் உலகத்திற்கும் கடவுளுக்கும் நிறைவாகப் பணி செய்ய இயலாது. ஆனால் அப்படி வாழத்தான் முயல்கிறோம்.
கப்பர்நாகூமுக்கான பயணத்தின் போது, இயேசு மிகவும் நேரடியாகவும் எந்த உவமையும் பயன்படுத்தாமல் சீடர்களுக்குப் போதித்தார். தனிமையில் சீடர்களோடு உரையாட, அவர் மக்கள் கூட்டத்தை அன்று தவிர்த்தார். எனவே, சில தருணங்களில் அவரோடு தனிமையில் உரையாடி உறவாடுவது சீடத்துவ வாழ்வுக்கு ஆறுதலாக அமையும் என்பதுத் தெளிவாகிறது.
அடுத்து, இன்றைய நற்செய்தியில் இயேசு மற்றொரு முக்கிய செய்தியைச் சீடர்களுக்கு அளிக்கிறார். அவர், அவர்களைப் பார்த்து, அவர்கள் முதலிடங்களை நாடுவதற்குப் பதிலாக ''அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும்'' மாற வேண்டும் என்கிறார். முதல் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபுவின் போதனை இயேசுவின் இந்த படிப்பினையையொட்டி அமைகிறது. அதுதான் தாழ்ச்சி.
நம் சமூகத்தில் சிறு பிள்ளைகளின் சொல்லுக்கு மதிப்பிருக்காது. அது சிறு பிள்ளை அதற்கு என்ன தெரியும் என்று ஒதுக்கிவிடுவோம். சிறுபிள்ளைகளுக்கு உரிமைகள் கிடையாது; ஆக, சமுதாயத்தில் கடைநிலையில் இருக்கும் 'சிறு பிள்ளைகள் போல நாம் நம்மைத் தாழ்த்திக்கொள்வோமானால், கடவுள் நம்மை உயர்நிலைக்கு உயர்த்துவார் என்பது வெளிடைமலை. செருக்குற்றோரை அவர் சிதறடிப்பார் என்று அன்னை மரியாவின் பாடலில் அறிகிறோம் (லூக்கா 1:53-55).
இறுதி இராவுணவு வேளையில் அதே தாழ்ச்சி என்ற பண்பைச் செயல்வழி பாடமாக தம் சீடர்களுக்கு செய்து காட்டினார். தாமே தமது சீடர்களின் பாதங்களை கழுவி நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களை கழுவும் அளவிற்கு தாழ்ந்து பணி செய்யுங்கள் என்று வலியுறுத்தி காண்பித்தார். அத்தோடு, தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். ஆம், தாழ்ந்து பிறரன்பு பணி செய்வோரே இன்று திருஅவைக்குத் தேவை. பகட்டும், அதிகாரமும், ஆணவமும் திருஅவைக்கு ஒவ்வாது. கானானியப் பெண்ணின் தாழ்ச்சி இயேசுவையும் சீடர்களையும் அன்று வியக்க வைத்தது (மாற் 7:24-30). போல, நமது தாழ்ச்சி ஆண்டவரை வியக்க வைக்குமா?
“நீரின் ஓட்டமெல்லாம் தாழ்வான நிலம் நோக்கியே இருப்பதுபோல, திருஅவையில் நமது சீடத்துவம் தாழ்ந்து பிறரன்பு பணியில் நாட்டம் கொள்ள வேண்டும். தாழ்ச்சியுள்ள மனதை வளர்த்துக்கொள்ள அவமானங்களையும் தாங்க வேண்டியிருக்கும் என்பதை மறுக்க இயலாது. அத்தகைய அவமானத்தை இயேசு கிறிஸ்துவைப் பொருட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் நமது அனைத்து பக்தி முயற்சிகளும், ஏன், வழிபாடும் வீண்.
இகழ்ச்சியை தாழ்ச்சியாக ஏற்க வேண்டும். தாழ்ச்சியை இகழ்ச்சியாக எண்ணக் கூடாது. நாம் ஏற்கும் தாழ்ச்சியினால் நமக்கு கிட்டக்கூடியது அமைதி, மகிழ்வு மற்றும் நிறைவு என்பதை மனதில் கொள்வோம்.
நிறைவாக, இயேசு இவ்வுலகிற்கு உணர்த்திய பொன் மொழிகளில் ஒன்று, “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்பதாகும் (மாற்கு 9:35). தொண்டு என்பது பொதுமக்களுக்கு தன்னலமின்றி, பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யப்படும் சேவைகள். அதற்கு கூலி தொண்டர்களின் மனமகிழ்ச்சி ஒன்று தான். மாறாக, பட்டமும் பதவிகளும் அல்ல.
இறைவேண்டல்.
உம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்ற ஆண்டவரே, எந்நாளும் நான் தாழ்ச்சியை அணிகலனாக அணிந்து வாழ அருள்புரிவீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452