பாலைநிலம் பயிர்நிலமாகும் அவரால்.... | ஆர்.கே. சாமி | VeritasTamil

12 மார்ச்  2024                                                                                          

தவக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் 

எசேக்கியேல்  47: 1-9, 12                                                                                               

யோவான் 5: 1-3a, 5-16
 
முதல் வாசகம்

 எசேக்கியேல் இறைவாக்கினர் ஆழ்ந்த இறைப்பற்றும் கற்பனை வளமும் கொண்டிருந்தவர்.   எழுச்சிமிகு தம் எண்ணங்கள் பலவற்றைக் காட்சிகளின் வடிவில் எடுத்துரைப்பதில் எசேக்கியேல் கைத்தேர்ந்தவர். 

இவர் எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனியச் சிறையிருப்பின் போதும் இறைவாக்கினராக பணியேற்றிருந்தார்.   இவர் கண்ட காட்சிகளில் ஒன்றுதான் இன்றைய முதல் வாசகம். யூதர்கள் மக்கள் பாபிலோனுக்கு  நாடு கடத்தப்பட்டபோது எருசலேம் ஆலயமும் பாபிலோனியர்களால் முற்றாக அழிக்கப்படுகிறது. அதுவரை இஸ்ரயேலருக்கு அது  கடவுளின் உன்னத உறைவிடமாகத் தகிழ்ந்தது. அவர்கள் பாபிலோனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டபோது,  அவர்களுடைய கடவுளும் நகரை விட்டு வெளியேறினார் என்பது யூதர்களின் நம்பிக்கை.


எசேக்கியேலின் காட்சி : 

1. முதல் வாசகம், எசேக்கியேல் இறைவக்கினர் கண்ட காட்சியில்   ஆண்டவரின் 
ஆலயத்திலிருந்து தண்ணீர் பாய்வதைக் காண்கிறார். நீர் துளித் துளியாகத் தொடங்கி, படிப்படியாக நதியாக உருவாகிறது.  அடுத்து, அக்காட்சியில் எசேக்கியேல்  ஆலயத்தின் நுழைவாயிலுக்கு   கொண்டுவரப்பட்டார். ஆலயமோ கிழக்கு நோக்கி இருந்தது.  ஆலய வாசலுக்கு அடியில் இருந்து கிழக்கு நோக்கி தண்ணீர் பாய்ந்தது.  

2.தண்ணீர் செல்லும் திசை: 

ஆலயத்தின்  வலதுபுறம், பலிபீடத்திற்கு தெற்கே பாய்ந்த தண்ணீர்,  பின்னர் கிழக்கு நோக்கி தொடர்ந்து, இறுதியாக  அதன் ஒரு பகுதி  வடக்கு வாயிலுக்கும் பாய்கிறது.

3.தண்ணீரை அளவிடுதல்: 

எசேக்கியேல் நீரின் வழியே செல்லும்போது ஒரு வானதூதர் தோன்றி,  பல்வேறு இடங்களில் நீரின் ஆழத்தை அளவிடுகிறார். ஆரம்பத்தில், தண்ணீர் கணுக்கால் ஆழம், பின்னர் முழங்கால் ஆழம், பின்னர் இடுப்பு ஆழம். கடைசியில் அது நீச்சலடிக்காமல் கடக்க முடியாத நதியாகிறது.

4.நீரின் முக்கியத்துவம்:

5.காட்சியில் வரும் தண்ணீர்:
காட்சியில் வரும் தண்ணீர்   உயிரைக் கொடுக்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் குணங்களைக் குறிக்கிறது. சிறுக சிறுக நீரின் ஆழம் அதிகரிப்பது எருசலேமின் வளத்தையும் குறிக்கிறது. இது ஆலயத்தில் இருந்து  பாய்கிறது என்பது ஆலயத்தில் மீண்டும்  கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்துவாக உள்ளது.  

6.பலன்தரும் சுற்றுப்புறங்கள்: 

ஆற்றின் கரையோரத்தில், எசேக்கியேல் பல மரங்களைப் பார்க்கிறார், மேலும் அந்தக் காட்சியில் நதியின் நீர் அரபாவில்  கடலில் கலந்து  அக்கடலைப் புதியதாக்குகிறது என்பதை  எசேக்கியேல் விவரிக்கிறார்.  நீரின் இந்த புதுப்பித்தலானது,  நிலத்திற்கு உயிர் கொடுக்கிறது. ஆற்றங்கரையோரம் உள்ள மரங்கள் மாதந்தோறும் புதிய பழங்களைத் தருவதாகவும், அவற்றின் இலைகள் என்றும்  வாடுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
 

நற்செய்தி: 

இந்நற்செய்தி, எருசலேமில் உள்ள ஐந்து மண்டபங்கள் கொண்ட பெத்சதா என்ற பெயல் கொண்ட குளத்தின் அருகே 38 ஆண்டுகளாக நோயுற்றிருந்த ஒருவரை இயேசு குணப்படுத்திய நிகழ்வை  விவரிக்கிறது. இது யோவான் நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடும் நிகழ்வாகும்.

1.வாசகத்தின் அமைவு: 

எருசலேமில் யூதர்களின் திருவிழா ஒன்று கொண்டாடப்பட்ட வேளையில்,  இயேசு  அங்குள்ள  ஆட்டு வாயிலுக்கு  அருகில் உள்ள  குளத்திற்குச் செல்கிறார்.   ஐந்து குளங்கள் கொண்ட அந்த இடத்தின் பெயர் பெத்சதா.  இங்கே, வழக்கமாக   பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்  படுத்துக்கிடப்பர் என்று வாசகம் விவரிக்கிறது. 

2.நோய்வாய்ப்பட்டவர்: 

பாதிக்கப்பட்டவர்களில், 38 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட ஒருவரும் இருந்தார். அவர் அங்கே படுத்திருப்பதைக் கவனித்த இயேசு, அவரிடம் “நலம் பெற விரும்புகிறீரா?” என்று கேட்டார். 

3.மனிதனின் பதில்:

அவரோ, “ஆம்” என்று பதில் சொல்லாமல் “ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான்  போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று வெகுகாலம் தன்னில் இருந்த மனக்குமுறலை வெளிப்படுத்தினார். 

யூதர் நம்பிக்கை : 

அக்குளத்தில் தண்ணீர் கலங்கும்போது யார் முதலில் குதிக்கிறாரோ, அவர்  குணமடைவார்  என்பது யூதர்களின் நம்பிக்கை.    

கால் முடமானவர் : 

இயேசு அந்த மனிதன் மீது இரக்கம் கொள்கிறார். எழுந்து, படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்குமாறு அறிவுறுத்தினார். அதிசயமாக, அந்த மனிதன் உடனடியாக குணமடைந்து, தன் பாயை எடுத்துக்கொண்டு நடந்தான். பின்னர் அங்கே ஓய்வுநாள் சர்ச்சை எழுகிறது. 

 
சிந்தனைக்கு :

இன்றைய நற்செய்தி வாசகத்தில்,  இயேசு உடல்நலமற்றிருந்த ஒருவரிடம் “நலம்பெற விரும்புகிறீரா?” என்று கேட்கிறார். நலமற்ற மனிதரிடம் நலம்பெற வேண்டும் என்னும் விருப்பம், ஆர்வம், அதற்கேற்ற நம்பிக்கை இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தப் பின்னரே, அந்த மனிதரைக் குணமாக்க முன் வருகிறார்.  நாம் நலம் பெற விரும்புகிறோம் என்பதை ஆண்டவர் அறிந்தவர்.  இருப்பினும் நாம் பொறுமையோடும் நம்பிக்கையோடும் காத்திருக்கும் வேளையில் அவரே நலமளிக்க முன்வருவார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஆம் அண்டு டிசம்பர் 26-ம் திகதி, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த சுனாமியை நாம் மறந்திருக்கமாட்டோம். நீரினால் பெரு அழிவு ஏற்பட்டது. தொடக்க நூலில் நோவா பெருவெள்ளத்தைப் பற்றியும் வாசிக்கிறோம். இங்கேயும் அழிவு ஏற்பட்டது. நீரினால் அழிவு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், நீரினால் வாழ்வும் உண்டு என்று நமக்கு இன்றைய வாசகங்கள் நினைவூட்டுகின்றன.

நீர் நமது வாழ்வைப் புனிதப்படுத்தி  நமக்கு ‘உயிர்'   கொடுக்க வல்லது என்பதை இந்த தவக்காலத்தில் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.  

திருமுழுக்கின்போது,  பயன்படுத்தப்படும் இந்த அத்தியாவசியமான பொருளான நீரை ஆண்டவர் இயேசு தேர்ந்தெடுத்துள்ளார். திருமுழுக்கின் வழியாக   "நீருக்குள் மூழ்கி"  அதாவது,  நாம் மரணத்தில் "மூழ்கிறோம்". நாம் நமது ஆதி பெற்றோரின் சென்ம  பாவத்தில் மரிக்கிறோம்.  இயேசு அனுபவித்த மரணத்துடன் ஒன்றித்து,  புதிய வாழ்வுக்கு  உயிர்த்த ஆண்டவருடன்  உயர்த்தப்படுகிறோம். இதை நாம் உணராவிட்டால், இந்த தவக்காலம் வீணாகக் கடந்து போய்விடும். 

நாம் நமது தவக்காலப் பயணத்தைத் தொடரும்போது, நாம் பெற்ற திருமுழுக்கைப்  பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். நாம் யாருக்காவது ஞானப் பெற்றோராகப் பொறுப்பேற்றிருந்தால்  மறந்துபோன கடமைகளைப் புதுப்பித்து அவர்களைச் சந்திக்க முயற்சிக்க   வேண்டும்.  

முதல் வாசகத்தில் எசேக்கியேல் இறைவாக்கினரின் காட்சியில் இருந்த சிறு  நீரோடை பின்னர் நதியாக மாறி பல உயிரினங்களுக்கு வாழ்வளித்தது. அவ்வாறே,  இயேசுவும்  மக்களோடு மக்களாக யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்று தம் பணிவாழ்வைத் தொடங்கி பலரின் நல்வாழ்வுக்கும் இன்று நமது வாழ்வுக்கும் வழி அமைத்தார். அவரது குணமளிப்பு நமக்கு இன்றியமையாதது. நமது துன்பத் துயரங்களிலும் அவர் நம்மை சோதித்தறிய விழைகிறார். உமது திருவுளப்படி எனக்கு ஆகட்டும் என்றோமானால் நலம் பெறுவோம். 

இறைவேண்டல் : 


அன்று யோர்தான் ஆற்றில்  தனியே உமது  திருமுழுக்கைப் பெறாமல் மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்ற ஆண்டவரே, நான் பெற்ற திருமுழுக்கால், என்னைச் சுற்றியுள்ள மக்களனைவரும் பலன் பெற என்னை பயன்படுத்துவீராக. ஆமென்

 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

Joseph SV (not verified), Mar 12 2024 - 1:13pm
Peace to all, my humble request, kindly change the Tamil words with bold (darker) n bigger size font. Its hard to read in mobile version n eye pain with bright wording.