நம்மில் பெருந்தன்மை பெருகட்டும்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

27 ஜூலை 2024 
பொதுக்காலம் 16 ஆம் வாரம் - சனி

எரேமியா  7: 1-11
மத்தேயு  13: 24-30

நம்மில் பெருந்தன்மை பெருகட்டும்!

முதல் வாசகம். 

இவ்வாசகத்தில்  இறைவாக்கினர் எரேமியா, வழிபாட்டிலும் அன்றாட வாழ்விலும்  இரைட்டை வேடம் போடும் மக்களை  கடவுள் சார்பாகக் கண்டிக்கிறார்.  ஆலயத்தில்   பக்தியுடன் செயல்படுகிறார்கள் ஆனால்,  வெளியில் எல்லா வித தீயச் செயல்கைளயும் செய்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். 
உண்மையில் கோவிலில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் கடவுளின் உடனிருப்பை அனுபவிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்றும்,   கோவிலில் இருந்தாலும் சரி, கோயிலுக்கு வெளியே இருந்தாலும் சரி, தீய செயல்களைத் தொடர்ந்து செய்தால், கோவிலில் கடவுளின் உடனிருப்பை மக்கள் அனுபவிக்க முடியாது என்றும், அத்தகைய வழிபாடு பயனற்றது  என்றும்  அறிவுறுத்துகிறார். 

நற்செய்தி.

நேற்று விதைவிதைப்பவர் உவமையை ஆண்டவர் நம்மோடு பகிரந்துகொண்டார். இன்று வயலை உவமையாகக் கொண்டு  பேசுகிறார். வயலில் தோன்றும்  களைகளை  மையப்படுத்திப் போதிக்கிறார். இந்த உவமையில், நிலத்தின் உரிமையாளர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய பணியாள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போகிறான்  
எனவே, பயிரும் களைகளும் ஒன்றோடு ஒன்றாக வளர்கின்றன. அறுவடையின் போது,  பணியாள்கள் உரிமையாளரிடம் வந்து,   `ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், `இது பகைவனுடைய வேலை' என்று கூறுகிறார்.  
பகைவருடைய வேளை என்பதால் பணியாளர்கள், உரிமையாளரிடம் உடனே  களைகளை முதலில் பிடுங்கிப்போட அனுமதி கேட்டார்கள்.  உரிமையாளரோ,  அவரது ஆலோசனையாக, வேண்டாம் என்று தடுக்கிறார். ஏனெனில், பணியாள்கள்   களைகளைப் பறிக்கும்போது ஒருவேளை நல்ல பயிரையும் பறித்துவிடும் அபாயம் ஏற்படும் அல்லவா? எனவே,  இப்போது பிடுங்க வேண்டாம்' என்கிறார்.  எனவே,  அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று கூறுவேன்' என்று அறிவுரையாகக் கூறினார். 

சிந்தனைக்கு. 

ஆக்கப் பொறுத்தவன் ஆறப்பொறுக்கனும் என்பார்கள். இன்றைய நற்செய்தி இந்தப் பழமொழிக்குப் பொறுதுதமாக உள்ளது. இந்த உவமையில் இயேசு கையாளும் சில முக்கிய பொருள்களை நாம் அடையாளம் காண வேண்டும். வயல் என்பது  இந்த உலகம், அதில் நல்ல விதைகளை விதைப்பவர் கடவுள். அதே வேளையில் அதில் களைகளை விதைப்பதோ சாத்தான். அறுவடை என்பது உலக முடிவைக் குறிக்கிறதாக பொருள் கொள்ளலாம். 
அறுவடையின் இறுதியில் நல்லவை களஞ்சியத்திலும், களைகள் தீயிலிட்டு சுட்டெரிக்கப்படுவதும் நல்லவர் விண்ணகம் செல்வதையும், தீயவர்கள் நரகம் செல்வதையும் குறித்துக்காட்டுகிறார் ஆண்டவர்.
அதாதவது, நமது இந்த மண்ணாக வாழ்வு எப்படி இருக்கிறதோ, அதைப் பொறுத்துதான் நமது இறப்புக்குப் பின்னான வாழ்வு இருக்கும் என்பதையும் இந்த உவமையின் வழி தெளிவுப்படுத்துகிறார் ஆண்டவர்.  
மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? (யோபு 7:1) நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் நமது வாழ்வு ஒரு போராட்ட வாழ்வாக உள்ளது. இறைவாக்கினர் எரேமியா கூறுவதைப்போல், கோயிலில் ஒரு வாழ்வு, வெளியில் ஒரு வாழ்வு என்பது பழகிப்போன ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் தவறாமல் நற்கருணை ஏற்கும் நம்மிலும் ‘களைகள்’ மலிந்துள்ளன. இதனை ஆண்டவர் அறிவார். ஆனால், அவரது இரக்கத்தால் அவரது ஆசீரைத் தொடர்ந்து பெறுகிறோம். 
நாம் கடவுளின் இல்லமான ஆலயத்தில்  இருக்கும்போது மட்டும்  ‘புனிதர்களாக'  இருக்க நினைக்கிறோம். இது கேடு விளைவிக்கும்.  கடவுளின் இல்லத்தில் கடைப்பிடிக்கும் புனிதத்தை நாம்  இல்லங்களுக்கும் பணி இடங்களுக்கும்  எடுத்துச் செல்ல வேண்டும்.  அதே புனிதத்தை அண்டை அயலாரோடு பகிர வேண்டும். அதுவே இறையரசுக்கான வாழ்வு.
'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது இரட்டை வாழ்வு.  பொதுவாக நாம்   பிறரிடம் உள்ள குறைகளை வெகு எளிதில் கண்டு கொள்கிறோம். ஆனால், நம் குறைகள் பல உள்ளன என்பதை நாம் அறிகின்றோமில்லை. எனவே, அவசரப்பட்டு பிறரை தீயவர்கள் என்று விலக்கி வைப்பதோ அல்லது உறவிலிருந்துப் பிரிவதோ தவறு. ஒரு   நல்ல சீடராக, தீயோரின் மனமாற்றத்திற்கு கால அவகாசம் நல்க வேண்டும். அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதோடு, பொறுமை காக்க வேண்டும் என்கிறார் ஆண்டவர். 

இறைவேண்டல்.

அறுவடை வரை, பயிரையும் களையையும் வளர விடுங்கள் என்றுரைத்த ஆண்டவரே, என்னில் தழைக்கும் தீயனவற்றை நான் அடையாளம் கண்டு, அவற்றால் நான் என் மதிப்பை இழந்துவிடாமல் என்னைக் காத்தருள்வீராக. ஆமென்.

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452

Comments

Theresa (not verified), Jul 27 2024 - 2:26am
Miga arumaiyaana vilakkam.
Vaazhkaikku saarnthathe
Theresa (not verified), Jul 27 2024 - 2:26am
Miga arumaiyaana vilakkam.
Vaazhkaikku saarnthathe