குழந்தையுள்ளம் மேதையின் அறிவுத்திறனிலும் பெரிது! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil
17 ஜூலை 2024
பொதுக்காலம் 15 ஆம் வாரம் - புதன்
எசாயா 10: 5-7, 13-16
மத்தேயு 11: 25-27
குழந்தையுள்ளம் மேதையின் அறிவுத்திறனிலும் பெரிது!
முதல் வாசகம்.
சில சமயங்களில் இன்றைய முதல் வாசகம் சற்று குழப்பமாகத் தோன்றலாம். எடுத்துக்காட்டாக, தன் மக்களாக இஸ்ரயேலரை அழைத்தக் கடவுள் அவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார். இஸ்ரயேலரைத் தாக்கிக் கைப்பற்ற ஆசீரிய அரசைத் தூண்டுகிறார். இஸ்ரயேலரின் கீழ்ப்படியாமைக்கும் சிலைவழிபாட்டிற்கும் இந்தத் தண்டனயைக் கடவுள் அனுமதிக்கப் போகிறார் என்று எசாயா இஸ்ரயேலருக்கு அறிவிக்கறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தனது தந்தையோடு கொண்ட உறவைப் போற்றுகிறார். தந்தையாம் கடவுள் தம் ஞானத்தின் வெளிப்பாட்டை உலகின் புத்திசாலிகளுக்கு - தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களுக்கு அல்ல, மாறாக, குழந்தை போன்ற எளியவர்களுக்கே விண்ணரைச் பற்றிய மறைபொருளை வெளிப்படுத்துகிறார் என்றுரைக்கிறார்.
தொடர்ந்து இயேசு மற்றொரு உண்மையையும் பகிர்கிறார். கடவுளின் மகனான இயேசுவிடமே எல்லாவற்றையும் தந்தை ஒப்படடைத்துள்ளார் என்றும், தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார் என்றும் , மகனும் அவர் யாருக்குத் தந்தையை வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் என்றுமு கூறிகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில் இயேசு, தந்தை இறைவனுக்கு இறைபுகழ் கூறும் இனிய பகுதியைக் காண்கிறோம். . இறைபுகழ்ச்சி என்பது நம் அனைவரின் வாழ்விலும் தவறாது இடம்பெற வேண்டிய ஒன்று. இயேசு நமக்கு அதன் மாதிரியாகத் திகழ்கிறார்.
நாம் எவ்வளவு உயர்ந்த கல்வி அறிவுப் பெற்றிருந்தாலும் கடவுளின் திட்டத்தையும் ஞானத்தையும் நம்மில் எவராலும் அறிந்துணர முடியாது. அதற்கான கொடை நமக்கு அருளப்படவில்லை. மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டது. கடவுளை வெளிப்படுத்த இவ்வுலகில் மனுவுருவானவர்தான் ஆண்டவராகிய இயேசு. அவர் கடவுளின் அருளடையாளம். இயேசுவும் அவரது அறிவாற்றலால் மக்களை ஈர்க்க வரவில்லை. மாறாக, அன்பான கடவுளுடன் நெருங்கிய ஒன்றிப்புக்கு மக்களை அழைக்கவே அவர் வந்தார்.
முதல் வாசகத்தில் கடவுளின் அன்பை வெளிப்படுத்தும் எசாயா, இஸ்ரயேல் மக்களைத் திருத்தி நல்வழிப்படுத்தவே கடவுள் அவர்களை அசீரியர்களிடம் ஒப்படைக்க விழைந்ததாகக் கூறுகிறார். ஆம் கடவுளின் அரிய நெஞ்சில் ஒரு துளி நஞ்சும் இல்லை. ஆவர் பழிக்குப் பழி வாங்குபவருமில்லை. நமது நன்மைக்காகவே நம்மால் தாங்கக் கூடிய துனபங்களை மட்டுமே அனுமதிக்கிறார். அவர் இரக்கமுள்ளவர். எனவேதான், இயேசு. தந்தையின் இரக்கத்தை முன்வைத்து, ‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’ (லூக்கா 6:36) என்று தந்தைக்குச் சாட்சியம் பகர்கிறார்.
இயேசு வாழ்ந்த காலத்திற்கு நாம் சற்று பின்னோக்கி நகர்ந்தால் பரிசேயர், மறைநூல் அறிஞர், சதுசேயர் தாங்களே சிறந்த அறிவாற்றலைக் கொண்டவர்கள் என்ற எண்ணத்தில பாமர மக்களை வதைத்தனர். அதே சூழல்தான் இன்றும் நம்மில் நிலவுகிறது. ‘எனக்கு எல்லாம் தெரியும்' என்ற மமதையில் அடுத்திருப்பவரைத் தாழ்த்திப் பேசுபவர் அதிகம்.
நமக்கு அருளப்பட்ட அனைத்துக் கொடைகளுக்கும், திறன்களுக்கும் இறைபுகழ் கூற வேண்டும். நற்செய்தியின் தொடக்கத்தில் இயேசுவின் இறைப்புகழை கேட்டோம். அவர் நமக்கு ஒரு முன்மாதிரியைத் தந்துள்ளார். ‘எல்லாப் புகழும் மாட்சியும் தந்தைக்கே’ என்று வாயார, மனதார கூறுவோமானால், நாளுக்கு நாள் நமது தன்முனைப்பு (ego) குறையும். சிறந்த சீடத்துவத்திற்கு இப்பண்பு இன்றியமையாதது.
‘உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அவரவருக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த நம்பிக்கையின் அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் தம்மை மதித்துக் கொள்ளட்டும்’ என்ற பவுல் அடிகளின் கூற்றை நினைவில் கொள்வோம். (உரோ 12:3)
இறைவேண்டல்.
இரக்கத்தின் ஊற்றாகிய என் ஆண்டவரே, என்னில் புதைந்துள்ள ‘நான்' என்ற அகந்தை நாளுக்கு நாள் தேய்ந்து உமது ஊழியனாக, உமது தயவில் வாழும் சீடனாகத் திகழும் வரமருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452