ஆயனில்லா ஆடுகளுக்கு ஆயனாவோம்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

09 ஜூலை 2024 
பொதுக்காலம் 14 ஆம் வாரம் - செவ்வாய்

ஓசேயா 8: 4-7, 11-13                                                                   
மத்தேயு  9: 32-38


 ஆயனில்லா ஆடுகளுக்கு ஆயனாவோம்!


முதல் வாசகம்.

இன்றைய வாசகங்கள்   கடவுள் யார் என்பதைப் பற்றிய நமது புரிதலைத் தெளிவுப்படுத்துகிறது. இறைவாக்கினர் ஓசேயா  தனது மனைவி கோமரின் துரோகத்தை அனுபவித்தார். அவளது பிரமாணிக்கமற்ற வாழ்வு  அவருக்கு எவ்வளவு வலியை ஏற்படுத்தியது என்பதை அவர் அறிவார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட கடவுளின் மனதை அவர் தனது மன நிலையை முன்வைத்து இறைவாக்குரைக்கிறார்.    

கோமரின்  பிரமாணிக்கமற்ற குடும்ப மணபோல், இஸ்ரயேலரும்  அந்நிய தெய்வங்களின்  சிலைகளை வழிபட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.  மக்கள் செய்ததைக் கடவுள் மறந்துவிடமாட்டார், அவர்களிடம்  கணக்குக் கேட்பார் என்றாலும், ஓசியா கோமரை நேசிப்பதைவிட  கடவுள் தம் பிரமாணிக்கமற்ற  மக்களை அன்பு செய்கிறார்  என்று ஓசேயா கடவுளின் ஆழமாக, பிரமாணிக்கமான, நிலையான அன்பை  விவிக்கிறார்.
 
 
நற்செய்தி.


நற்செய்தியில், பேய் பிடித்திருந்ததால்  பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவரை  பேயின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க இயேசு அன்பினால் தூண்டப்பட்டார்.  பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். இந்நிகழ்வைக்   கண்ணுற்ற பாமர மக்களில் பலர், “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்று சாட்சியம் பகர்ந்தனர். 

ஆனால், பரிசேயகளோ இயேசுவின் செயலை ஏற்க முடியாமல், “இவன் பேய்களின் தலைவனைக் (பெயல் செபூலை) கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்று உண்மைக்குப் புறம்பாகப் பேசினர்.   இயேசுவோ பேய்களின் தலைவன் எப்படி தன் இனத்தை விரட்டுவான்' என்று எதிர் கேள்வி எழுப்பினார். இதனால் பேய்களுக்கிடையில் பிளவு ஏற்படுமே என்றார்.

பின்னர், இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்து, தொழுகைக்கூடங்களில் கற்பித்தார் என்றும், நோயுற்றோரைக் குணப்படுத்தியதோடு, தொடர்ந்து  விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார் என்றும் மத்தேயு குறிப்பிடுகிறார். அவ்வேளையில், பாமர மக்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டதைக் கண்டு,  நிறைவாக  “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றுரைத்தார்,


சிந்தனைக்கு.

 
நாளுக்கு நாள் கடவுளுடனான நமது உறவை வளர்ப்பதில் பல விடயங்கள் நமக்குத் தடையாக இருக்கின்றன என்றால் மறுப்பாரில்லை.  சில சமயங்களில் நாமே அத்தடைகளுக்குக் காரணமாகிறோம்.    சில நேரங்களில் மற்றவர்கள் நம்மை கடவுளிடம் நெருங்க விடாமல் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.  கடவுளுடனான நம் உறவில் நெருங்கி வருவதைத் தடுக்கும் எதையும் ஆண்டவர் இயேசு உடைக்க விரும்புகிறார்.  ஆனால், அவருக்குத் தேவை நமது ஒத்துழைப்பு.  

முதல் வாசகத்தில் ஓசேயா தன் மனைவியை நல்வழிப்படுத்த முயன்றும் தோல்வி கண்டார். அவருடன் அவள் ஒத்துழைக்கவில்லை. பழைய வாழ்வை விட்டொழிக்க அவளால் முடியவில்லை. மனமாறியிருந்தாள் அவளுக்கு புதுவாழ்வு கிடைத்திருக்கும்.  

நமக்கு இயேசு மட்டுமே நல்லாயன். நம்மை பசும்புல் மேய்ச்சலுக்கும் நீர்நிலைகளுக்கும் கூட்டிச் செல்பவர். இயேசுவை எள்ளவும் நம்பாத பரிசேயர்களாக நாம் இருந்தால், ‘கிறிஸ்தவர்' என்ற அடைமொழி பொருளற்றதாகவிடும். ‘நிலையாய் உனை நினைத்தால், நான் மலையாய் உயர்வடைவேன்’ என்று மனதில் உறுதிக்கொண்டு வாழ்ந்தால், துன்புறும் பலருக்கு நாமும் ஆயனாகவும் தன்னலம் துறந்தப் பணியாளர்களாகவும்  வாழ ஆண்டவர் வழி காட்டுவார்.
நற்செய்தியில், இயேசு ஊர் ஊராக நடந்து சென்று, ஒவ்வொருவராக சந்திக்கும் போது, அவரால், அவர்களின் இதயங்களை, துன்பங்களை, மனநிலையைப்  பார்க்க முடிந்தது. பலர்     கைவிடப்பட்டவர்களாக, ஆதரவற்றவர்களாக காணப்பட்டனர்.  அவர்களின்  பிரச்சனையை நீக்கி, அவர்களில் நம்பிக்கையொளி வீசச்  செய்கிறார்.   அப்போது    பாமர மக்களின் நற்பணிக்குத்  தங்களைக் கையளிக்கும் பணியாளர்களின்  பற்றாக்குறை இருப்பதை அவர் உணர்கிறார். 
அன்றும் இன்றும் நற்செய்திப் பணிக்கு உலகமெங்கும்  பணியாளர்கள் தேவை. பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்ந்தால் விண்ணக அரசுக்கான  பணி முடங்கிவிடும். ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரான கடவுளிடம்  மன்றாடுங்கள்” என்று ஆண்டவர் அன்றே தம் சீடர்களைப் பணித்தார். எனவே,  இயேசுவின் அழைப்பிற்கேற்ப இறையழைத்தலுக்காகவும் ஒவ்வொரு நாளும் மன்றாடுவோம்.


இறைவேண்டுதல்.

என் மேய்ப்பரான ஆண்டவரே, நீர்  எல்லா மக்களையும் மிகுந்த ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் தேடிச் சென்றதைப்போல்   நானும்  உமது மேய்ப்புப்பணியில் ஆர்வத்தோடு ஈடுபட என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452