திருத்தப்பட விரும்புவோமா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

 பொதுக்காலம், வாரம் 4 புதன்
மு.வா: 2 சாமு: 24: 2,9-17
ப.பா: திபா 32: 1-2. 5. 6. 7
ந.வ: மாற்: 6: 1-6

ஒரு ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள ஒரு மாணவியை எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பார். குறிப்பாக அவருடைய கையெழுத்து மிக மோசமாக இருந்ததால் அவர் எழுதியவற்றை சில சமயங்களில் கிழித்துவிடுவார்.பல சமயங்களில் எழுத்து திருந்த வேண்டும் என்பதற்காக அடிக்கவும் செய்வார். இதனால் அம்மாணவிக்கு அந்த ஆசிரியரைப் பிடிக்காது. பள்ளிப் படிப்பு முடிந்து,கல்லூரியில் சேர்ந்தார் அம்மாணவி. கல்லூரியில் நடைபெற்ற கையெழுத்துப் போட்டியில் அம்மாணவி சேர நேர்ந்தது. அவ்வாறு போட்டியில் சேர்ந்த மாணவி முதல் பரிசும் பெற்றார். ஆச்சரியத்தில் மூழ்கிய அம்மாணவி அப்போது தான் தன் ஆசிரியரை நினைவு கூர்ந்தார். தன்னுடைய கையெழுத்து முதல் பரிசு பெறுமளவிற்கு உருமாறியது என்றால் அது அந்த ஆசிரியரால்தான் என்பதை உணர்ந்து கொண்டார். அப்போதுதான் அவ்வாசிரியர் தன்மீது கொண்டிருந்த அன்பையும் அக்கறையையும் அவர் மனது புரிந்து கொண்டது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில்  இயேசு தம் சொந்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையைக் காண்கிறோம். இயேசு தம் போதனைகள் வழியாக தவறைச் சுட்டிக் காட்டி மனமாற்றத்திற்கு அழைத்தார். அவர் கூறியவை தமக்கு நன்மை பயக்கும் என எண்ணாமல் அவருடைய குடும்பப் பிண்ணணியை சுட்டிக்காட்டி அவரை ஏற்க மறுக்கிறார்கள் அவருடைய சொந்த ஊர் மக்கள். நாமும் பல சமயங்களில் மற்றவர்கள் நம்மைக் கண்டித்துத் திருத்த முற்படும் போது அவர்களை ஏற்றுக்கொள்ளாமல்,அவர்களுடைய பிண்ணணி என்னவென்பதை ஆராயத் தொடங்குகிறோம். இப்படிப்பட்ட மனநிலையை அகற்ற இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

இறைவேண்டல்
எங்களை நல்வழிப் படுத்துபவரே இறைவா! எம்மீது அக்கறை கொண்டு அன்போடு எம்மைக் கண்டித்துத் திருத்துபவர்களிடம் உம்மைக் காணவும்,அவர்களின் பிண்ணணியை ஆராயாமல் அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி எம் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்