உண்மை சீடத்துவம் போலிகளைப் புறக்கணிக்கும் ! | ஆர்.கே. சாமி | VeritasTamil

31 டிசம்பர்  2025 -செவ்வாய்                                                                                   கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 7ஆம் நாள்  


1யோவான் 2: 18-21
யோவான் 1: 1-18

உண்மை சீடத்துவம் போலிகளைப் புறக்கணிக்கும் !  

முதல் வாசகம்.

கடவுளின் முடிவில்லா வார்த்தையான இயேசு மனுவுருவானதால், நாம் வாழ்வும்,   கடவுளோடான நெருக்கமான உறவும் பெற்றுள்ளோம்  என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. இன்றைய இரு வாசகங்களும் யோவானின் படைப்புகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் வாசகத்தில், கடவுளின் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்ற போர்வையில் போலிகள் வந்திருக்கிறார்கள், தொடர்ந்து வருவார்கள் என்ற உண்மையை தனது வாசகர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று யோவான் விரும்புகிறார்.  இந்த நபர்கள் தாங்கள் தான் கடவுளின் உண்மையான தூதர்கள் என்று கூறுவார்கள் என்றும்   இவர்களே எதிர்க் கிறிஸ்துகள் என்றும் யோவான் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல என்று வலியுறுத்தி தம் சமூகத்தினர் இவர்களை விட்டு விலகி இருக்க வேண்டுகிறார்.   
நிறைவாக, கிறிஸ்தவச் சமூகம் தூயவரால் அருள்பொழிவு இறைமக்கள் என்றும், இவர்கள்  அறிவு எனும் கொடையைப் பெற்றவரகள் என்றும், அவர்கள்   உண்மை-பொய் இரண்டையும் வேறுபடுத்தி அறியும் ஆற்றல் உள்ளவர்கள் என்றும் புகழாரம் சூட்டுகிறார். 

நற்செய்தி.

நற்செய்தியில், யோவான் இயேசு மனுவுருவானதை ஓர் இறைவெளிப்பாடாகவும் நமக்கான இறையியலாகவும் விவரிக்க  ‘வாக்கைப்’ பயன்படுத்துகிறார்.  இயேசு தொடக்கத்திலிருந்தே கடவுளுடன் இருந்த வாக்கு என  எடுத்தியம்புகிறார். 
வாக்கு என்னும் இயேசு தொடக்கத்திலே இருந்தார், அவர் கடவுளோடு கடவுளாகவும் இருந்தார். அப்படிப்பட்டவர் வானத்திலே உறைந்துகொண்டிருக்கவில்லை. மாறாக மனுவுரு எடுத்து நம்மைப் போன்று ஆனார்  என்ற  பேருண்மையை வெளிப்படுத்துகிறார்.   யோவான், வாழ்வின் ஊற்றாகிய, வாழ்வளிக்கும் வாக்காகிய இயேசு கடவுளோடே இருந்துவிட வில்லை. அவர் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து மக்களுக்கு வாழ்வினைத் தந்தார் என்ற இறையியல் உண்மையை நம்மோடு பகிர்கிறார். 
 
சிந்தனைக்கு.

யோவானின் நற்செய்தியும் அவரது பிற படைப்புகளும்  என்னை  எப்பொழுதும் ஆழமாக சிந்திக்கத் தூண்டும். ஏனெனில், யோவான் கடவுளுடனான உறவைப் பற்றிய அழகான புரிதலைக் கொடுக்க வல்லவர்.   இன்றைய நற்செய்தியில்  அவர் மிகவும் வலியுறுத்திக் கூறும்   சொற்றொடர்  “அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது” என்பதாகும்.  
ஆம், மனுவுருவான இயேசுவில் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது”. மேலும்,  வாக்கு என்னும் இயேசு படைப்புக்கு முன்னதாகவே  இருந்தார். அவர் படைப்புகளைப்போல் உண்டாக்கப்பட்டவர் அல்ல என்பதை யோவான் வலியுறுத்துகிறார்.  இதற்கு,  அவர் கடவுளோடு கடவுளாகவும் இருந்தார் என்கிறார்.   அப்படிப்பட்டவர் வானத்திலே உறைந்துகொண்டிருக்கவில்லை. மாறாக மறுவுரு எடுத்து நம்மைப் போன்று ஆனார். அது மட்டுமல்லாமல் வாழ்வை, அதுவும் நிறைவாழ்வை நமக்குக் கொடையாகத் தந்தார் என்கிறார்.
கடவுள் நம்முடன் நெருங்கிய வழியில் வாழ்வதற்காக வந்துள்ளார், தம் வாழ்க்கையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், அதனால் நாம் கடவுளின் தெய்வீக வாழ்க்கையில் பங்கு பெற முடியும் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறார். 
 
முதல் வாசகத்தில், யோவான் இயேசு கிறிஸ்துவை ஏற்காதவர்களை ‘எதிர் கிறிஸ்தவர்கள்’ என்று குறிப்பிடுகிறார்.  அவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள். இவர்கள் இருவகைப்படுவர்.  
1.    மெசியா (கிறிஸ்து) போல் நடிக்கும்  போலி போதகர்கள். 
2.    கிறிஸ்துவுக்கும் அவரது பணிக்கும் எதிராக செயல்படும் மக்கள்.  

உண்மையில் வாக்காக இருந்த ஆண்டவர் மனுவுருவனார், நம்மிடையே குடிகொண்டுள்ளார் என்பதை நாம்   உண்மையாக ஏற்போமானால், நம் மத்தியில் உலாவரும் போலிகளை அடையாளம் காண வேண்டும்.  இது நம்மால் முடியாத காரியம் அல்ல. வெளுத்தது எல்லாம் பால் என என்னும் மூடர்களாக இனியும் நாம் இருத்தல் ஆகாது. இயேசுவை ஏற்றுக்கொண்டோருக்கு அவர்கள் கடவுளின் பிள்ளைகள் ஆகும் ஆற்றல் அளித்துள்ளார். நமக்கு அந்த ஆற்றல் உண்டு என்று நம்பி செயல்படுவோம். 
இறைவாக்கினர்கள், குணமளிப்பவர்கள், புதுமைகள் ஆற்றுபவர்கள் மற்றும், கிறிஸ்துவால் அனுப்பப்பட்டவர்கள் என்று, பணத்திற்காக, தங்களையே புகழ்ந்து அறிவித்துக்கொண்டிருப்பவர்கள் குறித்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் அழிவுக்கு வழி காட்டுபவர்கள். பின் வாசல் வழியாக நுழையும் திருடர்கள் போன்றவர்கள்.
இருள் ஒளியை வெல்வது போல் சிறிது நேரம் தோன்றினாலும், இறுதியில், ஒளி ஒளிரும்.   போலிகளின்  பேச்சாற்றலாலும், அங்கும் இங்குமாக மன்னம் செய்து கொண்ட இறைவார்த்தைகளாலும் மக்களைக் கவர நினைக்கும் போலிகள் குறித்து யோவான் நம்மை எச்சரிக்கிறார். ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ எனும் பழமொழிக்கொப்ப போலிகளை அடையாளம் கண்டு  விலகினால், வாழ்வு பெறுவோம்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, எம்மை மீட்க மனுவுருவானவரே, உமது தூய ஆவியாரின் வல்லமையால் என் கண்களை ஒளிரச் செய்வீராக.  இதனால் இருளின் ஏமாற்றமும்  போலி வாக்குறுதிகளும் என்னை தீண்டாதபடி எனக்கு அரணாகவும் கேடயமாகவும் இருப்பீராக.  ஆமென்.
 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 012 228 5452