அறுவடைக்கு அரப்பணிக்கும் சீடத்துவம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் முதல் வாரம் - சனி
எசாயா: 30: 19-21, 23-26
லூக்கா 9: 35- 10: 1, 6-8
அறுவடைக்கு அரப்பணிக்கும் சீடத்துவம்!
முதல் வாசகம்.
இந்நூல் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் தென் நாடாம் யூதேயா வலிமை மிக்க அண்டை நாடான அசீரியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. இதற்குக் காரணம் யூதர்களின் கீழ்ப்படியாமை எனலாம். அவர்கள் யாவே கடவுளைப் புறக்கணித்து, அவருக்குப் பணியாது செய்த பாவங்களே முதன்மை காரணங்கள்.
இச்சூழலில், யூத தூதர்கள் இப்போது அசீரியாவுக்கு எதிராக உதவி தேடுவதற்காக எகிப்துக்குச் சென்று கொண்டிருந்தனர் (எசாயா 30:2-6) இப்படியாக யூதர்கள் கடவுளை விட அடுத்திருந்த அரசரின் உதவியை நாடினர். இவ்வாறு, எருசலேம் பிடிவாதமாக யாவே கடவுளை விட்டு விலகி வாழ்ந்தனர். அந்நிய சக்தியை நம்பினர்.
எனவே, ஏசாயா தீர்க்கதரிசி யாவே கடவுளைவிட, எகிப்தை நம்பியிருப்பதை கண்டிக்கிறார்.
அவர்களது நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும் என்ற வாக்குறுதியை அளிக்கிறார். கடவுள் அவர்தம் மக்களுக்கு ஏராளமான ஆசீர்வாதங்களை அளிப்பார் என்பதை வளமான அறுவடை, செழிப்பான நிலம் போன்ற உருவகங்கள் வழி எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி
நற்செய்தியில் நாம் இயேசுவை மக்கள் மத்தியில் பார்க்கிறோம். சில சமயங்களில் அவருக்கு உண்பதற்குக் கூட நேரமில்லை (மாற்கு 6:31).தேடி வருவோரின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய அவருக்குப் பகலில் போதுமான நேரமும் கிடைப்பதில்லை. இந்தச் சூழலில், இயேசு தம்முடைய நெருங்கிய சீடர்களுக்கு அவருடைய ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார். அறுவடை ஏராளமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவு (மத் 9:37). உதவி செய்ய பலர் தேவைப்படும் வேளையில் சிலரே இந்த அழுத்தமான பணிக்கு அர்ப்பணித்துள்ளனர் என்கிறார்.
எனவே, இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
சிந்தனைக்கு.
இயேசுவின் இதயத்தின் ஆழத்திலிருந்து அவருடைய சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. சீடரை நோக்கி, ““அறுவடையோ மிகுதி; வேலையாள்களோ குறைவு.
ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார். (மத் 9:38). அந்தக் குரல் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த அறுவடைப் பணி முதலில் இஸ்ரயேல் மக்களின் நடுவிலும், பின்னர் பிற இனத்தார் நடுவிலும் நிகழ வேண்டும் என்பது இயேசுவின் எதிர்ப்பார்ப்பு. மேலும், பன்னிருவரைப் பணியாளர்களாக அனுப்பியபோது இயேசு, ''கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்'' என்றதை நினைவில் கொள்வோம்.
மேலும், இயேசு ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்” என்று அன்று சீடர்களுக்குக் கூறியதை இன்று நமக்கும் கூறுகிறார். இந்தப்பணிகள் அனைத்தும் இலவசமாக நாம் அளிக்க வேண்டும் என்பது இயேசு முன்வைத்த நிபந்தனையாக உள்ளது.
வான தூதரின் மங்கள வார்த்தை அறிவிப்பில், அன்னை மரியா கடவுளுடைய வார்த்தையை ஏற்று கடவுளின் மீட்புப் பணிக்கு ஒத்துழைப்பு நல்க முன்வந்தார். ‘அப்படியே ஆகட்டும்' என்றார். அவரும் பெற்ற ஆசீருக்கு ஏற்ப மீட்பரை யாதொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் மீட்பரை உலகிற்கு அளித்தார்.
இயேசுவைப் பின்செல்ல அழைக்கப்பட்ட நாமும் கொடைகள் பல பெற்றுள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை. நாம் பெற்ற திருமுழுக்கும் கடவுள் அளித்த கொடைகளில் மிகப் பெரிய அருள்சாதன கொடை எனலாம். எனவே, “அறுவடையோ மிகுதி; வேலையாள்களோ குறைவு எனும் இயேசுவின் ஏக்கத்தைத் தீர்க்கும் பணியாளர்களாக நாம் முன்வர வேண்டும். நாம் வெறும் பக்கதர்களாக இருந்து காலத்தைக் கழிக்க திருமுழுக்குப் பெற்றவர்கள் அல்ல.
சீடர்கள் என்பது திருஅவையில் உயர் பதவியில் அமர்வதற்கானதும் அல்ல. மாறாக அது பணிக்குரியது என்பதனை இயேசுவின் இறுதி இரா விருந்தில் அவர் தன் சீடர்களின் பாதங்களை கழுவியதன் வழியாக நினைவூட்டினார். பிறர் அன்புபப் பணிக்கே இறைவன் நம்மையும் அழைக்கிறார். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விரும்பம். ஆனால் ஒருநாள் அவருக்குக் கணக்குக் காட்ட வேண்டும்.
இப்பணி அருள்பொழிவுப் பெற்ற அருள்பணியாளர்கள், அருட்சசோதர சகோதரிகள், போன்ற மற்றவர்களுக்கானது என்று நினைப்பது எளிது. ஆனால், கடவுள் நம்மை மிகவும் மகிமையான வழிகளில் பயன்படுத்த விரும்புகிறார். கடவுள் நம்மிடமிருந்து விரும்பும் பணி, புனிதர்களைப் போலவே உண்மையானது மற்றும் முக்கியமானது. இன்று, நாம் மற்றொருவருக்கு கிறிஸ்துவாக இருக்கும்படியான இந்த அற்புதமான மகிமையான அழைப்பைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இந்த அன்பின் பணிக்கான அழைப்பை உணர்ந்து ஏற்றுக்கொண்டால், நாமும் வாழ்வுப் பெறுவோம்.
இறைவேண்டல்.
‘அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு’ என்றுரைத்த ஆண்டவரே, உமது அழைப்பை ஏற்று நான் பெற்றதை இலவசமாக பிறரோடு பகிர்ந்து வாழும் மனதை தந்தருள உம்மை இறைஞ்சுகிறேன்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452