வெளிவேடத்தின் வெகுமதி வாழ்வல்ல, சாபம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

இன்றைய இறை உணவு
26 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 21 ஆம் வாரம் -திங்கள் 
2 தெச  1: 1-5, 11b-12
மத்தேயு   23: 13-22

 
வெளிவேடத்தின் வெகுமதி வாழ்வல்ல, சாபம்!


முதல் வாசகம்.

 
இவ்வாரத்தின் முதல் மூன்று நாள்களுக்கு பவுல் அடிகள் தெசலோனிக்கத் திருஅவைக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து முதல் வாசகங்களைக் கேட்கிறோம்.  தெசலோனிக்கத் திருஅவை புனித பவுலின் குழந்தை எனலாம.  அவர்  தெசலோனிக்கர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.   துன்புறுத்தலின் மத்தியிலும், ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதில் தெசலோனிக்கக் கிறிஸ்தவர்கள் தளரா நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் ஒன்றிதிருப்பதற்காக   அவர் அவர்களைப் பாராட்டுகிறார்.  பவுல் அவர்களுக்கான இறைவேண்டலில் உறுதியுடன் இருந்தார்.  தெசலோனிக்கக் கிறிஸ்தவர்கள் அவர்கள் பெற்ற அழைப்புக்குத் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் மன்றாடுகிறார்.  


நற்செய்தி.


நற்செய்தியில், சில மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் அணுகுமுறையை இயேசு விமர்சிக்கிறார்.    அவர்கள் திருச்சட்டத்தின் பேரில் தாங்க முடியாத சுமைகளைப் பாமர மக்கள்  மீது சுமத்துகின்றனர்.  ஏழை எளியோரிடம்,  அவர்கள் போதிப்பதைப் பின்பற்ற வேண்டுமேயொழிய அவர்கள் செய்வதை அல்ல என்று  வலியுறத்துகிறார்கள்.  சமயம் சார்பான   ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக அவர்களிடம் வருபவர்களுக்கு அவர்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்கவில்லை.   

ஆகவேதான், மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின்  நிலைக்குறித்து  இயேசு உண்மையிலேயே வருந்துகிறார்.  குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு என்று அவர்களைச் சபிக்கிறார். 

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள்  கோவில் குடிகொண்டிருக்கும்  கடவுளை விட, கோவிலில் உள்ள செல்வத்திற்கு  அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் என்று இயேசு வேதனையுறுகிறார். 

குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா? என்ற கேள்வியை மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் முன் வைக்கிறார். புதிதாக சமயத்தில் ஆள்களைச் சேர்க்கும் மறைநூல் அறிஞர்கள், பின்னர் அவர்கள் மேல் அக்கறைக் காட்டுவதல்லை என்பதும் இயேசுவின் குற்றச்சாட்டாக  உள்ளது. 


சிந்தனைக்கு.


முதல் வாசகத்தில் புனித பவுலின் தெசலோனிக்கேயர்களுக்கான அறிவுறுத்தலுக்கும்    நற்செய்தியில் உள்ள மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களுக்குமான இயேசுவின் அறிவுறுத்தலுக்கும்  இடையே வெளிப்படையான வேறுபாடு உள்ளதை அறிகிறோம்.  பவுல் அடிகள் தெசலோனிக்கத்  திருஅவை இறைமக்களின்  நம்பிக்கை மற்றும் மற்றவர்கள் மீது அவர்கள் கொண்ட அன்பைப் போற்றிப் பாராட்டுகிறார்.  நற்செய்தியிலோ மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களை வெளிவேடக்காரர்கள் என்று இயேசு கண்டனம் செய்கிறார், சபிக்கிறார். ஏனென்றால் அவர்கள் சொல்வதைப்போல் செய்வதில்லை.   

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களை இயேசு குருட்டு வழிகாட்டிகளே என்று தூற்றுவதைக் கேட்பதோடு அவர்களுக்கு ‘ஐயோ! உங்களுக்குக் கேடு’ என்று   சபிக்ககும் இயேசுவைக் காண்கிறோம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பார்கள்.  இயேசு பரிசேயர்களின் மற்றும்  மறைநூலை தெளிவுறக் கற்றறிந்த அறிஞர்களின் உள்ளார்ந்தப் போக்கை அறிந்தவர் இயேசு. முதலில் வழிதவறிய அவர்களை மீட்கவே இயேசு  வந்தார்.  ஆனாலும், அவர்களில் மாற்றத்தை அவர் காணவில்லை. 

இன்றைய வாசகங்களிலிலருந்து   நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் அதிகம் இருந்தாலும், இயேசு  வலியுறுத்தும் முதல் விடயத்தைக் கருத்தில் கொள்வோம். ஆம், வெளிவேடத்தை அவர்   கண்டிப்பதோடு அதனை சபிக்கிறார். வெளிவேடம்  என்பது சொல்வதொன்று  செய்வதொன்று என்பதைக் குறிப்பதாகப் பொருள கொள்ளலாம். ‘கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு திக்கு தாளம், எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்கு தாளம்’ என்பதுபோல் கடவுள் முன்பாக நமது கிள்ளாடிதனம் வெகுகாலத்திற்குச் செல்லாது என்பதை நாம் நினைவிஃ கொள்ள வேண்டும்.

“எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில், வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை” (மத். 10:26) என்கிறார் ஆண்டவர். ஆம், எவ்வளவுதான் உண்மையை மூடிமறைத்தாலும் அது கடவுளின் பார்வையில் தப்ப இயலாது. ஆகவே, வெளிவேடத்தால் நமக்கு வாழ்வு வந்துவிடாது. 

வெளிப்படயான ஆடம்பர வாழ்வையும், பகட்டான விளம்பரங்களையும் கடவுள் என்றுமே விரும்புவதில்லை. ‘உருவத்தை பார்ப்பவன் மனிதன், உள்ளத்தைக் காண்பவன் இறைவன்’ என்ற தந்துவத்தை என்றும் நினைவில் கொண்டு இறைவன் முன் வெளிப்படையாக வாழ்வதே அழைப்புக்கேற்ற வாழ்வு என்பதை பின்பற்றி வாழ்வோம்.

‘தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்’ (மத் 5: 8) என்பார் இயேசு. எனவே, நாம் வெளிவேடம் துறந்து, தூய்மையான உள்ளம் கொண்டு  வாழ முற்படுதல் வாழ்வுக்கு வழிவகுக்கும்.  


இறைவேண்டல்.


என் மீட்பராகிய ஆண்டவரே,  வெளிவேடத்திலிருந்தும்  தன்னலத்திலிருந்தும்  என்னை விடுவித்து, நீர் வழங்கும் நற்பண்புகளில் நான் வாழ்ந்திட அருள்புரிவீராக. ஆமென். 

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452