அடுத்தவரில் கொள்ளும் அன்பில் இறையன்பைக் காண்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

23 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 20 ஆம் வாரம் –வெள்ளி  
எசேக்கியேல் 37: 1-14
மத்தேயு   22: 34-40
 

அடுத்தவரில் கொள்ளும் அன்பில் இறையன்பைக் காண்போம்! 


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில் எசேக்கியேல் அவர் கண்ட மற்றமொரு காட்சியை  விவரிக்கிறார்.  உலர்ந்த எலும்புகள் உயிர் பெறுவதைப் பற்றிய எசேக்கியேலின் காட்சி  பாபிலோனில் அடிமைப்பட்டிருக்கும் யூதர்களுக்கு விடுதலைச் செய்தியாகத் தரப்படுகிறது.

எசேக்கியாவின் முதல் இறைவாக்கின் போது, எலும்புகள் ஒன்றாக வந்து, தசை மற்றும் தோலால் மூடப்படுகிறன. அடுத்த இறைவாக்கின்போது,  எலும்புகள் கடவுளின் மூச்சைப்பெற்று  உயிர்ப்பிக்கப்படுகின்றன.  கடவுளின்  மூச்சு என்பது  எலும்புகள், சதை மற்றும் தோல் ஆகியவற்றை வாழ வைக்கும் உயிர் கொடுக்கும் சக்தியாகும்.  இந்த இறைவாக்கினை எசேக்கியேல்  மக்களுக்கு எடுத்துரைக்கும்போது,   நாடுகடத்தப்பட்ட மக்கள்  கடவுளால் கைவிடப்படவில்லை உணர்ந்து கொண்டனர்.   அவர்களுக்கு மீண்டும் தாயகம் திரும்பி புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உறுதிபெறுகிறது.  


நற்செய்தி.

நற்செய்தியில், பரிசேயர்களுடன் வந்த  திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார். அக்கேள்விக்கு இயேசு பதில் அளிக்கிறார். பழைய ஏற்பாட்டிலிருந்து இரு பெரும்   கட்டளைகளை இயேசு   நினைவூட்டுகிறார்: 

1.    உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ (இ.ச. 6:5)
2.    ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ (லேவி 19:18)


சிந்தனைக்கு.

நாம் கடவுளையும் நமக்கு அடுத்திருப்பவர்களையும் அன்பு  செய்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் அவா. கடவுளின்  அன்பானது  மிகவும் சக்தி வாய்ந்தது, கடவுள் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்.  யோவான் 3:16லும், மறைநூலின்  மற்ற இடங்களில் நாம் வாசிப்பதைப்போல்,  "கடவுள் உலகத்தையும், அவரது உருவில் படைக்கப்பட்ட மனுக்குலத்தையும்  மிகவும் அன்பு செய்கிறார். அவரது அளவற்ற அன்பே நாம் கொண்டிருக்கும் அன்பிற்கும் மூலமாக உள்ளது.

நற்செய்தியில், இயேசுவைச் சோதிக்க வந்த பரிசேயர்களுக்கு இயேசு இருவிதமான  அன்பைக் பதிலாகாத் தருகிறார். இவ்விரு அன்பைக் குறித்து மறைநூல் அறிஞர்கள் நன்கு அறிவர். ஏனெனில் அவை லேவியர் நூலிலும் இணைச்சட்ட நூலிலும் காணப்படுகின்றன. இயேசு அவற்றை எடுத்துக் கையாண்டார்.  இதற்கு முன், சதுசேயர்களின் ஒரு குழு இயேசுவை சிக்க வைக்க முயன்று தோல்வியடைந்தது. எனவே இப்போது பரிசேயர்கள் மறைநூல் அறிஞரோடு வருகிறார்கள்.  

இயேசுவின் பதிலோடு தர்க்கம் செய்ய இயலாத நிலையில் அவர்களே சிக்கிக்கொண்டார்கள். உனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய் என்பது கடவுளுக்குச் செலுத்தும் அன்புக்கு எதிரானது அல்ல. அடுத்திருப்பவரை அன்பு செய்தாலே கடவுளை அன்பு செய்கிறோம் என்பதற்கு ஈடாகிறது. மாறாக கடவுளை மட்டும் அன்பு செய்துவது அடுத்திருப்பவரை அன்பு செய்வதாகிவிடாது. 

 “அன்பில்லாதவர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார்” என்கிறார் புனித (1 யோவான் 4:8) ஆம், அன்பை அன்பு கொண்டுதான் அறிய முடியும். ஆகவே இறைவன்மீது நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்த நாம் அன்புமயமானவர்களாக மாறுவோம். 

  
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (குறள் 75)

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர் என்று கலைஞர் கருணாநிதி மேற்கண்ட குறளுக்குப் பொருள் கூறினார்.  

இயேசு தமது தந்தையை நேரடியாக அன்பு செய்யவில்லை. அவரது திருவுளத்திற்கு இணங்க மனிதர்களுக்காகத் தமது சிலுவைச் சாவை ஏற்றதன் வழி தந்தையை அன்பு செய்தார். எனவேதான் ஒரு பழைய கிறிஸ்தவப் பாடலில், ‘அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்’ என்ற வரிகளைக் கேட்கிறோம். சகோதர அன்பைத் துறந்து, கடவுளின் அன்பைப் பெற நினைப்பது  முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படும் கதையாகிவிடும். 

இறையன்பும், பிறரன்பும் தனித்தனி துருவங்கள் கிடையாது. அவை ஒன்றோடு ஒன்று சார்ந்திருப்பவை.  மாறாக அவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம். ஆகவே, முதல் வாசகத்தில் யூதர்கள் மீண்டும் தாயகம் திரும்பி புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையை கடவுள் அளித்ததைப் போல நமக்கும், கடவுளையும் அடுத்திருபவரையும் அன்பு செய்து வாழும் இதயம் அருளிட வேண்டுவோம்.


இறைவேண்டல். 
 

அன்பின் ஊற்றாகிய ஆண்டவரே, உமது அன்பில் நிலைத்திருப்பதோடு எனக்கு அடுத்திருப்பவரையும்  அன்பு செய்து வாழும் வரமருளுவீராக. ஆமென்.


  


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452