ஒன்றித்து வாழ்வோம், ஒன்றுபட்டு வாழ்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

14 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 19 ஆம் வாரம் -புதன்
எசேக்கியேல் 9: 1-7; 10: 18-22
மத்தேயு   18: 15-20


ஒன்றித்து வாழ்வோம், ஒன்றுபட்டு வாழ்வோம்!

முதல் வாசகம்.


இன்று  எசேக்கியேல் தனது வாழ்நாளில் (கிமு 587) எருசலேம் ஆலயத்தின்  இறுதி அழிவைப் பற்றி பேசுகிறார்.  இதில், அழிவிலும் கூட,  நடக்கும் எல்லாவற்றிலிருந்தும் கடவுள் மாட்சியுற   வேண்டும். என்பது வலியுறுத்தப்படுகிறது.

எசேக்கியேல் கண்ட காட்சி:

எசேக்கியா,  கடவுள் அவரது காதில் உரக்கக் கூறியச் செய்தியை விவரிக்கிறார். ஆலயமும் எருசலேமும் பாபிலோனியர்களால் அழிக்கப்படும் முன், கடவுள் மேல்  நம்பிக்கைக் கொண்டவர்களும்,  அவருக்குப் பிரமாணிக்கமாக வாழ்ந்தவர்களும்,   ஆலயத்தில்  மேற்கொள்ளப்பட்ட எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காக புலம்பி அழுத மக்களும்   காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக,   அவர்கள்   நெற்றியில் அடையாளம் இடுமாறு ஒருவரைப்   பணிக்கிறார்.

நல்லவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கான அடையாளமாக இந்த அடையாளம் இருந்தது.  அப்போது, கடவுள் எதிரிகளிடம்  நகரெங்கும் சுற்றி வந்து தாக்குங்கள். உங்கள் கண்களினின்று யாரையும் தப்பவிட வேண்டாம்; இரக்கம் காட்ட வேண்டாம் என்றும் , அடையாளமிடப்பட்டுள்ள மனிதர்களைத் தவிர்த்து, மற்றவர்களைக்  கொன்றொழியுங்கள் என்றும் எதிரிகளுக்குக் கடவுள்  பணித்ததாக எசேக்கியேல் மேலும் கூறுகிறார்.

அடுத்து, கடவுளின் மாட்சியும் ஆலயத்தில் காணப்பட்ட கெருபுகளின் வழியாக  ஆலயத்தை விட்டு வெளியேறியதை எசேக்கியேல் கண்ட காட்சியை மேலும் விவரிக்கிறார். ஆம், எருசலேமும் ஆலயமும் பாபிலோனியர்களால் தாக்கப்படும் முன் கடவுளின் மாட்சி ஆலயத்தைவிட்டு வெளியேறிவிட்டதை இவ்வாறு எசேக்கியேல் காட்சியாகக் காண்கிறார்.
 

நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில், ஆண்டவர், அவரது சீடர்களகிய நாம்,  நம் சமூகத்தின் மற்ற உறுப்பினர்களுடன் என்றும் சமரசமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார். .  ஒரு நபர் (சீடர்)  செய்யும் தனிப்பட்ட தவறாக இருந்தாலும், அவரது செயல் முழு சமூகத்தையும் பாதிக்கிறது.  எனவே, எழும் பிரச்சனைகள் சமூகத்தைப் பாதிக்கும் முன் அவை சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்கிறார் ஆண்டவர். அதற்கு, சில வழிமுறையை இயேசு முன்வைக்கிறார்.
முதலாவதாக. “சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள் என்கிறார்.

அடுத்து, அவர் செவிசாய்க்காவிடில்,  உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போய் பிரச்சனையைப் பேசி முடிக்கப்பாருங்கள் என்றும், அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருஅவையின் உதவியை நாடுங்கள்  என்றும் அறிவுறுத்துகிறார். 
 
அடுத்து, உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” என்ற வாக்குறுதியையும் ஆண்டவர் நமக்கு அளிக்கிறார்.


சிந்தனைக்கு.


இன்றைய நற்செய்தியில் 5 முக்கிய அம்சங்களையொட்டி நாம் ஆண்டவரால் அறிவுறுத்தப்படுகிறோம்.

1.கருத்து வேறுபாடோ அல்லது தகராரோ ஏற்படும்போது, தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும்  அமைதியாக கலந்துரையாடி தீர்வு காண வேண்டும்.
2.மேற்கண்ட முதாவது முறை ஏற்புடையதாக இல்லை என்றால், சமூகத்தின் துணை கொண்டு, அமைதியாகத் தீர்வக்காண முற்சிக்க வேண்டும்.
3.மேற்கண்ட இரு வகையிலும் ஒப்புரவு காண இயலாதச் சூழலில் திருஅவை தலைவர்களின் உதவியை நாட வேண்டும்.
4.பாதிக்கப்பட்ட இருவரின் உறவைப் புதுப்பித்தல் இன்றியமையாதது. உறவில் ஏற்பட்ட விரிசல் புறையோடிவிடக் கூடாது. 
5.இரண்டு அல்லது மூன்று பேர் இயேசுவின்  பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே இயேசு இருப்பார் என்பதில் நம்பிக்கைக் கொள்வது. 


கிறிஸ்தவ இறைமக்கள் சமூகத்தைச் சேர்ந்த நாம், ஆண்டவராகிய இயேசுவுடன் தனிப்பட்ட உறவைக் கொண்ட ஒரு தனிமனிதனாகவும், இதர இறைமக்கள் சமூகத்தின் உறுப்பினராகவும் இருக்கிறோம்  என்பதை இன்று நினைவூட்டப்படுகிறோம்.  ஆம், தனிப்பட்ட வாழ்வுக்கும்  சமூக ஈடுபாட்டிற்கும் இடையே  சமநிலையை நாம் கொண்டிருக்க வேண்டும். தனிப்பட்ட நம்பிக்கை வாழ்வும், திருஅவையில் ஓன்றித்தச் சமூக வாழ்வும் நமக்கு இரு கண்கள் போன்றவை. 

நம்மில் எவரும் தனிப்பட்ட முறையில் விண்ணகத்தில் நுழைய இயலாது. பிறர் உதவியும் ஈடுபாடும் நமக்குத் தேவை. இதில் நமக்கு முக்கியப் பங்கு வகிப்பவர்கள் புனிதர்கள். 

தொடர்ந்து, ''இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என இயேசு வாக்களித்துள்ளார் (மத் 28:20).  ஒற்றுமையே நமது பலம். எனவேதான், நமது ஒற்றுமைக்காகவும் ஒன்றிப்புக்கும் இயேசு தந்தையிடம்,  ‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! (யோவான் 17:21) என்று அன்றும் இன்றும் மன்றாடிக்கொண்டிருக்கிறார். 

இக்காலத்தில் தருத்தந்தை பிரான்சிஸ் உலகெங்கும் கட்டியெழுப்ப விரும்புவது கூட்டொருங்கியக்கத் திருஅவை. ஆக, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அனைத்திலும் ஒன்றித்திருந்து, ஒற்றுமையோடு செயல்பட அழைக்கப்படுகிறார்கள். பிளவுகள் தோன்றினாலும் அவற்றைப் போக்குவதற்கான வழிகளைத் தேட வேண்டும்; அன்பும் மன்னித்து ஏற்கும் பண்பும் நம்மில் வளம்பெற வேண்டும்.  

முதல் வாசகத்தில் எசேக்கியேல் கண்ட காட்சியில் கடவுளின் மாட்சியானது இஸ்ரயேலரின் அடிபணியாத வாழ்வை முன்னிட்டு, எருசலேம் ஆலயத்தை விட்டு வெளியேறியதை    வாசித்தோம். நமது வாழ்விலும் கடவுள் எதிர்ப்பார்க்கும் ஒன்றிப்பு, ஒற்றுமை, மன்னிப்பு குன்றினால், நம்மை விட்டும் கடவுளின் மாட்சி வெளியேறும் அபாயம் ஏற்படக்கூடும். 

கடவுளின் மாட்சி நம்மைவிட்டு வெளியேறினால், நமது உள்ளம் புறம்போக்கு நிலமாக மாறிவிடும். அங்கே எளிதாக அலகை பட்டாப்போட்டு குடிகொள்வான். ஒன்றுபட்டால்தான் நமக்கு வாழ்வு உண்டு.

இறைவேண்டல்.


உமது திருவுடலான திருஅவையில் எங்களை குடிவைத்த ஆண்டவரே, திருஅவை மக்களாக அனைவரும் ஒன்றித்து வாழ, என்னாலானவற்றை நிறைவேற்ற  என்னைப் பயன்படுத்துவீராக. ஆமென்.


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452