நன்குடிமக்கள் இயேசுவின் மக்கள்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
இன்றைய இறை உணவு
12 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 19 ஆம் வாரம் -திங்கள்
எசேக்கியேல் 1: 2-5, 24-28
மத்தேயு 17: 22-27
நன்குடிமக்கள் இயேசுவின் மக்கள்!
இன்று தொடங்கி அடுத்த சில நாள்களுக்கு இறைவாக்கினர் எசேக்கியாவின் நூலில் இருந்து முதல் வாசகங்கள் தரப்பட்டுள்ளன. எனவே, தொடக்கமாக எசேக்கியாவைப் பற்றிய சில விபரங்களை தெரிந்துகொள்வோம்.
பாபிலோனியர்கள் தென்னாடான யூதேயாவின் மீது முதலில் கி.மு. 598-லும் அடுத்து கி.மு. 587-லும் இரு முறை மீது படையெடுத்தனர். எனவே, கி.மு. 587 யூதர்களின் வரலாற்றில் இரத்தக்கரை படிந்த ஆண்டாகக் கருதப்படுகிறது. கி.மு. 598-ல் நிகழ்ந்த முதல் தாக்குதலைத் தொடர்ந்து முதன்மை மக்கள் பலர் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் எசேக்கியேல்.
எசேக்கியேல் என்றால், ‘இறைவன் பலப்படத்துகின்றவர்' என்று பொருள். இவர் செதேக்கியா குருகுலத்தில் பிறந்தவர். தந்தையின் பெயர் பூசி. இவர் எருசலேம் ஆலயத்திற்கு மிக அருகில் வாழ்ந்தவர், திருமணமானவர். பாபிலோனியரின் முதல் தாக்குதலின்போது தம் மனைவியை இழந்தார். பாபிலோனில் தெல் அவீவ் என்ற இடத்தில் தங்கியிருந்தார். பிறகு கி.மு.593-ல் (5 ஆண்டுகள் கழித்து) இறைவாக்குரைக்க கடவுளல் அழைக்கப்பட்டார் (எசே 1:2). பின்னர் எருசலேம் திரும்பியதும் இறைவாக்குரைக்கத் தொடங்கினார். எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டதைக் கண்கூடாகக் கண்டு, தங்களின் பாரம்மரிய ஆன்மீகக் கூடம் அழிந்தத்தை நினைத்து எசேக்கியேல் மனம் நொந்தார். எசேக்கியேல் ஆழ்ந்த இறைப்பற்றும் கற்பனை வளமும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் குருவாகவும் இறைவாக்கினராகவும் இருந்ததால் எருசலேம ஆலயம் குறித்தும் உள்ளத் தூய்மையைக் குறித்தும் மிகுந்த அக்கறை கொண்டார். எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக அடிமைப்பட்டிருக்கும் மக்களை நம்பிக்கையில் ஊக்குவிக்கும் பணியை ஏற்றிருந்தார் எசேக்கியேல். இவர் நான்கு பெரிய இறைவாக்கனிர்களில் (எசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல்) ஒருவர்.
முதல் வாசகம்.
இவ்வாசகப் பகுதியில் ‘கல்தேயா’ என்பது பாபிலோனுக்கான மற்றொரு பெயர். எசேக்கியேல் பாபிலோனில் நாடு கடத்தப்பட்டிருந்தபோது இறைவாக்குப் பணிக்கு கடவுளால் அழைக்கப்பட்டார். எருசலேம் அழிக்கப்பட்டதால், பாபிலோனில் இருந்த யூதர்கள் இனி எருசலேம் ஆலயத்தில் கடவுளை வழிபடமுடியாது என்று அழுதுப் புலம்பினர்.
இத்தருணத்தில்தான், கடவுளின் மாட்சி இன்னும் உள்ளது என்றும், எருசலேம் ஆலயத்தில் அவர்களின் முந்தைய அனுபவத்தை விட சிறந்திருக்கும் காலம் உள்ளது என்று நாடுகடத்தப்பட்டவர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் இவர் இறைவாக்குரைத்தார். ஆம், அவர் விண்ணுலகம் திறக்கப்பட கடவுள் அருளிய காட்சிகளைக் கண்டார். அக்கட்சியில் கடவுளின் அரியணை திறக்கப்பட்டதாகவும், அது ஓர் இடத்தில் நிலைகொள்ளாமல் அசைந்துக் கொண்டிருந்ததைக் கண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
இதனால், யாவே கடவுள் எருசலேம் ஆலயத்தில் மட்டும் குடிகொள்ளவில்லை, அவர் எங்கும் இருக்கிறார் என்றும், குறிப்பாக பாபிலோனிலும் தம் மக்களோடு இருக்கிறார் என்றும் எடுத்துரைக்கிறார்.
தொடர்ந்து, கடவுள் மனிதர்கள் மேல் மட்டுமல்ல விலங்குகள் உலகின் மீதும் ஆதிக்கம் கொண்டுள்ளார் என்ற கருத்தை அவர் கண்ட காட்சியில் உணர்கிறார். அக்காட்சியில், அரியணையின் கீழ் இருந்த நான்கு விலங்குகளின் முகங்களும், கடவுளின் நான்கு குணங்களைப் பிரதிபலிப்பதாகவும் இருந்தன. அடுத்து விலங்குகளில் காணப்பட்ட மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமானது மனிதர் பகுத்தறியும் திறனையும், சிங்கம் கம்பீரத்திற்கும் காளை சக்திக்கும், கழுகு விரைவான செயல்பாட்டுக்கும் அடையாளங்களாக உள்ளன என்று விவரிக்கப்படுகிறது.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில், இயேசு நம்மை ‘மானிட மகன்' என்று வெளிப்படுத்துகிறார். கலிலேயாவில் சீடர்கள் ஒன்றுதிரண்டிருக்கும் போது ‘மானிட மகன்' இயேசு அவர்களிடம், தமது பாடுகள், சிலுவை மரணம் மற்றும், உயிர்ப்புப்பற்றி முன்னறிவிக்கிறா. அவ்வேளையில் அவர் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படுவார் என்றும் அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள் என்றும் கூறியதோடு. அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்'' என்றும் முன்னறிவிக்கிறார். இயேசுவின் இந்த அறிவிப்பைக் கேட்ட சீடர்கள் மனங்கலங்கினர். பேதுரு உட்பட மற்ற சீடர்களும் இயேசுவின் இந்த வெளிப்பாட்டில் முழுமையாக நம்பிக்கை கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
தொடர்ந்து, வரி செலுத்துதல் குறித்த ஒரு பிரச்சனை எழுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் யூதர்களில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், ஆலய வரியாக இரண்டு திராக்மா செலுத்த வேண்டும். இது மோசே உடன்படிக்கைக் கூடாரத்திற்கு வழங்கிய சட்டம். பின்னர், இதே சட்டத்தை எருசலேம் ஆலயதிற்கும் கட்டாயமாக்கினார் சாலமோன் அரசர் (2 குறி 24:6). உரோமையர்களின் ஆட்சியின்போது, எருசலேம் ஆலயம், உரோமையர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. எனவே, உரோமையர்களைத் தவிர்த்து மற்றவர் வரி செலுத்தியாக வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்தது.
எனவே, வரி தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்கின்றனர். அதற்குப் பேதுரு, “ஆம் செலுத்துகிறார்” என்றார். பின்னர் இல்லம் வந்ததும், பேதுரு இந்த ஆலய வரி குறித்து இயேசுவிடம் பேசுவதற்கு முன்பாகவே இயேசு அவரிடம், “நீ போய் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்கின்றார்.
திராக்மா- எபிரேய நாணயம்
ஸ்தாத்தேர்- கிரேக்க நாணயம்
ஒரு ஸ்தாத்தேர் என்பது இரு திராக்மாவுக்குச் சமம்.
சிந்தனைக்கு.
ஒருமுறை இயேசு ‘சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்’ (மத்.22:21) என்றார். ஆகவே இயேசு வரி செலுத்துவற்கு எதிரானவர் அல்ல. இன்றைய நற்செய்தியிலும், வரி செலுத்தவில்லை என்று சொல்லி இயேசுவை மாட்ட வைக்கலாம் என்று வரிதண்டுவோர் நினைத்தனர். ஆலயத்திற்கான வரியைச் செலுத்த பேதுருவிடம் ‘நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து'' என்றார்.
இயேசு வரி செலுத்துவதை ஆதரிக்கிறார். வரி செலுத்தாமல் அவர் தப்பிக்க விரும்பவில்லை. அவர் வரி செலுத்தப் பேதுருவிடம் பணித்தார். பேதுருவும் இயேசு கூறியபடியே செய்ய, மீன் வாயில் கிடைத்த நாணயத்தைக் கொண்டு வரி செலுத்தினார்.
இயேசு கூறியபடி மீனின் வாயில் நாணயம் இருக்குமா எனும் சந்தேகம் பேதுருவுக்குத் தோன்றியிருக்கக் கூடும். இயேசு சொன்னது போலவே பேதுருவும் மீனின் வாயில் அந்த நாணயத்தைப் பார்த்தவுடனே வியந்திருக்க வேண்டும். இப்போது இயேசு அறிவித்த அவரது பாடுகள், மரணம் பற்றிய முன்னறிவிப்பில் பேதுருவுக்கு நம்பிக்கைப் பிறந்திருக்க வேண்டும். பேதுருவுக்கு இந்த நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, இயேசு வரி செலுத்த மீன்பிடிக்கச் சொன்னார் என்றால் மிகையாகாது.
கடவுள் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அற்புதங்களைச் செய்கிறார். இதில் பிரச்சனை என்னவென்றால், நாம் அவற்றைக் கண்டறியத் தவறுகிறோம். நம்முடைய போராட்டங்களையும் சந்தேகங்களையும் அவர் அறிவார். சில சமயங்களில், நமது நம்பிக்கை உறுதிபெறும் பொருட்டு சில பிரச்சனைகளில் நம்மை அலைமோதவிட்டு பின்னர் தெளிவுப்படுத்துகிறார்.
நிச்சயமாக, மீன் வாயில் இயேசு கூறிய நாணயத்தைக் கண்டவுடன், மற்ற சீடர்களைவிட இயேசவின் மீதான நம்பிக்கை பல மடங்குப் பேதுருவுக்குக் கூடியிருக்கும். எசேக்கியேல் கூறியதைப்போல், பாபிலோனில் துன்புறும் யூதர்களைக் கடவுள் விடுவிப்பார் என்பதைப் போன்று, அவரில் நம்பிக்கைக்கொள்வோரை இயேசுவும் மீட்டெடுப்பார் என்பதில் நம்பிக்கை வளர்ப்போம். நம்பிக்கை கைக்கொடுக்கும்.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, நான் போராடும் போதெல்லாம் உம்மேல் நான் கொண்டிருக்கும் நம்பிக்கையால் என்னை நிரப்புவதோடு, வரி செலுத்துவதில் நான் நேர்மையாக இருந்திடவும் எனக்கு உதவுவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452