வாழ்வுக்குரியதே கிறிஸ்தவம், அழிவுக்கல்ல! | ஆர்.கே. சாமி | VeritasTamil

17 ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 3ஆம் வாரம் - புதன்

தி. பணிகள்   8: 1b-8                                      

யோவான்  6: 35-40

முதல் வாசகம்.

திருஅவையின் முதல் திருத்தொண்டர்களில்  ஒருவரான ஸ்தேவானின் மரணத்தைத் தொடர்ந்து, எருசலேமில் கிறிஸ்தவச் சமூகத்திற்கு எதிராக நிகழ்ந்த கடுமையான துன்புறுத்தலின் விளைவை  இன்றைய வாசகம் விவரிக்கிறது.

அக்காலத்தில் திருஅவைக்கு எதிராக உரோமையரிடமிருந்து எழுந்தத் துன்புறுத்தல் கடுமையாக இருந்தபடியால்,  பல கிறிஸ்தவர்கள் எருசலேமிலிருந்து யூதேயா மற்றும் சமாரியா போன்ற பிற பகுதிகளுக்கு தப்பி ஓடினார்கள்.  ஆனால், புலம்பெயந்தபோதிலும்,  இந்த சிதறிய நம்பிக்கையாளர்கள்  தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கிறிஸ்துவைப் பற்றிய  நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டதால், கிறிஸ்தவம் தொடர்ந்து பரவியது.

இந்த துன்புறுத்தலின் மத்தியில், சவுல் (பின்னர் மனபாறிய பவுல்) உரோமையர் பக்கமிருந்து, கிறிஸ்தவ இளந் திருஅவையை முடக்குவதற்கான தனது முயற்சிகளில்  ஆர்வமாக ஈடுபட்டார்.   அவர் வீடு வீடாகச் சென்று, இயேசுவைப் பின்பற்றிய ஆண்களையும் பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார். இவ்வாறு அவர் திருஅவையை அழித்துவந்தார்.

அதே வேளையில், திருத்தூதர்களில் ஒருவரான பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும்  திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர் என்று இவ்வாசகப் பகுதியில் லூக்கா விவரிக்கிறார்.

ஒருபுறம்  துன்புறும் திருஅவையாகக் காட்சியளித்தாலும், மறுபுறம்  அதன் மகழ்ச்சி ஆர்ப்பரிப்பு சிகரத்தை எட்டியது. வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல, அதில் மகிழச்சியோடு கூடிய ஆர்ப்பரிப்பும் இருந்தது.  


நற்செய்தி.

நற்செய்தியில், யோவானுக்கே உரித்தான செய்தியைக் கேட்கிறோம். இன்றைய நற்செய்தியில், இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்கிறார். இங்கே, ‘வாழ்வு தரும் உணவு நானே’ என்பதில் இயேசு குறிப்பிடும் வாழ்வு  நிலைவாழ்வு. நமது ஆன்மாவுக்கான  வாழ்வு. அது நிறைவாழ்வும் நிலைவாழ்வுமாகும்.   பசியும் தாகமும், வேறு எந்த தாக்கமும் அற்ற வாழ்வு. தம் மகனிடம் நம்பிக்கை கொள்ளும்  அனைவரும் இந்த நிலைவாழ்வைப் பெறுவர் என்பது தந்தை கடவுளின் வாக்குறுதியாக உள்ளது (யோவான் 3:15).  

பசியையும் தாகத்தையும் நிலையாகப் போக்கக்கூடிய இந்த உணவை பெற இம்மையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு,  இயேசு,  “மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்'' என்று வழியைச் சொல்கிறார். 

சிந்தனைக்கு:

இன்றைய நற்செய்தியைக் கூர்ந்து கவனித்தால், இயேசு அவரை இவ்வுலகிற்கு அனுப்பிய  தந்தையின்  திருவுளம் என்ன என்பதை எடுத்துரைப்பதை அறியலாம்.  தந்தையின் திருவுளம பற்றி பேசும்போது,  அவர் இரு உண்மைகளை நம்கு இன்று தெளிவுப்படுத்துவதை அறிகிறோம்.

1.இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் அழிந்துபோகக் கூடாது. 
2.இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைக் கைமாறாகக் கொள்வர்.

தாம் படைத்த மனிதர் பாவத்தில் உழன்று அழிந்துபோக வேண்டும் என்பது தந்தையின் விருப்பம் அல்ல என்பதை இயேசு தெளிவுப்படுத்தகிறார். பாவிகள் மனமாறி அவர்கள் வாழ்வடைய வேண்டும் என்பதே கடவுளுடைய விரும்பமாக உள்ளது.
இன்றைய நற்செய்தியின வசனம் 47-ல், ‘மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்'' என்ற வாக்குறுதியை இயேசு முன்வைத்து பேசுகிறார்.  

நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி:  ‘வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது’ என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  

நமது அன்றாட வாழ்வில், உணவு  நமது உடலுக்கு நலம் அளிப்பதோடு, ஓடியாடி பணிகள் செய்ய சக்தி கொடுக்கிறது.  அதே வேளையில்,  இயேசு கூறும் ‘வாழ்வு தரும் உணவு’ என்பது, நமது உடலுக்கு மட்டுமல்ல, மாறாக, ஆன்மாவிற்கும் நலத்தையும் ஆரோக்கியத்தையும்   தரக்கூடியது என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். உடலைப் பேணி காப்பதுபோலவே, ஆன்மாவையும் பேணி காக்க வேண்டும். இந்த உண்மையை இயேசு இன்று வலியிறுத்துகிறார். இந்த ஆன்மாவுக்கான உணவுதான் இயேசு.  

முதல் வாசகத்தில்,   பல கிறிஸ்தவர்கள் எருசலேமிலிருந்து யூதேயா மற்றும் சமாரியா போன்ற பிற பகுதிகளுக்கு தப்பியோடி,  சென்ற இடங்களில் எல்லாம்  நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்கள். ஸ்தேவான் ஒரு மறைசாட்சியாக மரணமுற்றார். அதுவே திருஅவையின் தொடர்ச்சியான பரவுதலுக்கு வித்தாக அமைந்தது. இவ்வாறு இயேசு எருசலேமில் தொடங்கி யூதேயா மற்றும் சமாரியா போன்ற பிற பகுதிகளுக்குத் தன்னை பகிர்ந்தளித்தார். அன்று 4000 மற்றும் 5000 பேருக்கு அப்பத்தைப் பகரிந்தது போல்  இப்போது, தன்னையே  பகிர்ந்தளித்துகொண்டிருக்கிறார்.  

அக்காலத்தில், ஒருபுறம்  துன்புறும் திருஅவையாகக் காட்சியளித்தாலும், மறுபுறம் ஆங்காங்கே அப்பம் பிடும்  அதன் மகழ்ச்சி ஆர்ப்பரிப்பு சிகரத்தை எட்டியது.  இயேசு நிலைவாழ்வுக்கான தம் உடலை பாஸ்கா உணவாக அளித்துக்கொண்டே போனார். நம்பிக்கையாளர்கள்   திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள் (திப 242-47).  இவ்வாறாக, இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் அழிந்துபோகக் கூடாது என்பதற்காக தம் உடலை உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையாளர்களுக்கு அளிப்பதில் இயேசு உறுதியாகச் செயல்பட்டார். இன்றும், நம்மிலும் செயலாற்றிக்கொண்டிருக்கிறார். 

உலக மீட்புக்காகப் பிட்கப்படும் உடலாக இயேசு தம்மையே கையளித்துக்கொண்டும் பகிர்ந்துக்கொண்டும் உள்ளார். அவரில் நாமும் நற்கருணை மக்கள். ஆதலால்,  நம்மையும் நமக்குள்ளதையும்  பகிர வேண்டும் என்பது அவரது எதிர்ப்பார்ப்பு. நம்மில் உறவுகொண்டு வாழும் எவரும் அழிவுறக்கூடாது என்பது நமது கிறிஸ்தவ வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும். கிறிஸ்தவம் அழிவுக்கானது அல்ல, மாறாக வாழ்வுக்கானது. 

 
இறைவேண்டல்:

உம்மில் நம்பிக்கைக்கொண்டு வாழ்வோருக்கு நிலைவாழ்வை அளிக்கும் அன்பு இயேசுவே, மண்ணுலகில் உம்திரு உணவாகிய நற்கருணையில் நான் உம்மோடு என்றும் உறவுகொண்டு வாழவும், எனக்குள்ளதைப் பகிரவும்  எமக்கு அருள்புரிவீராக.  ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452