சமத்துவமே கிறிஸ்தவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

9  ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 2ஆம் வாரம் - செவ்வாய்

தி. பணிகள்  4: 32-37                                                                

யோவான் 3: 7-15

முதல் வாசகம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம்,  எருசலேம்  பகுதியில் இருந்த தொடக்கத் திருஅவையினர்  இயேசு மற்றும் அவரது தந்தையாம் கடவுளுடன் மட்டுமல்லாமல், கிறிஸ்து இயேசுவில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுடன் நல்லுறவில் ஒன்றித்திருந்தார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் உடைமைகளையும் வளங்களையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட நடைமுறை வாழ்வையும்  விவரிக்கிறது.
 
1.நம்பிக்கையாளர்களின் ஒற்றுமை:  

கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள்  "ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர் " என்று நூலின் ஆசிரியர் லூக்கா விவரிக்கிறார்.  இது அவர்களிடையே நிலவிய வலுவான  ஒருமைப்பாட்டை  குறிக்கிறது.

2.சமூகப் பகிர்வு: 

நம்பிக்கையாளர்கள் யாரும் தங்கள் உடைமைகளின் மீது தனிப்பட்ட உரிமையைக் கோரவில்லை என்றும், அவர்கள் தங்களுக்குப் பொதுவான அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர் என்றும் நூலாசிரியர் சாட்சியம் பகர்கிறார்.

3.உயிர்த்தெழுதலுக்குச் சாட்சி: 

தொடக்கக்காலக் கிறிஸ்தவ சமூகத்தில் தலைமைப் பொறுப்பேற்றிருந்த திருத்தூதர்கள், மிகுந்த வல்மையுடன் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியமளித்தனர்.  இது உயிருள்ள  கிறிஸ்தவச்  சமூகத்தை ஆங்காங்கே கட்டியெழுப்பியது.  

4.வறியவர்களுக்கான ஆதரவு: 

அடுத்து, தொடக்கக்கால கிறிஸ்தவர்கள்  அவர்களின் பொதுவுடமை  பகிர்வின் காரணமாக  அவர்கள் மத்தியில்  வறுமையுற்றோர் யாரும் இல்லை. சொத்து அல்லது வீடுகளை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை திருத்தூதர்களிடம்   கொண்டு வந்து கொடுத்தனர். அவை  ஒவ்வொரு நபரின் தேவைக்கேற்ப விநியோகிக்கப்பட்டது என்கிறார் லூக்கா.  

5.பர்னபாவின் உதாரணம்: 

சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு   என்ற பர்னபாவின்   உதாரணத்தைக் கொடுப்பதன் மூலம் வாசகப் பகுதி முடிவடைகிறது.  அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார் என்கிறார் ஆசிரியர் லூக்கா.

நற்செய்தி.

ஒரு பரிசேயரும்  யூதத் தலைவர்களுள் ஒருவருமான  நிக்கதேமிடம்   இறையரசுக்குள்  நுழைய ‘நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்’  என்று கூறியதுப் பற்றி வியப்படைய வேண்டாம் என்று இயேசு கூறுகிறார். 

நிக்கதேம் அவரைப் பார்த்து,  ‘இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்ட போது, இயேசு  காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாதல்லவா?’ என்று  ஓர் உவமையைப் பயன்படுத்தி, அவ்வாறே,  ஒரு மனிதனின் வாழ்க்கையில் தூய ஆவியாரின்  வல்ல செயல் குறித்து மனிதரால் ஆய்ந்தறிய இயலாது என்கிறார்.   

ஆனாலும், நிக்கதேம்  இயேசுவின் இந்த பதிலால்  குழப்பமடைந்து, எப்படி ஒருவர் மீண்டும் தாயின் பிறக்க முடியும் என்று இயேசுவிடம் கேட்கிறார். நிக்கதேமு ஒரு சாதாரண யூதர் அல்ல. அவர் சிறந்த மறைநூல் வல்லுநரும் ஆவார். ஆகவே, இயேசு அவரிடம் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். அவர், மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்? என்று மற்றொரு கேள்வியை நிக்கதேமுவிடம் கேட்கிறார்.  

நிறைவாக, இஸ்ரயேலரை மரணத்திலிருந்து காப்பாற்ற மோசே பாலைநிலத்தில்  ஒரு பாம்பை உயர்த்திய நிகழ்வை  பழைய ஏற்பாட்டிலிருந்து இயேசு குறிப்பிட்டு, அதேபோல், மானிடமகனும்  மீட்புக்காக  உயர்த்தப்படுவார் (சிலுவையில் அறையப்படுவார்) என்று முன்னுரைக்கிறார்.  


சிந்தனைக்கு.

புதுப் பிறப்பு நிலைவாழ்வுக்கு இன்றியமையாதது.  இது தூய ஆவியாரின் செயலால் மட்டுமே நிகழ முடியும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவுப்படுத்துகிறார். ஆனாலும் இயேசு மரித்து உயிர்த்தப் பின்புதான் இப்புதுப் பிறப்பு சாத்தியமாகும். முதிலில் இயேசு மாட்சியுற வேண்டும். ஆம், தந்தை அனுப்பிய இயேசுவை ஏற்று, அவரை மையமாக வைத்து வாழ்வதில்தான் புதுவாழ்வு அடங்கியுள்ளது. 

இந்த உண்மையை அறிந்த தொடக்கத் திருஅவை இறைமக்கள் தங்கள் உடமைகளைப் பகிர்ந்து வாழ்ந்தனர். அவர்களில் சமத்துவம் இருந்தது. அவர்கள் தூய ஆவியில் பிறந்தவர்கள். அவர்களில் இயேசு குடிகொண்டிருந்தார். அதுவே, நிலைவாழ்வுக்கான புதுவாழ்வு. 

அவ்வாறே, தூய ஆவியார் நமக்குள் இருந்து நம்மை வழிநடத்தம் போது நாம் புதுவாழ்வுக்குரியவர்கள் ஆகிறோம். கிறிஸ்மா தைலம், வெண்ணிற ஆடை, பாஸ்கா திரி (ஒளி) மற்றும் திருமுழுக்குப் பெயர் இவை  நமது புதுப்பிறப்புக்கான வெளி அடையாளங்களாகும். 

முதல் வாசகத்தில் தொடக்கத் திருஅவைக்குள் உயிரோட்ட மிக்க   வாழ்வைக் கொண்டு வந்தவர்  தூய ஆவியார். உண்மையில் நிக்கதேமுவின் தேடல் அவருக்கு புதுப்பிறப்புக்கான வழியைக் கண்டடையச் செய்தது. இயேசு உலக மீட்பர் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். இயேசு எனும் நற்செய்தியை அவர் ஏற்று, மனமாற்றமடைந்தார். பிற பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவை ஏற்க மறுத்த போது, தனக்கு முன்  இருந்த தடைகளைத் தாண்டி   இயேசுவைத் தேடி வந்தார். அவரது தேடலில் அவருக்கு வெற்றி கிடைத்தது.

நம்மில் பலர் ‘இயேசுவை அறிந்தவர்களாக வாழ்கிறோம்'. ஆனால், அவரில் வாழ்வதில்லை. அவரில் முழுமையைத் தேடுவதில்லை. நமது கிறிஸ்தவ வாழ்வு கிறிஸ்துவில் பற்றற்ற வாழ்வாக முடிந்து விடுகிறது.  இப்படிப்பட்ட வாழ்வால் நாம் ஆலயத்தில் கூடும் கூட்டமாகவே காலமும் இருந்து மடிகிறோம். இறையரசைக் கட்டியெழுப்ப நமது அகவாழ்விலும் புறவாழ்விலும் தூய ஆவியார் செயல்பட அவரை அனுமதிக்க வேண்டும். இல்லையேல் நிலைவாழ்வு என்பது எட்டா கனியாகும்.

இறைவேண்டல்.

உம்மை தேடி வந்த நிக்கதேமுவுக்கு நிலைவாழ்வக்கான வழியைக் காட்டிய இயேசுவே, உமது உயிர்ப்பிலும், தூய ஆவியாரின் வழிகாட்டுதலிலும் நானும் புதுப்பிறப்பால் நிலைவாழ்வுக்கு என்னை தயாரிக்க அருள்புரிவீராக. ஆமென். 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452