உயிர்த்த இயேசுவுக்கு நானும் ஒரு ‘மரியா’! | ஆர்.கே. சாமி | VeritasTamil
2 April 2024
பாஸ்கா எண்கிழமை - செவ்வாய்
தி. பணிகள் 2: 36-41
யோவான் 20: 11-18
முதல் வாசகம்
பெந்தெகொஸ்து ஞாயிறு அன்று திருத்தூதர் பேதுரு ஆற்றிய முதல் உரையின் தொடர்ச்சியே இன்றைய முதல் வாசகம். கடந்த 50 நாள்களாக உயிர்த்தெழுந்த ஆண்டவரை பேதுரு அறிந்துள்ளார். அவர் தூய ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டு திடப்படுத்தப்பட்டார். இயேசுவின் இறப்புக்கு முன்பு அவர் மறுதலிப்புச் செயலைப் போலல்லாமல், இப்போது இயேசுவுக்கும் அவருடைய உயிர்ப்புக்கும் பொது இடத்தில் வெளிப்பைடயாகச் சாட்சியம் பகர்கிறார்.
இன்றைய பகுதி பேதுருவின் “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்’ எனும் அழைப்போடு தொடங்குகிறது.
பேதுருவின் உரைக் கேட்டு, தங்கள் கடந்த கால வாழ்வின் பாவத்தை உணர்ந்த மக்கள், பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் அண்டி ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்கிறார்கள். பேதுரு அவர்களைப் பார்த்து, “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்’ என்று அறிவுறுத்துகிறார். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தைய ஆவியாரின் வரத்தைப் பெறுவார்கள் என்று அவர் உறுதியளிக்கிறார்.
மேற்கண்ட அந்த வாக்குறுதி அப்போதுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும், ஆண்டவர் அழைக்கும் அனைவருக்கும் உரியது என்பதைபேதுரு வலியுறுத்துகிறார். அத்தோடு, “நெறிகெட்ட இந்தத் (யூத) தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பேதுருவின் உரையால் பலர் தொடப்பட்டு, கிறிஸ்துவின் மீது நம்பிக்கைக் கொண்டனர், அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் புதிய திருஅவையில் உறுப்பியம் பெற்றார்கள் என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.
நற்செய்தி
நற்செய்தியில் யோவான் நற்செய்தியாளர் மரியா என்று குறிப்பிடுபவர் மகதலா மரியா என்று அறிகிறோம். இவர் கல்லறைக்கு வெளியே நின்று, கல்லறையைப் பார்த்து அழுதுகொண்டிருக்கின்றார். பின்னர் வானதூதரிடம் பேசிவிட்டு, பின்னால் திரும்பியபோது, இயேசு நிற்பதைக் காண்கிறார்.
அடுத்து, மகதலா மரியா மற்றும் இயேசு ஆகியோரின் உரையாடல் தொடர்கிறது. அவள் திரும்பி இயேசுவைப் பார்க்கிறாள், ஆனால் அவள் முதலில் அவரை அடையாளம் காணவில்லை. அவள் ஏன் அழுகிறாள், யாரைத் தேடுகிறாள் என்று இயேசு அவளிடம் கேட்கிறார். மரியாள் இயேசுவை ஒரு தோட்டக்காரன் என்று தவறாக நினைத்து, இயேசுவின் உடலை எங்கே கொண்டு சென்றார்கள் என்று கேட்கிறாள்.
பின்னர், இயேசு மரியாவை அவள் பெயரைச் சொல்லி அழைத்தார், அவள் உடனடியாக அவரை இயேசு என்று அடையாளம் கொண்டு, 'ரபூனி' என அவரை அழைக்கிறார். அச்சூழலில், இயேசு இன்னும் விண்ணேற்றம் அடையாதக் காரணத்தால் அவரைப் பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று பணிக்கிறார்.
ஆனாலும், அவர் தந்தையாம் கடவுளிடம் ஏறிச் செல்லவுள்ளார் என்று தம் சகோதரர்களிடம் சென்று (சீடர்களிடம்) சொல்லுங்கள் என்கிறார். நேற்று மத்தேயுவும் இயேசு தம் சீடர்களை ‘சகோதரர்கள்' என்று விவரித்தை அறிந்தோம். மரியாள் இயேசுவின் அறிவுறுத்தலைப் பின்பற்றி சீடர்களிடம் சென்று, தான் இறைவனைக் கண்டதாகச் சொல்லி, அவருடைய செய்தியை அவர்களுக்குத் தெரிவிக்கிறாள்.
சிந்தனைக்கு
இயேசு உயிர்த்த நற்செய்தியை முதலில் வெளிப்படுத்தியவர்கள் பெண் சீடர்கள் என்பதை நற்செய்தி உறுதிப்படுத்துகிறது. அதன் பின்னரே, உண்மையறிந்து பேதுரு போன்ற திருத்தூதர் இயேசுவின் நற்செய்தியை உலகிற்குக் கொண்டு சென்றனர்.
இங்கே மரியாவுக்கான இயேசுவின் வெளிப்பாடு படிப்படியாக நிகழ்வதை யோவான் சுட்டிக்காட்டுகிறார்.
முதலாவதாக மரியா வெற்று கல்லறையைக் காண்கிறாள். அது அவருக்கு ஓர் ஏமாற்றம். அடுத்து, ஒரு தோட்டக்காரரைக் காண்கிறாள். அவரும் இயேசு இல்லை. இது அடுத்த ஏமாற்றம்
முன்றாவதாக, தன் அன்பு சீடரைச் சோதித்தது போதும் என்று தன்னை வெளிப்படுத்தும் நோக்கத்தில், இயேசு அவரை பெயரிட்டு ‘மரியா' என்று அழைக்க, மரியாவின் இதயக்கதவுத் திறந்தது. இயேசு அவருக்குத் தென்பட்டார்.
மின்னலாகப் பறந்து திருத்தூதர்களிடம் ஓடி, 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்று இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியம் பகர்கிறார். இயேசுவுக்கான சாட்சிய வாழ்வு இவரில் அந்த வினாடியே தொடங்கியது.
இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு, நற்செய்தியில் மகதலா மரியா இருவரும் உயிர்த்த இயேசுவுடன் புதிய உறவை ஏற்படுத்துவதோடு, தங்களைத் திடப்படுத்துகின்றனர். கிறிஸ்துவோடு உறவு இல்லையேல் கிறிஸ்தவம் இல்லை. கிறிஸ்துவோடு நாம் கொள்ளும் நெருங்கிய உறவுதான் கிறிஸ்தவத்தின் அடித்தளம் என்றால் மிகையாகாது.
பேதுரு தூய ஆவியால் நிரப்பப்பட்டிருப்பதால், இயேசுவைப் பற்றிய அவருடைய புரிதல் பல மடங்கு உறுதிப்பெறுகிறது. உயிர்த்த இயேசுவோடு கொண்ட உறவால், மகதலா மரியாவும் உருமாற்றம் பெறுகிறார். ஒருமுறை இயேசு இவரைதான் ஏழு பேய்களிடமிருந்து விடுவித்தார் (லூக்கா 8:2). அன்று அவர் பெற்ற விடுதலை இன்று அவரை இயேசுவின் மறைத்தூதுவராக உருமாற்றியது.
நாமும் திருமுழுக்காலும், உறுதிப்பூசுதலாலும் விடுதலைப் பெற்றவர்கள். ஆகவே, மகதலா மரியாவைப் போல் நம்மிலும் உருமாற்றம் ஏற்பட வேண்டும். இந்த பாஸ்கா பெருவிழா நம்மது நம்பிக்கை வாழ்வில் வளப்பத்தைக் கொண்டுவருவதோடு, நமது கிறிஸ்தவ வாழ்வின் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் துணிவைத்தரவல்லது என்பதை உணர வேண்டும்.
நாம் கிறிஸ்தவ வாழ்வின் அனுபவங்களை உலகத்தாரோடு பகிரும் துணிவை சிறிதேனும் பெறவில்லை எனில், பாஸ்கா பெருவிழா எவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டாலும் அது ஆண்டுதோறும் வந்துபோகும் ஒரு விழாதான். இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததில் அல்ல, அவரது மாட்சிமிகு உயிர்ப்பில்தான் கிறிஸ்தவம் வேரூன்றியுள்ளது.
மகதலா மரியா இயேசுவின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தவர் என்பதை அவரது நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே தான், இயேசு இறந்த பிறகும் அவரை கல்லறைவரை தேடி போகிறார். இவர் புதிய விடியலுக்காக இயேசுவைத் தேடினாள். “தேடுங்கள் கண்டடைவீர்கள்” என்னும் இயேசுவின் கூற்று மகதலா மரியா வாழ்வில் உண்மையாயிற்று. உண்மையான தேடலில் புதுவாழ்வு கிட்டும் என்பதை இவளின் தேடல் மெய்ப்பிக்கிறது.
மகதலா மரியா அவளது தேடலில் முதலில் தோல்வி அடைகிறாள். இயேசு முன்னே நின்றபோதும் அவரை அடையாளம் காண முடியவில்லை. பின்னர் அவளது ஆர்வத்தால் தடைகள் மறைந்தன. இயேசு தோன்றினார். நமது இயேசுவுக்கான தேடலில் உண்மையும், ஆரவமும், நேர்மையும். தணியாதத் தாகமும் இருக்க வேண்டும். இதற்கு மரியா ஒரு சிறந்த முன்மாதிரி. இன்று இயேசு எத்தனையோ ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மத்தியில் இருக்கிறார். நாம் அவரை அவர்களில் அடையளம் காண்பதில்லை. அவரை இலகுவாக ஆலயத்தில் மட்டும் காண விரைகிறோம்.
உயிர்த்த ஆண்டவர் இன்றும் பலருக்குத் தோட்டக்காரராகவே இருக்கிறார். அவரில் நாம் தெளிவுப் பெற்று பிறருக்கு அவரை அடையாளம் காட்டும்போது, நாமும் மகதலா மரியாவாக மாற இயலும். நம்மையும் இயேசு பெரிட்டு அழைப்பார்.
இறைவேண்டல்
கல்லறையில் மரியாவுக்கு வெளிப்படுத்திய ஆண்டவரே, என்னையும் பெயரிட்டு அழைத்து, உமது பணியில் வளப்படுத்தத் திருவுளம் கொள்வீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452