எண்ணற்ற நன்மைகளைச் செய்வோமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் சனி 
I: திப: 28: 16-20, 30-31
II: திபா :11: 4-5,7
III:யோவான் :21: 20-25

நண்பர்கள் இருவர் ஏதோ ஒரு கருத்துவேறுபாடு காரணமாக தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுள் ஒருவர் "உனக்காக நான் அதை செய்திருக்கிறேன். இதை செய்திருக்கிறேன். நிறைய கொடுத்திருக்கிறேன். தியாகம் செய்திருக்கிறேன் " என அடுக்கிக்கொண்டே போனாராம். அப்போது மற்றொருவர் மனம் வருந்தியவராய் "நட்புக்காக எனக்கு நன்மைகள் செய்தாய் என நினைத்தேன். இவ்வாறு சொல்லிக் காட்டுவதற்காகச் செய்தாய் என நினைக்கவில்லை.வேண்டுமென்றால் அனைத்தையும் எழுதித் தந்துவிடு. அவற்றை நானும் உனக்கு செய்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றாராம்.

மேற்கூறப்பட்டஇந்த சிறு நிகழ்வு நம்மில் பலருடைய மனநிலையை எடுத்துக்கூறுவதாக உள்ளது. அன்பு நண்பர்களே நற்காரியங்கள் செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் நாம். நாம் செய்கின்ற நன்மைகள் கணக்கில் அடங்காதவையாக எண்ணிப்பார்க்க முடியாதவைகளாக இருக்க வேண்டும் என்பதையே இறைவன் விரும்புகிறார். ஆனால் நாமோ ஒன்று செய்துவிட்டு அதைப் பத்துமுறை சொல்லிக்காட்டிக்கொண்டே இருக்கிறோம். இம்மனநிலை நம்மை விட்டு மறைய வேண்டும்.

புனித யோவான் தன்னுடைய நற்செய்தியை "இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்"(21:25) என்ற வார்த்தைகளால் நிறைவு செய்கிறார். இயேசு நன்மையே உருவானவராய்த் திகழ்ந்தார். தன்னுடைய பணி வாழ்வில் அவருக்கு ஓய்வெக்கக் கூட நேரமில்லை. ஏனெனில் அவர் அன்புப் பணிகளைச் செய்து கொண்டே இருந்தார். பிடித்தவர் பிடிக்காதவர் என்ற பாரபட்சமின்றி பணிசெய்தார் அவர். அவர் செய்த போதனைகள், அற்புதங்கள் வல்ல செயல்களில் ஒரு சிலவற்றை மட்டுமே விவிலிய ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள் என்பதுதான் உண்மை. 

நம்முடைய அன்றாட வாழ்வில் நன்மைகள், அன்புப் பணிகள் பல செய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பும் நாமும் அவரைப்போல கணக்கிலடங்காத நல்ல செயல்களைச் செய்து அவருக்கு சான்று பகர்வோம்.

இறைவேண்டல்
அன்பு இயேசுவே உம்மைப் போல நாங்களும் பன்மடங்கு நற்செயல்கள் புரிய வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்