பாலின சமத்துவமா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் 14 வாரம் திங்கள் 
I: தொநூ: 28: 10-22
II: திபா: 91: 1-2. 3-4. 14-15
III: மத்: 9: 18-26

"பெண்கள் கைகளின் விரல் போன்றவர்கள்
ஒவ்வொரு விரலுக்கும்
ஒரு சிறப்பு
அம்மா - பெருவிரல்
மனைவி -ஆள்காட்டி விரல்
மகள் - நடுவிரல்
சகோதரி - மோதிர விரல்
தோழி - சுண்டுவிரல்"
என்று புதுக்கவிஞர் விமல் கூறுகிறார். பெண்கள் உலகத்தின் கண்கள். பெண்கள் இல்லையென்றால் நம் வாழ்க்கை விரல் இழந்த கையைப் போல மாறிவிடும். நம்முடைய ஒவ்வொருவருடைய வாழ்விலும் பெண்கள் பெற்ற தாயாகவும், வாழ்க்கை முழுவதும் பயணிக்கும் மனைவியாகவும், பாசத்திற்கு சொந்தமான மகளாகவும், உடன்பிறப்பாகவும் துன்பத்தில் உடன் இருக்கும் நல்ல ஒரு தோழியாகவும் பயணிக்கிறார்கள். பெண்கள் இல்லை என்றால் மனித வாழ்வே இல்லை என்று நாம் அழுத்தமாகக் கூற முடியும். இவ்வுலக உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரம் பெண்கள். இப்படிப்பட்ட மதிப்பும் மேன்மை மிக்க பெண்கள் இன்னும் ஆணாதிக்க சிந்தனைகளாலும் ஒடுக்குமுறைகளாலும் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். சமூகத்தில் பெண்கள் தலைமைத்துவத்திற்கு வருவதற்கும், தங்களின் கருத்துக்களை கூறுவதற்கும் பெரும்பாலான இடங்களில் மறுக்கப்படுகின்றனர்.

"பெண்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்காத வரை ஒரு நாடு வளர்ச்சி அடையாது" என்று நம் நாட்டின் முன்னாள் பிரதமர் நேரு கூறுகிறார். இந்த காலக்கட்டத்திலும் கூட பெண்கள் தங்களுடைய குடும்பத்திலும் சமூகத்திலும் முழு சுதந்திரம் கிடைக்காமல் ஆணாதிக்க சிந்தனையால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். நம் நாட்டு அரசியலில், தலைமைத்துவத்தில், அமைச்சரவையில் பெண்களுக்கு சம இடம் கொடுக்காதது நம் நாடு வளர்ச்சி அடையாதவற்றுக்கானக் காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது.

இப்படிப்பட்ட கேவலமான ஆணாதிக்க சிந்தனையை தான் நம் ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலத்திலும் யூதர்கள் கொண்டிருந்தனர். "நான் பெண்ணாய் பிறக்காததற்காய் நன்றி " என்று ஒவ்வொரு யூத ஆண்களும் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். “பெண்களுக்கு ஆன்மாவே கிடையாது” என்ற பார்வையும் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட ஆணாதிக்கம் நிறைந்த சிந்தனைகளை இயேசு பன்னிரெண்டு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண்ணை நலப்படுத்துவதன் வழியாக சாட்டையடி கொடுக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் "மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாகிற்று" (மத் :9:22) என்று கூறி அப்பெண்ணை குணப்படுத்தி அவரின் துணிச்சலுக்கு இயேசு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார். யூதர்கள் பார்வையில் இரத்தப்போக்கு சம்பந்தப்பட்ட நோய் கொடுமையானதாகவும் அவமானத்துக்கு உரியதாகவும் கருதப்பட்டது. பொது வழிபாட்டிலும் பொது நிகழ்ச்சியிலும் பங்கெடுக்க அனுமதிக்கப்படாமல் தீட்டுபட்டவராக ஒதுக்கப்பட்டனர். இப்படிப்பட்ட பின்னணியில் நிச்சயமாக பன்னிரெண்டு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண் பல்வேறு மன உளைச்சலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் துன்பத்திற்கும் உள்ளாகி இருப்பார். இப்படிப்பட்ட தடைகளைத் தாண்டியும் தனக்கு ஒரு புது வாழ்வு இருக்கின்றது என்று நம்பி எல்லா ஆண்களையும் தாண்டி துணிச்சலோடு இயேசுவினுடைய ஆடையை தொட்டு நலம்பெற அப்பெண் முன்வந்தார். இயேசுவும் அப்பெண்ணின் துணிச்சலையும் நம்பிக்கையும் கண்டு பூரண நலம் அளிக்கிறார். இந்த வல்ல செயலானது ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு சாட்டை அடியாகவும் தீட்டு என்று நினைப்பது இயற்கையான ஒன்று என்ற சிந்தனை விளங்குவதாகவும் இருக்கின்றது.

மேலும் இன்றைய நற்செய்தியில் மற்றொரு வல்ல செயலையும் இயேசு செய்தார். உறக்க நிலையில் இருந்த தொழுகைக் கூடத் தலைவரின் மகளை உயிர்த்தெழுதல் நிலைக்கு கொண்டு வருவதன் வழியாக பெண் குழந்தைகளை இயேசு அன்பு செய்கிறார் என்பதை அறியமுடிகிறது. இயேசு செய்த இந்த இரண்டு வல்ல செயல்களும் பெண்களுக்கு புதுவாழ்வு அளிப்பதாகவும் அவர்களின் மேன்மையை உயர்த்துவதாகவும் இருக்கின்றது. இந்த இரண்டு வல்ல செயல்களும் யூத ஆணாதிக்க சிந்தனைக்கு சாட்டையடியாக இருக்கின்றது.
எனவே இன்றைய காலகட்டத்திலும் யூத ஆணாதிக்க சிந்தனையை நம்முடைய வாழ்விலும் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படிப்பட்ட நிலை மாறும் பொழுதுதான் இயேசு கண்ட இறையாட்சியை மண்ணில் கட்டியெழுப்ப முடியும். நம்முடைய அன்றாட வாழ்விலே ஆணாதிக்க சிந்தனைகளை களைந்துவிட்டு பெண்களை உயர்ந்தவர்களாக மதிப்போம். பெண்கள் இல்லையெனில் இந்த உலகம் இல்லை என்பதை உணர்வோம்.

பாலின பாகுபாட்டை ஒழிக்க நம் ஆண்டவர் இயேசுவை போல் உழைக்க முயற்சி செய்வோம். இத்தகைய சிந்தனைகளை தான் இன்றைய நற்செய்தி வழியாக நம் ஆண்டவர் இயேசு சுட்டி காட்ட விரும்புகிறார். இயேசு தன்னைப் பெற்று வளர்த்த அன்னைக்கு மதிப்பு அளித்தது போல் நாமும் நம்மை பெற்ற அன்னைக்கு மதிப்பளிப்போம். இயேசு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புதுவாழ்வு வழங்கியது போல் நாமும் பாதிக்கப்பட்ட பெண்களை நம் சகோதரியாக ஏற்று புதுவாழ்வு அளிப்போம். இவ்வாறு செய்யும் பொழுது நாமும் நம் ஆண்டவர் இயேசுவை போல் ஆணாதிக்க சிந்தனைக்கு சாட்டையடி கொடுக்க முடியும். பெண்ணின் பெருமையைப் போற்றி பாலின சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். இத்தகைய செயல்பாடுகள் நடக்கும் பொழுது இயேசு கண்ட இறையாட்சி கனவு இம்மண்ணில் வாழ்வாகக்கப்படுகிறது. பெண்ணின் பெருமையைப் போற்றி இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பான இறைவா! எங்களோடு வாழும் பெண்களை மதிப்போடு நடத்தவும், அவர்களின் பெருமையை போற்றவும், பாலின பாகுபாடு ஒழிய உழைக்கவும் பாதிக்கப்பட்ட பெண்களை சகோதரியாக ஏற்று புதுவாழ்வு கொடுக்கவும் எங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்