கடவுள் எனக்குத் தரும் மதிப்பை நான் உணர்கிறேனா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 5 வியாழன்
I: தொநூ: 2: 18-25
II: திபா 128: 1-2. 3. 4-5
III: மாற்: 7: 24-30
நம்மில் பலருக்கு நான் தான் சிறந்தவன், உயர்ந்தவன், என்னைப்போல் யாருமில்லை என்ற எண்ணங்கள் இருந்தாலும் பலருக்கு தன்னைப்பற்றிய தாழ்வு எண்ணங்கள் அதிகமாக இருக்கின்றன. தனது பலவீனங்களைப் பெரிது படுத்திக்கொண்டு தன்னால் எதுவும் இயலாது. தான் மதிப்பற்றவன். பயனற்றவன் என்று எண்ணும் மனிதர்கள் எத்தனையோ பேர். ஏன் நாமும் அதற்கு விதிவிலக்கில்லை. இத்தகைய எண்ணங்கள் கொண்டவர்களாக நாம் இருந்தால் அத்தகைய எண்ணங்களைத் தூக்கி எறிய வேண்டும் என்றே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
சில நாட்களாக நாம் முதல் வாசகத்தில் கடவுளின் படைப்புகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். கடவுள் படைப்புகளின் சிகரமாக மனிதனைப் படைத்தார்.தனது சாயலிலே அவர்களைப் படைத்தார். தன் உயிர்மூச்சை ஊதினார். இதைவிட பெரிய மாண்பும் மதிப்பும் மனிதருக்கு தேவையா என்ன? மனிதனின் மாண்பை இன்னும் மெருகூட்டும் விதமாக கடவுள் தன்னுடைய படைப்புகளுக்கெல்லாம் மனிதனைப் பெயர் சூட்டச் சொல்கிறார் என இன்றைய முதல்வாசகம் கூறுகிறது. மனிதன் வைத்த பெயரே படைப்புகளின் பெயராயிற்று. கடவுள் எத்தகைய மதிப்பை மனிதனுக்கு வழங்கி இருக்கிறார் என்பதை இதிலிருந்தே நாம் உணர முடிகிறதல்லவா. எனவே மனிதர்களாக படைக்கப்பட்ட நம் ஒவ்வொருவரும் மதிப்பு மிக்கவர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
அதுமட்டும் போதுமா? கடவுள் மனிதனுக்கு வழங்கிய இத்தகைய உயர் மதிப்பை நாமும் பிறருக்கும் நாம் தர வேண்டும்.ஆனால் மனிதன் பல வேறுபாடுகளைக் காட்டி குறைக்கிறான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் புற இனத்துப் பெண்ணின் மதிப்பை யூதர்கள்முன் உயர்த்துகிறார் இயேசு.தாங்கள் மட்டும் தான் கடவுளின் மக்கள். அவருடைய ஆசீரைப் பெற தகுதியுடையவர்கள் என்ற யூதர்களின் எண்ணத்தை அவர்கள் பாணியிலேயே சென்று இயேசு முறியடித்து, அப்பெண்ணின் நம்பிக்கை அவருக்கு பெருமதிப்பாக மாறியதை இயேசு உணர்த்துகிறார். ஆதாமின் விலாவிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டாள். இது ஆணும் பெண்ணும் சமம் என்று மட்டும் சொல்லவில்லை. ஆண் போல பெண்ணும் மதிப்புடையவள் என்பதை விளக்குகிறது. ஆம் அன்புக்குரியவர்களே நாம் கடவுளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளோம். அதேபோலத்தான் நம்மோடு வாழும் சக மனிதர்களும். இதை நாம் உணர்ந்தால் எற்றத் தாழ்வு மனப்பான்மைகளும் வேற்றுமைகளும் இருக்காது. எனவே கடவுள் நமக்குத் தந்துள்ள மாண்பை மதிப்பை உணர்ந்து வாழ்வோம்.
இறைவேண்டல்
இறைவா எம்மை மாண்போடும் மதிப்போடும் படைத்துள்ளீர் .நன்றி இறைவா. அதனை நாங்கள் உணர்ந்து வாழவும் பிறரையும் மதிக்கவும் வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்