உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

1 மே 2025
பாஸ்கா 2ஆம் வாரம் – வியாழன்
தொழிலாளரான புனித யோசேப்பு-விழா
தி.பணிகள் 5: 27-33
மத்தேயு 13: 54-58
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்!
முதல் வாசகம்.
நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய வாசகத்தில், புனித பேதுருவின் மற்ற துரத்தூதர்களின் துணிவைக் காண்கிறோம். இயேசுவின் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க அவர்கள் ஆலயத்திற்குத் திரும்பியது மட்டுமல்லாமல், தலைமைச் சங்கத்தார் தடைசெய்த இயேசுவின் திருப்பெயரை உயிர் மூச்செனக் கருதி பெருமையுடன் அறிவிக்கிறார்கள்.
கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது, மனிதர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை விட முக்கியமானது என்றும், தலைமைச் சங்கத்தார் சமய அதிகாரிகளாக இருந்தாலும் கூட. இயேசு பாவ மன்னிப்புக்காக இறந்து உயிர்த்தெழுந்தார் என்று சாட்சியமளிப்பது திருத்தூதர்களுக்கும் சீடர்களும் மட்டுமல்ல; தூய ஆவியானவரும் உடனிருந்து சாட்சியமளிக்கிறார் என்று லூக்கா விவரிக்கிறார்.
நற்செய்தி. (மத்தேயு 13: 54-58)
இன்று நாம் தொழிலாளரான புனித யோசேப்பு விழாவைக் கொண்டாடுவதால். புனித யோசேப்பு பற்றிய மற்றொரு விபரத்தை மத்தேயு நற்செய்தியிலிருந்து எடுத்துக்கொள்வது சிறப்பு.
இன்றைய நற்செய்தியில் இயேசுவை, அவரது வளர்ப்பு தந்தையாகிய யோசேப்பின் தச்சுத் தொழிலை கொண்டே இனம் கண்ட நாசரேத்து மக்களைப் பற்றி மத்தேயு குறிப்பிடுகிறார். யோசேப்பு ஓர் எளிய தொழிலாளி என்பதை மத்தேயு வலியுறுத்துகிறார்.
சிந்தனைக்கு.
புனித யோசேப்பு ஒரு முதலாளியாக அல்ல, ஒரு தச்சு தொழிலாளியாக வெளிப்படுத்தப்படுகிறார். கடவுளும் தம் ஒரே மகனுக்கு மண்ணகத்தில் ஓர் ஏழை தொழிலாளியைத்தான் தந்தையாக தேர்ந்தெடுத்தார் என்பதை நாம் நினைவில் கொள்வது சிறப்பு. நம்மில் பெரும்பாலோர், செல்வந்தருக்கு, தொழிலதிபருக்குப் பிள்ளையாகப் பிறக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கக்கூடும். அவ்வாறு நினைப்பவருக்கு இயேசுவின் பிறப்பும் அவரது வளர்ப்புத் தந்தை யோசேப்பின் பின்னணியும் நல்ல எடுத்துக்காட்டு.
‘இவன் தச்சனின் மகன் தானே!’ என்று தச்சு தொழில் செய்த யோசேப்பின் மகனுக்கு இவ்வளவு ஞானம் எங்கிருந்து வந்தது என்பதே நாசரேத்து மக்களின் கேள்வி. ஞானம் என்பது செய்யும் தொழிலைப் பின்னணியாகக் கொண்டதல்ல. அது முற்றிலும் கடவுளின் கொடை. கடவுள் நம்மை வெறுமனே படைக்கவில்லை. நமக்குப் பலவகை திறன்கள் மற்றும் கொடைகளைக் கொடுத்து, சில குறிப்பிட்ட ஆளுமை நிலைகளில் பணியாற்றவும், செயல்படவும் அழைக்கிறார் என்றால் மிகையாகாது.
புனித யோசேப்பு, எதிர்ப்பார்க்கப்பட்ட மெசியாவுக்குத் தந்தையாகும் வரத்தைப் பெற்றார். ஆனால், அவருக்கு வரலாற்றில் ஓர் இடமில்லை. பிறந்த குழந்தை இயேசுவைக் காப்பாற்ற எகிப்துக்குத் தூக்கிக் கொண்டு ஓடி மறைந்து வாழ்ந்தார். அதை அவர் கடமையாவும் பெருமையாகவும் கொண்டார். கடவுளின் திட்டம் தன்னில் நிறைவேறுவதை ஆர்வத்தோடு நிறைவேற்றினார்.
மத்தேயு குறிப்பிடுவதைப்போல், நீதிமானாக வாழ்ந்து, நேர்மையாக உழைத்து குடும்பத்தைப் பராமரித்தார். மரியாவுக்கு எவ்வகையிலும் கலங்கம் ஏற்படா வண்ணம் அரணாக இருந்து காத்தார்.
அவருக்குத் துன்பங்கள், துயரங்கள் ஏற்படாமலில்லை. அவரது நேர்மையான வாழ்க்கை தனக்கு அடுத்தடுத்த உறுதியற்ற நிலையைத் தந்தாலும், எந்தவொரு முணுமுணுப்பும் முறையீடுமின்றி, வாழ்வின் சவால்களை அப்படியே மனமுவந்து எடுத்துக்கொண்டார் யோசேப்பு. "ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்?’ எனும் திபா 27:1-க்கு ஏற்ப வாழ்ந்து காட்டினார்.
பல நாடுகளில் அனைத்துலக தொழிலாளர் தினத்தை மே 1 ஆம் தேதி கொண்டாடப்படும் வேளையில், அன்றைய தினத்தை "தொழிலாளர் புனித யோசேப்பு" என்ற கூடுதல் நினைவு விழாவாக திருத்தந்தை 12 பையஸ் ஏற்படுத்தினார்
புனித யோசப்பைப் போல் மனம் தளரா நம்பிக்கை மற்றும் நேர்மை வாழ்வை ஏற்றால்தான் நமக்கும் பெருமையும் மகிழச்சியும் கிட்டும். எத்தொழிலையும் இழிவாக கருதாமல் தொழில் செய்வோரின் நேர்மை, அதை செய்யும் நேர்த்தி மேலும் அவர்கள் அளிக்கும் உழைப்பையும் போற்றிட வேண்டும்.
இன்று, ‘உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா’ என்ற பாடலின் இவ்வரியை சிந்திப்போம்.
இறைவேண்டல்.
தச்சரின் மகனாக மண்ணுலகிற்கு வந்த ஆண்டவரே, எனது தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும், உலகிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும், வேலை தேடி அலைவோருக்கு விரும்பிய வேலை கிடைக்குபடியாகவும் உம்மை இறைஞ்சி மன்றாடுகிறேன். ஆமென்…..
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
