தூய ஆவியாரின் உடனிருப்பிலும் செயல்பாட்டிலும் அகமகிழ்வோம்! | ஆர்.கே. சாமி | ஆர்.கே. சாமி | VeritasTamil

28 மே 2025
பாஸ்கா 6-ம் வாரம் – புதன்
தி.பணிகள் 17:15, 22-18: 1
யோவான் 16:12-15
தூய ஆவியாரின் உடனிருப்பிலும் செயல்பாட்டிலும் அகமகிழ்வோம்!
முதல் வாசகம்.
ஏதென்சில் உள்ள அரயோப்பாகு மலையில் உள்ள ஒரு ஆலயத்தை புனித பவுல் பயன்படுத்துகிறார், இந்த ஆலயம் "அறியப்படாத கடவுளுக்கு" அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நகர் மக்கள் கடவுள் என்பவர் யார் என்று அறியாமலேயே ஒரு கடவுளை வழிபட்டு வந்தனர்.
அவர்கள் மத்தியில் பவுல் அடிகள் எழுந்து நின்று, நீங்கள் அறிந்திராத அந்த கடவுள் இப்போது வெளிப்படுத்தப்படுகிறார் என்று போதிக்கிறார். இந்த கடவுள்தான் படைப்பாளராகவும் உயிரைக் கொடுப்பவராகவும் இருக்கிறார் என்றும், அவர்கள் தொடர்ந்து இந்த கடவுளை நாடினால், இவர் உண்மையில் அவர்கள் சுவாசிக்கும் சுவாசத்தைப் போலவே அவர்களுக்கு நெருக்கமாக இருப்பார் என்றும் பவுல் அறிவிக்கிறார். மேலும், உண்மை கடவுள் மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் குடியிருப்பதில்லை என்றும், அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம் என்று பகிர்க்கிறார்.
தொடர்ந்து, மனிதர் கற்பனையில் உருவாக்கும் சிலைகளில் கடவுள் இருப்பார் என எண்ணுவது முறையாகாது என்று தெளிவுப்படுத்துகிறார். உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவே நம்பிக்கையின மூலைக்கல் என்பதை பவுல் விவரிக்கும்போது, சிலர் ‘இற்ந்தவர் உயிர்த்தெழுந்த்தைக் கேட்டு’ அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், “இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்” என்றார்கள். சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் தாமரி என்னும் பெண்ணும் அடங்குவார். பின்னர் பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போனார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு இறப்பதற்கு முந்தைய இரவில் தனது கடைசி இராவுணவின் போது ஆற்றிய உரையில், தூய ஆவியார் சீடர்கள் மீது வரும்போது, அவர் முழு உண்மையை நோக்கி சீடர்கள் வழிநடத்துவார் என்றும், அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை சீடர்களுக்கு அறிவிப்பார் என்றும், தூய ஆவியார் அவர் இயேசுவிடம் கேட்டு சீடர்களுக்கு அறிவிப்பார் என்றும் அறிவுறுத்துகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களைப் பற்றி சிந்திக்கும்போது, தந்தை-மகன் தூய ஆவியார் என மூவொரு கடவுளாக கடவுளை நாம் அறிந்திருக்கும் வேளையில், கடவுள் நமக்கு இன்றளவும் ஒரு மறைபொருள்தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆம், அறிவுப்பூர்வமாக கடவுளை நாம் ஒருபோதும் முழுமையாக "அறிய" முடியாது.
நாம் எவ்வளவு காலம் கற்பிக்கப்பட்டிருந்தாலும், படித்திருந்தாலும், கடவுளுடன் உறவு கொண்டிருந்தாலும், கடவுள் யார் என்பதைப் பற்றி வாழ்நாள் முழுவது அறிந்துணர முற்பட்டுக்கொண்டே பயணிக்க வேண்டும். மறையறிவுக்கு ஓர் எல்லை கிடையாது. நாம் இந்த அறிவில் முதிர்ச்சி அடைந்து விட்டதாக எண்ணவும் முடியாது கடவுளின் வெளிப்பாடு ஒவ்வொரு மகிழ்விலும், துன்பத் துரங்களிலும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.
நம்முடைய கடவுள் ஓர் அற்புதமான கடவுள். அவர் ஞானத்தாலும், வல்லமையாலும், அன்பாலும் மேலே வானத்திலிருந்து ஆட்சி செய்கிறார். அவரை காணும் நாள்வரை அவரைத் தேடிக்கொண்டே இருக்க அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தம்முடைய சீடர்களிடம், விண்ணேற்றத்திற்குப் பிறகு திருஆவையில் தூய ஆவியாரின குறிப்பிடத்தக்க மற்றும் சிறப்புப் பங்கைப் பற்றிக் கூறுகிறார். அதாவது, உண்மையின் தூய ஆவியானவர் முழு உண்மையை நோக்கி சீடர்களை வழிநடத்துவார் என்கிறார். ஆகவே, நாம் முழு உண்மையை நோக்கி வழிநடத்தப்படும் மக்களாகிறோம்.
ஆம், கிறிஸ்துவின் செய்தியின் உள்ளடக்கத்தின் சரியான பொருளை மக்கள் புரிந்துகொள்ள ஆவியானவர் உதவுகிறார், முற்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடமிருந்து பெற்ற அதே உண்மை வார்த்தைகளை நமக்கு இன்றும் உணர்த்தி வருகிறார். தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, 'தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்' (யோவா 20:22) என்கிறார். இங்கே தூய ஆவியானவர் இயேசுவின் கொடையாக, அவரிடமிருந்து ஊற்றெடுக்கின்றார்.
முதல் வாசகத்திலெ ஏதேன்சு மக்கள் கொண்டிருந்த ‘அறியாத கடவுளை’ பவுல் அடிகள் வழி கடவுள் அறியச் செய்தது போலே, நாமும் அதே கடவுளைப் பற்றிய அறிவில் முதிர்ச்சி பெற இன்று தூய ஆவியார் நம்மில் (திருஅவையில்) செயலாற்றக்கொண்டிருக்கிறார். அவரில் நாம் ‘உண்மையை’ கற்றுத்தேர்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டராகிய இயேசுவே, நீர் அனுப்பிய தூய ஆவியாரின் துணையால் உமது மூவொரு கடவுள் குடும்பத்தை எனக்கு நாள்தோறும் வெளிப்படுத்தி வருவதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். ஆமென்,
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
