நம் நம்பிக்கையின் ஆழத்தை சோதித்தறிவோமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

திருவருகைக்காலத்தின் இரண்டாம் திங்கள் 
I: எசா: 35: 1-10
II:  திபா: 85: 8-9. 10-11. 12-13
III: லூக்: 5: 17-26

மூளைவளர்ச்சி இல்லாத பெண் பிள்ளைகள் நான்கு பேரை ஒரு அருட்சகோதரி,டெல்லியில் தேசிய அளவிலே நடைபெற இருந்த சிறப்பு ஒலிம்பிக்  ஓட்டப்போட்டிக்காக பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். அவர்கள் செல்ல வேண்டிய நாள் வந்த போது பயிற்சி அளித்த அந்த சகோதரி அவர்களுடன் செல்ல இயலாத காரணத்தால் அவர்களை மனதளவில் நன்கு தயார் செய்ய வேண்டும் என விரும்பினார். அப்போது அவர்கள் நால்வரையும் அழைத்து ஒரு கேள்வி கேட்டார். "உங்களுக்குள் இருந்து யார் ஓடப்போகிறார்?" என்பதுதான் அக்கேள்வி. அடுத்த நிமிடமே அந்நான்கு மாணவிகளுமே "இயேசப்பா" என்று பதிலளித்தனர். உடனே அந்த சகோதரி "நீங்கள் தான் பதக்கம் வெல்வீர்கள்" என்று வாழ்த்தி அனுப்பினார். அந்த நால்வருள் ஒரு மாணவி தங்கப் பதக்கம் வென்று, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற போட்டிக்குத் தகுதி பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றதாகவும் தன் பகிர்விலே கூறினார். உண்மையான நம்பிக்கை நம்மிடமிருந்து பிறருக்கும் கடந்து சென்று இயேசுவை அனுபவிக்கச் செய்யும் என தான் உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார் அச்சகோதரி.

ஆம் இன்றைய வாசகங்கள் நாம் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழத்தை  சோதித்தறிய நம்மை அழைக்கிறது. நற்செய்தி வாசகத்தில் நாம்  மனதை நெகிழச் செய்யும் நிகழ்வு ஒன்றை வாசிக்கிறோம். பிறர் நலனுக்காக நாம் நம்பிக்கையோடு செய்யும் இறைவேண்டலும் முயற்சிகளும் நிறைவான பலனைத் தருகிறது என்பதை அந்நிகழ்வு மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. 

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவரை கட்டிலோடு  சுமந்து வந்த நால்வரும் இயேசுவைப் பற்றியும் அவர் ஆற்றிய அருள் அடையாளங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பார்கள். நம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையை தங்களோடு வைத்துக் கொள்ளாமல் படுக்கையிலிருந்த தம் அயலாருக்கும் அளித்து அவரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். கூரையைப் பிரித்து அவரை கீழிறக்கினார்கள் என வாசிக்கிறோம். அப்படியென்றால் அவர்களின் ஆழமான நம்பிக்கையை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். நம்முடைய நம்பிக்கை இந்த அளவுக்கு ஆழமானதா என ஆராயவும் வேண்டும். நலம்பெற்ற மனிதரும்  இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டதால்தான் தன்னைத் தூக்கி வந்த மனிதர்களின் முயற்சிகளுக்கு இசைவு அளித்தார். அத்தோடு நின்று விடாமல் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என மொழிந்த இயேசுவின் வார்த்தைகளை நம்பி ஏற்றுக்கொண்டார். நலம் பெற்றார். 

கடவுள் மேல் உண்மையான, ஆழமான நம்பிக்கையை நாம் கொண்டிருக்கும் பொழுது அந்நம்பிக்கை நம்மோடு நின்றுவிடாது. அது மற்றவர்களின் நம்பிக்கையையும் மிகுதிப்படுத்தும். அவர்கள் வாழ்வையும் முன்னேற்றும். இத்தகைய நம்பிக்கையில் தான் நாம் திருப்பலியிலும், நம்முடைய தனிப்பட்ட இறைவேண்டலிலும் பிறருக்காக மன்றாடுகிறோம். பிறர் நோய்வாய்ப்படும் போதோ அல்லது பிரச்சனைகளில் இருக்கும் போதோ "உங்களுக்காக ஜெபிக்கிறேன்" என கூறுகிறோம்.பிறரும் நம்மிடம் "எனக்காக ஜெபியுங்கள்" என கேட்கிறார்கள். இவ்வாறு செய்வதால் கடவுளிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் நாமும் வளர்வதோடு பிறரும் வளரத் துணை செய்கிறோம். இதுதான் ஆழமான நம்பிக்கையின் அடையாளம்.

இன்றைய முதல் வாசகம் மெசியாவின் வருகையின் போது சோர்ந்த உள்ளங்களெல்லாம் தேற்றப்படும், நோய்பிணிகளெல்லாம் நலமாகும் என்ற கருத்தினைக் கூறுகிறது. மெசியா வந்து தீமைகளைப் பழிதீர்ப்பார். நன்மைகளால் தம் மக்களை நிரப்புவார் என்ற ஆழமான நம்பிக்கையுடன் அவருக்காக இஸ்ரயேல் மக்கள் காத்திருந்தனர். வரவிருக்கும் மெசியா தங்கள் மனமாற்றத்தை ஏற்றுக்கொண்டு பாவங்களை மன்னித்து மீட்பளிப்பார் என எதிர்நோக்கியிருந்தனர்.

திருவருகைக் காலத்தில் ஆண்டவர் இயேசுவின் பிறப்புக்காகவும் அவரின் இரண்டாம் வருகைக்காகவும் நம்மையே தயார் செய்யும் நாமும் இஸ்ரயேல் மக்களிடமிருந்த அதே நம்பிக்கையைக் கொண்டவர்களாய் நம்பிக்கையில் நாளும் வளர்வோம்.ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டுவோம். நம் நம்பிக்கையை ஆழப்படுத்துவோம்.

 இறைவேண்டல் 
நம்பிக்கையால் எமக்கு நலமளிக்கும் இறைவா! எம் நம்பிக்கையின்மையைப் போக்கும். நாங்கள் உம்மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும், மற்றவரையும் உம்மீது  நம்பிக்கை கொள்ளத் தூண்டவும் இதனால் உம்மக்கள் நாங்கள் ஒருசேர நம்பிக்கையோடு உம்மை வரவேற்கவும் அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்