வாழ்க்கை வாழ்வதற்கே | திரு. வேளாங்கண்ணி | VeritasTamil

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகிலும் கற்கை நன்றே

என்னும் அதிவீரரான பாண்டியனின் வரிகள் (வெற்றி வேற்கை-நறுந்தொகை) இன்றும் எவ்வளவு அழகாய் அர்த்தம் தருகிறது. கற்றலின் முக்கியத்துவமே இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது. எனவே தான் பெற்றோர் தம் பிள்ளைகளின் கல்விக்காக முதலீடு செய்கிறார்கள். கல்வி வியாபாரம் ஆக்கப்படுவதற்கும் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்குப் பொருளாதார ஆதாரம் அடிப்படையாக விளங்குவதற்கும் தொடர்பு உண்டு.

ஒரு காலத்தில் கல்வி அனைவருக்கும் எட்டாத கனியாகவே இருந்தது. குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அனுபவிக்கும் தனிப்பட்ட சொத்தாக விளங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி பொதுவுடமை ஆனது. இருப்பினும் பல்வேறு பிரச்சனைகளையும் தடைகளையும் தாண்டி இன்று கல்வி என்னும் அறிவொளி பெற்று தீண்டாமை என்னும் அரக்கனை அழித்து வருகிறார்கள். இன்றளவும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் நாடோடி மக்கள் மலைவாழ் மக்கள் போன்றோர் கல்வி கற்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்த சாவல்களை எதிர்கொண்டு அனைத்து துறைகளிலும் சாதித்தோர் பலருண்டு.

எப்பாடு பட்டவாது கல்வி கற்றுவிடு. கல்வி மட்டும் தான் உன் வாழ்வை மேம்படுத்தும் என்னும் கருத்தை இன்றைய ஊடகங்களும் திரைப்படங்களும் பல்வேறு கோணத்தில் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்வு என் நெஞ்சை உலுக்கியது. புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் வழிபாடு உரிமை மறுக்கப்பட்டு மேலும் தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறையும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியை அறிந்ததும் என் மனதில் தோன்றியது இதுவே: ஆதிக்க சாதியினர் என்னும் போர்வையில் அறியாமையில் உழலும் மக்கள். இந்த உலகமே 5G.4G.7G என்று யோசித்து கொண்டிருக்கையில் ஆதிக்க சாதியினர் என்ற பெயரில் கிணற்றுத் தவளைகளாகவே பிதற்றி கொண்டிருக்கின்றனர். மருத்துவம், அறிவியல், விஞ்ஞானம், தொலைத் தொடர்பு வளர்ச்சி அணு ஆயுத வளர்ச்சி என்று உலகமே கல்வியில் மேம்பட்டு தனி மனித மற்றும் சமூக வளர்ச்சிக்காக வணிக ரீதியாக போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்னும் அடுத்தவரை அடிமைப்படுத்தி இன்புறுவது என்பது கேவலமானது.

இதனை அழுத்தம் திருத்தமாக நான் ஏன் பதிவு செய்கிறேன் என்றால், இத்தகைய ஏற்றத் தாழ்வுகளைச் சிறப்புத் தேவைகள் உடைய அனைவருமே அனுபவிக்கிறார்கள். இன்று பரவலாக அனைத்து வகை மாற்றுத்தினாளிகளும் கல்வி கற்பதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்காக பல தரப்பட்ட விழிப்புணர்வு அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் மூலம் ஏற்படுத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் கல்வி என்னும் ஞான ஒளி ஏற்றப்பட்டுள்ளது. சிறப்புப் பள்ளிகள் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் போன்ற பல திட்டங்களால் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி மற்றும் எதிர்கால திட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் தங்களது பயிற்றுனர்களை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று கல்வி கற்பிக்கும் சூழ் நிலையும் அமைந்துள்ளது.

நாம் இன்னும் வளர வேண்டியிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த சமூக கட்டமைப்பு அனைத்துமே ஏதுவாக அமைய வேண்டும். அதாவது இங்கு எல்லோருக்கும் எல்லாம் நிறைவாக கிடைத்திடல் வேண்டும். கல்வி என்னும் பேரொளியாலே இது சாத்தியம்.இனி வரும் நாட்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான நாட்களாக அமைய வாழ்த்துக்கள்.

- திரு. வேளாங்கண்ணி

 

(இந்தப்பதிவு 'குவனெல்லிய சபை' நடத்தும் 'அன்பின் சுவடுகள்' என்ற கத்தோலிக்க மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.)