வீடு வாடகைக்கு விடப்படும் | புலவர்.சி.ஆரோக்கியம் | VeritasTamil

புதிய வீடு இரண்டு படுக்கையறைகள் விசாலமான நடுக்கூடம் சமையல் அறை உயர் வகையான டைல்ஸ் பதித்தத் தரை கார் நிறுத்தம் இடம் வங்கி கடன் நகை கடன் பெற்று வீடு கட்டி முடிக்கப்பட்டது. வீட்டைக் கட்டிப்பார். கல்யாணத்தைச் செய்துபார் என்பதை அனுபவத்தில் தெரிந்துக்கொள்ள முடிந்தது.

வீட்டைக் கட்டி முடித்தவுடன் இரண்டு பிரச்சனைகள் எழுந்தன. இவ்வளவு அழகான வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுவதா? நாமே குடியிருப்பதா? கொஞ்சம் குழப்பமாக இருந்தது. வீட்டிலுள்ளவர்கள் எதிரும் புதிருமாகப் பேசினார்கள்.

வீட்டை வாடகைக்கு விட்டால் வாடகை பணம் வரும். வாங்கிய கடனை அடைக்கலாம். கடன் சுமை குறையும். வீட்டைக் கட்டி நாமே கொஞ்ச நாளைக்கு இருக்கலாம். வீட்டைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளலாம். மனம் சந்தோஷப்படும். பார்க்கின்றவர்கள் கவுரமாகவும் நினைப்பரர்கள்.

வாடகைக்கு விட்டால் வீடு வீணாகிவிடும். பிள்ளைகள் கிறிக்கி வைப்பார்கள். ஏன் என்று கேட்டால் வருத்தம் ஏற்படும். இப்படி இரண்டு விதமான குழப்பதில் இருந்தேன்.

என் வாழக்கைத் துணைவியார் தெளிவான முடிவில் இருந்தார். வாடகைக்கு விட்டுவிடுங்கள். வாடகை மாதந்தோறும் வரும். அத்துடன் கொஞ்சம் பணத்தைச் சேர்த்து கடன்தவணைக் கட்டிவிடுலாம். கடனும் அடையும். நாலு பேரு நாலுவிதமாகக் கூறுவார்கள். நாம்தான் தெளிவாக இருக்க வேண்டும். அதிலும் நியாயம் இருப்பது தெரிந்தது. முடிவாக வீடு வாடகைக்கு விடப்படும் என்று அட்டை தொங்கவிடப்பட்டது. புது வீடு என்பதால் பலரும் வாடகைக்கு வந்து பார்த்தார்கள். ஆனால் யாரும் உடனே அட்வான்ஸ் கொடுக்க முன்வரவில்லை. சிலருக்கு வீடு பிடித்திருக்கிறது. ஆனால் வாடகை அதிகம் என்று முணுமுணுத்தார்கள். சிலர் கூட்டுக் குடும்பமாக இருந்ததால் உறுப்பினர்கள் அதிகம் இருந்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வீடு கொடுக்க நானே மறுத்துவிட்டேன்.

இடையில் ஒருவர் வந்தார். ஐயா நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னிடம் கார் இல்லை. நான் என் மனைவி இரண்டு பிள்ளைகள். அவ்வளவுதான். வீடு எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு வீட்டை வாடகைக்கு விடுங்கள். நான் எல்லா இடமும் தேடி அலைந்துவிட்டேன். நான் குடியிருக்கும் வீட்டுக்காரர் இந்த மாதமே வீட்டைக் காலி செய்து கொடு என்கிறார். நீங்கள் வீட்டு வாடகையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எனக்கு மாதச் சம்பளம் குறைவு. நீங்கள் கிறித்துவராகத் தெரிக்கீர்கள். எனக்கு மனம் இறங்கி வாடகைக் குறைத்து எனக்கு வீடு கொடுங்கள் என்றார்.

எனக்கு வீட்டு வாடகையைக் குறைப்பதில் உடன்பாடு இல்லை. எவ்வளவு செலவு செய்து வீடு கட்டியிருக்கிறேன். வாடகையை எப்படி குறைப்பது? முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். நான் கிறிஸ்துவன் என்பது உண்மைதான். வருகின்றவர்களுக்கு வீட்டு வாடகையைக் குறைத்துக் கொடுத்தால் என்நிலை என்ன ஆவது? இதில் ஏழை எளியவர் என்று பார்க்க முடியாது. நீ ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் சென்று வீடு பார். அங்கு ஒருவேளை நீ எதிர்ப் பார்க்கும் நிலையில் வீடு கிடைக்கும் என்று அறிவுரை கூறி அனுப்பிவிட்டேன். அவரும் தயக்கத்துடன் சென்றுவிட்டார். இதுவே சரி எனப்பட்டது.

காலம் கடந்தது. ஒரு கத்தோலிக்க மாத இதழின் ஆசிரியரிடமிருந்து சென்ற மாதம் ஒரு போன் வந்தது. நலம் விசாரித்தார். இந்தமாதம் மரியாளும் மாட்டுத் தொழுவமும் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். நானும் அப்படியே செய்கிறேன் என்றேன்.

கட்டுரை எழுத ஆரம்பித்தேன். சூசையும் மரியாளும் குடும்பக் கணக்குக் கொடுக்க நாசரேத்திலிருந்து தாவீதின் ஊராகிய பெத்தலேமுக்கு செல்கிறார்கள்.மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். வேறுவழியில்லாம் அரசனின் கட்டளையை ஏற்று தங்கள் சொந்த ஊருக்குப் போகிறார்கள். ஊரில் தங்குவதற்கு இடம் தேடுகிறார்கள். எல்லாரும் தம் சொந்த ஊருக்குக் கணக்குக் கொடுக்க வந்துவிட்டார்கள். அதனால் சூசைக்கும் மரியாளுக்கும் தங்குவதற்கு வீடு கிடைக்கவில்லை. வேறுவழியில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மாட்டுத் தொழுவத்தில் சென்று தங்குகிறார்கள். கணக்குக் கொடுத்துவிடுகிறார்கள். மரியாளுக்குப் பேறுகால நேரம் வந்தது. மரியாள் தனிமையில் இம்மானுவேலைப் பெற்றேடுக்கிறார். தேவதூதர்கள் வாழ்த்தி வணங்குகிறார்கள்.

சூசை மரியாளுக்குத் தங்குவதற்குத் தங்கள் வீடுகளில் இடம் கொடுத்காதவர்கள் பற்றி மிகவும் வருந்தினேன். கல் நெஞ்சம் படைத்தவர்கள் இரக்கக் குணம் இல்லாதவர்கள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் பெத்தலேகம் வாசிகள் ஒருவர் கூட இரக்கங் காட்டித் தங்குவதற்கு இடம் கொடுத்திருக்கலாம் என்று கடுமையாக சாடி எழுதினேன். பாவம்! சூசையும் மரியாளும் என்ன பாடுபட்டார்களோ? என்று வருத்தத்தை வெளிப்படுத்தி எழுதினேன்.

அப்போது என் உள்ளத்தில் ஓர் குரல் ஓங்கி ஒலித்தது. எனக்கு அதைத் தவிர்க்க முடியவில்லை. அன்று சூசைக்கும் மரியாளுக்கும் இடம் கொடுக்காதவர்கள் கல்நெஞ்சம் படைத்தவர்கள் என்றும் இரக்கக் குணம் இல்லாதவர்கள் என்று நீ எழுதினாய் உண்மைதான்.ஆனால் இன்று உன்னிடம் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் வாடகைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு வாடகைக்கு விடுங்கள் என்று கெஞ்சினார்கள். இந்தக் கெஞ்சுதல் உன் மனத்தைக் கரைய வைக்கவில்லையே! சூசை மரியாளுக்கு மனம் இரங்கும் நீ இந்த வாடகைக் கேட்டவர்க்கு மனம் இரங்கவில்லையே ஏன்? பிறருக்கு அறிவுரை கூறுவதும் எழுதுவதும் எளிது. ஆனால் சொந்த வாழ்வில் பின்பற்றுவது கடினம். இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! என் வாழ்வு என்று வரும்போது லாப நஷ்டம் கணக்குப் பார்க்கிறேன். நீதி நெறிகள் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அதிக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

ஏழைக்கு இரக்கம் காட்டுகிறவன் பாக்கியவான் என்று விவிலியம் கூறுகிறது. ஏழை லாசருக்கு இரக்கம் காட்டாத செல்வன் எரிநரகத்திலும் ஏழை லாசர் இறைவன் மடியிலும் இருப்பதும் அறிந்திருக்கிறோம். உன் செல்வத்தை எல்லாம் விற்று ஏழைக்களுக்குக் கொடுத்துவிட்டு பின் என்னைத் தொடர்ந்து வா என்று இயேசு சொன்னது எல்லாம் எங்கே போனது?. இறைவாக்கை வாழ்வாக்க வேண்டும். வாழ்ந்து காட்டவேண்டும். எதிலும் சொல்வீரராக இல்லாமல் செயல் வீரராக விளங்க வேண்டும்.

உலகத்தைச் சுட்டிக்காட்ட ஒருவிரல் இருக்கிறது. உன்னை சுட்டிக்காட்ட நான்கு விரல்கள் இருக்கின்றன. சொல்வதும் செய்வதும் ஒன்றாகட்டும்.

- புலவர்.சி.ஆரோக்கியம்

 

(இந்தப்பதிவு 'குவனெல்லிய சபை' நடத்தும் 'அன்பின் சுவடுகள்' என்ற கத்தோலிக்க மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.)