நிலைவாழ்வுக்கே இறையாட்சி, செல்வத்திற்கல்ல! | ஆர்.கே. சாமி | VeritasTamil

22 ஜூன் 2024  
பொதுக்காலம் 11ஆம் வாரம் - சனி
2 குறிப்பேடு 24: 17-25
மத்தேயு  6: 24-34


நிலைவாழ்வுக்கே இறையாட்சி, செல்வத்திற்கல்ல!

  
முதல் வாசகம்.

கடந்த சில நாள்களாக இரண்டாம் அரசர் நூலிலிருந்து வாசகங்கள் நமக்கு கொடுக்கப்பட்டிருந்தன. இன்று இரண்டாம் குறிப்பேட்டிற்கு மாறுகிறோம், ஏனெனில், நேற்றைய வாசகத்தில் இடம் பெற்ற குரு யோயாதாவின் கதையை இதிலும் காண்கிறோம்.

யோயாதா என்ற குரு இளம் யோவாசை அரசி அத்தாலியாவிடம் இருந்து பாதுகாத்ததை நேற்று அறிந்தோம்.   ஆறு வருடங்கள் யோவாசைப் பாதுகாத்தப்பின்  குரு யோயாதா,  யோவாசை  மறைவிலிருந்து வெளியே கொண்டு வந்து அரசராக முடிசூட்டினார்.  இவரது ஆட்சியின் காலத்தில் சிலை வழிபாடு அழிக்கப்பட்டதோடு, அன்னிய தெய்வங்களின் ஆலயங்களும் தகர்த்தெறியப்பட்டன. மக்கள் ஒரே கடவுளான ‘யாவே’  வழிபாட்டிற்குத் திரும்பினர் 

ஆனால், குரு யோயாதாவின் மரணத்திற்குப் பிறகு, அரசன் யோவாசு பாதை மாறினான். அன்னிய தெய்வ வழிபாடு மீண்டும் நிலைநாட்டப்பட்டது.  இதன்  பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார்.

இத்தருணத்தில்,  கடவுள் தம்  ஆவியை  குரு யோயாதாவின் மகனான  செக்கரியாவின் மேல் இறங்கச் செய்தார்.  செக்கரியா  மக்கள் முன் எழுந்து அவர்களை நோக்கி: “இதோ, கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்” என்று எச்சரித்தார். 

உண்மை கடவுளைச் சார்ந்து உண்மை உரைத்த சக்கரியாசை அரசன் யோவாசு  விட்டுவைக்கவில்லை. அரசனின் உதவியோடு மக்கள் சக்கரியாவை  கொன்றனர். அவர் இறக்கும்போது, “ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!” என்று கூறி உயிர்விட்டார்.  கடவுளின் தண்டனை தீர்ப்பு அவர்கள் மேல் வந்தது.  சிரியாப் படையினர் அரசன் யோவாசுக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்றனர்.  

நிறைவாக,  குரு யோயாதாவின் மகனான சக்கரியாசைக் கொன்றதன் காரணமாக   யோவாசுவை  அவனது அலுவலர்கள் கொன்றார்கள். அவனது உடலை  அரசக் கல்லறையில் அடக்கம் செய்யாமல்  தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்தார்கள்.   


நற்செய்தி.


இயேசு தம் சீடர்களிடம்  “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது, அதாவது நீங்கள் கடவுளுக்கும் உலக செல்வத்திற்கும் சேவை செய்ய முடியாது என்கிறார்.  . நீங்கள் ஒருவரை வெறுத்து மற்றவரை அன்புசெய்வீர்,  அல்லது ஒருவரிடம் அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள், மற்றவரை இகழ்வீர்கள்” என்று மேலும் விவரித்தார். அடுத்து, உங்கள் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாதீர்கள், நீங்கள் என்ன உண்பது, என்ன குடிப்பது, என்ன உடுத்துவது  என்ற கவலை வேண்டாம்.  உணவை விட உயிர் மேலானது, உடையை விட உடல் மேலானது என்றதோடு, மனிதரின் வாழ்வை வானத்துப்பறவைகளோடு ஒப்பிட்டுப் போதிக்கிறார். 

வானத்துப் பறவைகள்   விதைப்பதும் இல்லை; அறுவடையைக் களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை.  கடவுள்தான் அவற்றுக்கு   உணவளிக்கிறார் என்றும், நீங்கள் பறவைகளை விட மதிப்புமிக்கவர் என்று  பறவைகளோடு  ஒப்பிட்டுக் காட்டுகிறார்.  முடிவாக,  நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால்  உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்ய மாட்டாரா? என்ற கேள்வியோடு, கடவுளின் ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடினால்,  இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும் என்றும் முடிக்கிறார்.


சிந்தனைக்கு.

‘இன்றிரிப்போர் நாளை இங்கே இருப்தென்ன உண்மை. இதை எண்ணிடாமல் சேர்ந்து வைத்துக் காத்து என்ன நன்மை’ என்ற இந்த வரிகள்தான் நேற்றைய மற்றும் இன்றைய நற்செய்திகளின் மையச் செய்தியாக உள்ளது.  

அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, கவலைப் படாத மனிதர் என்று யாருமே இல்லை. ஆண்டான் ஆனாலும் ஆண்டி ஆனாலும் ஏதோ ஒரு கவலைக்கு  உட்பட்டிருப்பார்கள். ஆனால் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கவலைப்படாமல் இருக்க  அறிவுறுத்துகின்றார்.  இது சாத்தியமா என்ற கேள்விதான் நம்மில் எழும். இது சாத்தியம் இல்லை என்றால், இயேசுவில் நம்பிக்கை என்பது வெளிவேடம். சாத்தியம்தான் என்றால், இயேசுவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப வாழ்ந்து பார்க்கத் துணிய வேண்டும். இரண்டும் கெட்டான் நிலைக்கு ஆளாகக்கூடாது. ஏனெனில், ஆண்டவர் இன்று கூறுவதைப்போல். நம்மில் எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. 

புனித பேதுரு அவரது முதல் திருமுகத்தில் 5:7 ல்  “உங்கள் கவலையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள், ஏனெனில் அவர் உங்கள்மேல் கவலையாக இருக்கின்றார்” என்று நம்மைத் திடப்படுத்துகிறார்.  நம்மில் பலர் புறவினத்தாரின் ஆடம்பர மற்றும் செல்வாக்கான வாழ்வால் வெகுவாக ஈர்க்கப்படுகிறோம்.  குறுக்கு வழியில் செல்வம் திரட்ட முற்படுகிறோம். நாளுக்கு நாள் குற்ற உணர்வு மறைந்து, சாத்தான் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு அடிமை வாழ்வுக்கு ஆளாகிறோம். 

இயேசு, வாழ்க்கைக்கு பணமோ செல்வமோ கூடாது என்று கூறவில்லை. இன்றைய உலகில் பணம் இல்லாதவன் ‘பிணத்திற்குச் சமம். எனவே பணம் சம்பாதிப்பதும் செலவு செய்வதும் கடவுளின் விருப்பத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பது இயேசுவின் அறிவுறுத்தல். இதில் நேர்மையும் உண்மையும் பொதிந்திருக்க வேண்டும். 

முதல் வாசகத்தில், குரு யோயாதாவால் அரசராக அருள்பொழிவுச் செய்யப்பட்டு நல்லாட்சி செய்த அரசன் யோவாசு, பின்னர் தீயவனாக மாறினான். உண்மை கடவுளைத் துறந்து, அன்னிய தெய்வத்திற்கு அடிமையானான். இறுதியில் கடவுளின் சினத்திற்கு ஆளாகி அவனுடைய சொந்த அலுவலர்களால் கொல்லப்பட்டான்.  

குறிப்பாக நிதிச் சரிவு பொருள்களின்  விலைவாசி உயர்வால் எப்படி குடும்பத்தைக் காக்கப் போகிறோம்  என்று கவலைப்படுகிறோம்.  மற்றவர்களால் இகழப்படும் நிலைக்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சத்தால் தூக்கத்தை இழக்கிறோம்.   ஆயினும்கூட, இன்றைய நற்செய்தியின்படி  கடவுளின் ஆட்சிக்கு  நம் வாழ்வில்  முன்னுரிமை கொடுத்தால், மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும். 

மாறாக,  பேராசையும் கடவுளுக்கு எதிரான தீய வாழ்வும் வாழ்வோர்  நிம்மதியாக உறங்குவதில்லை.   குறுக்கு வழியில் ஆதாயம் தேடி, ஆடம்பரமாக வாழ்பவர் ஒரு காலத்தில் கடவுளால் கைவிடப்படுவர். இதை உணர்ந்து, நம்பிக்கையோடு, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்  சீடர்களாக வாழ்வதில் பெருமை கொள்வோம். 


இறைவேண்டல்.


‘எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது’ என்ற உண்மையில் வாழ என்னை அழைக்கும் ஆண்டவரே, நான் என்றும் இறையாட்சிக்கு உட்பட்ட சீடராக வாழ உதவியருள்வீராக. ஆமென். 

  
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452