நோன்பில் வெளிவேடம் அருவருக்கத்தக்கது. | ஆர்.கே. சாமி | VeritasTamil

16 பிப்ரவரி  2024,                                                                                          

திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி
எசாயா 58: 1-9a

மத்தேயு 9: 14-15 

 

நோன்பில் வெளிவேடம் அருவருக்கத்தக்கது.

முதல் வாசகம்.

நோன்பு இருத்தல் குறித்து சிறந்ததொரு விளக்கத்தை இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் முதல் வாசகமானது எவ்வாறு அக்காலத்தில் இஸ்ரயேலர் சடங்குப்பூர்வமாக, கட்டாயத்தின் பேரில் நோன்புகளை மேற்கொண்டனர் என்பதையும், அதனை கடவுள் எவ்வாறு கண்ணோக்கினார் என்பதையும் விவரிக்கிறது.
கடவுள் தம்முடைய மக்களான யாக்கோப்பின் வழிமரபில்  பாவத்தைக் காண்கிறார். அதில் அதிருப்தி அடைகிறார். அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த பாவங்களைப் பார்க்க  விருப்பமில்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் இந்த இழி நிலையை கடவுள் அவர்களுக்கு எசாயா இறைவாக்கினர் வழியாகச்  சுட்டிக்காட்டுவதை வாசிக்கிறோம். 

அவர்கள் தங்களைப் பற்றி மிகப் பெருமையாகப் பாராட்டிக்கொள்கிறார்கள்.  அவர்களது  சொந்த வெளிவேடத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள்: "நாங்கள் உண்ணாவிரதம் இருந்து, எங்களை வருத்திக்கொண்டுள்ளோம். நாங்கள் தினமும் கடவுளைத் தேடுவது மட்டுமல்லாமல் (வச. 2),  சில குறிப்பிட்ட காலங்களை  மிகவும் புனிதமாக் கடைப்பிடிக்கிறோம்” என்று மார்த்தட்டிக்கொள்கிறார்கள். 
இதனால், கடவுள் அவர்களைப் பெரிதும் ஏறெடுத்துப் பார்ப்பார்  என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். 
கடவுள் ஏன் அவர்களின் நோன்பை ஏற்கவில்லை, அல்லது அவர்களின் நோன்பு நாட்களில் அவர்கள் செய்த வேண்டுதல்களுக்குப் பதிலளிக்கவில்லை என்பதற்கான உண்மையான காரணம் என்னவெனில், அவர்களின் நோன்பு பொருளற்றதாக இருந்தது. 
அவர்கள் நோன்பு இருந்தார்கள், ஆனால் அவர்கள் பாவங்களில் நிலைத்திருந்தார்கள். நினிவே   மக்களைப் போல  ஒவ்வொருவரும் அவரவர் தீய வழியை விட்டுத் திரும்பவில்லை. அவர்கள் நோன்பிருக்கும் நாளில் தங்களுக்கென ஆதாயத்தையே நாடினார்களேயொழிய,  வேலையாட்களில் கூட மனிதநேயத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்த முதல் வாசகப் பகுதியானது, எசாயா நூலின் முன்றாவது பகுதியாகும். இப்போது யூதர்கள் பாபிலோனில் அடிமை வாழ்விலிருந்து விடுதலைப்பெற்று தாய்நாடு திரும்பிவிட்டனர். கடவுள் அவர்களிடையே பெரிய மனமாற்றத்தை எதிர்ப்பார்கிறார். ஆதலால் அவர்களின் பாவ வாழ்வை எசாயா வழியாக நினைவூட்டுகிறார். சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? என்ற கேள்வியை அவர்கள் முன் வைக்கிறார்.

நற்செய்தி
 
நற்செய்தியில், இயேசு நோன்பிருத்தலின் தன்மை பற்றி அறிவுறுத்துகிறார்.  மணமகன் இருக்கும் போது, திருமண விருந்தாளிகள் நோன்பு நோற்பதில்லை என்பதை அவர் தன்னிடம் கேள்விகேட்ட திருமுழுக்கு யோவானின்  சீடர்களுக்குப் படிப்பிக்கிறார். 

யோவானின் சீடர்களும், பரிசேயர்களும் அதிகமாக நோன்பு இருக்க, இயேசு தம் சீடர்களை நோன்பு இருக்க வலியுறுத்தவில்லை. வெளிவேடமான நோன்பைவிட, உள்ளரங்கரமான தூய்மையும், பிறரன்புமே மேலானது என்பதைத் தம் சீடர்களுக்கு அனுபவ வாயிலாகக் கற்றுத் தந்தார் இயேசு. இப்படிப்பினையை ஓர் உவமையின் வழியாக எடுத்துரைக்கிறார். 

மணமகன்  உடனிருக்கும்போது அவருடைய தோழர்கள் நோன்பிருப்பதில்லை. அப்படி நோன்பிருந்தால் அது அர்த்தமற்றதாகிவிடும் என்றும், இயேசு தம்முடைய சீடர்களோடு  இருப்பாதல் சீடர்கள் நோன்பு இருக்க வேண்டி அவசியம் இல்லை என்கிறார்.   
 
சிந்தனைக்கு.


இயேசுவின் படிப்பினையில் புரட்சி இருக்கும். பழையதை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றவும் வலியுறுத்தவம் இயேசு மனுவுரு எடுக்கவில்லை.

அவர் குறிப்பாக யூதர்களின்  சமய, சமூக பழக்க வழக்கங்களில் 
 பெரும் புரட்சி கொணர்ந்தார். பழைய முறைகள் மறைந்துபோக, புதிய முறைகள் உதயமாக தமது போதனைகளிலும் கேள்விகள் கேட்போரிலும் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்டார். அக்காலத்தில்,  யூத சமய வழக்குகளைப் பின்பற்றாத மக்களைப் ''பாவிகள்'' என்று பட்டம் சூட்டினர் பரிசேயர்.

நம்மில் பலரும் ஏன், எதற்கு நோன்பு என்பதை அறியாமலேயே நோன்பை ஏற்கிறோம். முதல் வாசகத்தில் கடவுளின் நோன்பு பற்றிய அறிவுறுத்தலும்  நற்செய்தியில், இயேசுவின் படிப்பினையும்  நம்மைப் புதுப்பித்துக்கொள்ள அழைக்கின்றன. நோன்பு என்பதை, புதிய சிந்தைனைக்கு ஏற்ப கடைப்பிடிக்க  வேண்டும். தவக்காலமும் நோன்பும் ஆண்டுதோறும் வந்துபோகும் உப்புசப்பற்ற, பழக்கப்பட்ட காலம் அல்ல. அது கடவுளின் கொடை.

இயேசு நோன்புக்கு எதிரானவரோ அல்லது அதை  வெறுப்பவரோ அல்ல.   அவரும் பாலைநிலத்தில், ஒருநாள் இரு நாள் அல்ல நாற்பது இரவும் பகலும் நோன்பு இருந்தார்(மத் 4:1). மேலும் . நோன்பின் மகத்துவத்தைப் பற்றி கூறும்போது, பேய்கள் கூட நோன்பிருந்து மன்றாடும் இறைவேண்டலுக்கு அஞ்சி   வெளியேறும் என்கிறார் (மத் 17:21) 

புனித பிரான்சிஸ் அசிசி போன்ற புனிதர்களின் வாழ்வில், அவர்கள் முழு மனதுடன் "இறைவனிடம் திரும்பியது" என்பது இன்றைய நற்செய்தியில் இறைவன் நமக்கு முன் வைக்கும் மூன்று நடைமுறைகளுக்கு  ஒத்திருப்பதை உணரலாம்: இறைவேண்டல், நோன்பு  மற்றும் தர்ம செயல்கள். புனித பிரான்சிஸ் அசிசி  தனது   ஆடைகளை ஏழைகளுக்குக் கொடுத்தார், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக் கொண்டார். அவ்வாறே அன்னை திரேசா உட்பட பல புனிதர்களும் செய்தனர். இதனால் அவர்களுடைய   நோன்பு கடவுளுக்கு ஏற்புடையதாக இருந்தது. 

எனவே, நமது நோன்பு:

1.நம்மை கடவுளோடு ஒன்றிக்க வேண்டும் (இறைவேண்டல்); 
2.நமக்குள் அமைதி கொண்டு வரவேண்டும் (நோன்பு); 
3.மற்றும் பிறரோடு நம்மை  ஒன்றிக்க வேண்டும் (தர்ம செயல்கள்) 

மேற்கண்ட இந்த மூன்றும் நமக்குள் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அடுத்து வரும் நமது சிறந்த சீடத்துவக் கிறிஸ்தவ வாழ்வுக்கு ஒரு பயிற்சி காலமாக இத்தவக்காலம் அமையட்டும்.


இறைவேண்டல்.


தியாகச் சுடராகிய இயேசுவே, உமது புரட்சிமிகு படிப்பினையும் செயலும் என்னை உமக்குகந்த சீடராக மாற்றுவதாக. ஆமென் 


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452