இதயத்தின் ஓசை | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

இதயத்தின் ஓசை

இது துடிக்கும் இதயத்தின் ஓசை மட்டுமல்ல. வாஞ்சையோடு வாழத் துடிக்கும் உயிரின் ஓசை. புதிதாகப் பிறப்பெடுக்கத் துடிக்கும் ஜனனத்தின் ஓசை.

ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக மலர்ந்து கொண்டிருக்கும் பரிமாணத்தின் வெளிப்பாடுதான் ஒவ்வொரு பிறப்பும்.

உயிர்களின் ஒவ்வொரு பிறப்பும் ஒரு வாழ்வுச் செய்தியைத் தெரிவிக்கிறது. அதுதான், 'அன்பு, நம்பிக்கை, பற்றுறுதி'. இதயத்தின் துடிப்போடு இந்த வாழ்வுச்செய்தியும் இணைந்தே ஒலிக்கின்றது. இவற்றைக் கண்டுணர்ந்தவர்கள்தான் புதிய பிறப்பெடுக்கிறார்கள். புதிய வாழ்வையும், விடியலையும் காண்கிறார்கள்.

டேவ் கேரோவே பல வருடங்களாக NBC தொலைக்காட்சியில் TODAY என்னும் தொடர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டிருந்தார். அவரிடம் பேட்டி காண வந்த ஒருவர், "கிறிஸ்துமஸ் பற்றிய உங்களின் புரிந்துணர்வு என்ன?" என்று கேட்டார். அவர் பதில் மொழியாக, "நான் உள்பட ஏறக்குறையப் பத்தில் ஒன்பது பேர் கிறிஸ்துமஸ் பரிசாக உலகம் சார்ந்த பொருட்களையே சொல்வது என் கவனத்தை ஈர்த்தது. இந்தப் பொருள்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி வரையறைக்கு உட்பட்டது, தொடர்ந்து நீடிக்கவில்லை. எதையும் வாங்கும் அளவுக்குப் பணம் படைத்தவன் நான். எனினும், என் உண்மையான தேவையை, உள்ளார்ந்த 19

விருப்பத்தை என்னால் விலைகொடுத்து வாங்க முடியாது என்று கண்டு கொண்டேன். 'ஆம்'. நான் விரும்பும் பரிசு அலங்கரிக்கப்பட்ட பரிசு அல்ல. ஆனால், 'அது இல்லாமல் எனக்கு கிறிஸ்துமஸ் இல்லை” என்றார்.

பேட்டி காணவந்தவர் என்ன 'அது' என்று ஆவலுடன் கேட்டார். அதுதான் "பற்றுறுதி, எதிர்நோக்கு, அன்பு" என்றார். மேலும் அதற்கான விளக்கத்தையும் சொன்னார்.

''எனக்காக" - எனக்குப் பற்றுறுதி வேண்டும். வாழ்வில் மனம் உடைந்த சூழல்களிலும், துன்ப துயர நேரங்களிலும், கசப்பான அனுபவங்களிலும் சரியான ஒளியைக்காண...

''நான் அன்பு செய்பவர்களுக்காக" - எனக்கு நம்பிக்கை

வேண்டும். மிகுதியான நம்பிக்கை, அதுவும் எதிர்காலத்தின்மீது நம்பிக்கை. அந்த நம்பிக்கை நான் அன்பு செய்பவர்களுக்கு ஊக்கமளிப்பதற்க்காகவும், புது வாழ்வு தருவதற்காகவும்...

"என்னுடைய உலகத்திற்காக" - எனக்கு அன்பு வேண்டும். மிகப் பெரிய சிக்கல்கள், குழப்பங்கள், உடல் நலக் குறைவுகள், தேவைகள் வரும்போது, உலகம் எனது குடும்பம் என்ற உணர்வோடு, உடன் இருக்கவும், தீர்வு காணவும்...

இவ்வாறு அவர் சொல்லி முடித்ததும், பேட்டி காண வந்தவருக்கு உண்மையான கிறிஸ்துமஸ் பரிசின் அர்த்தம் புரிந்தது.

கிறிஸ்துமஸ் விழாவிற்கு நாம் ஆசிக்கின்ற பரிசு என்ன? 'நமக்காக.., நாம் அன்பு செய்பவர்களுக்காக, நம் உலகத்திற்காக... பற்றுறுதி, நம்பிக்கை, அன்பு இவற்றைப் பெறவேண்டுமென்று நினைத்தால், கிறிஸ்துவோடு நாமும் புதுப்பிறப்பாவோம், அப்போது,

நம் இதயத்தின் லப்...டப்... ஒலி இன்னும் வீரியத்துடன் துடிக்கும். அது அன்பாக, பற்றுறுதியாக, நம்பிக்கையாக மட்டுமே இருக்கும்...