எழில் கொஞ்சும் இயற்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.06.2024
அங்கிருந்த மரம்
இப்போது இல்லை.
அடையாளம் காட்ட
குப்பைத்தொட்டி.
பெயரற்று போனது ஆறு
இப்போது சாக்கடைக்கு
அந்தப் பேரு.
வண்ணத்துப்பூச்சிகள்
ஏமாந்து போகின்றன
தொட்டியில்
நெகிழிப் பூக்கள்.
இதயத் துடிப்புகள்
மறந்து போயின
கோயில் மணிகள்
பிரபலமாகின.
பறவைகள்
அன்னியமாகின
மூட்டை பூச்சிகள்
வீட்டுக்குள்.
உழைக்கும் மாட்டுக்கு
சூடு
கோயில் மாட்டுக்கு
அகத்திக்கீரை.
விதைப்பவர்
வெற்றுடம்பில்
பாம்புகள்
சட்டை உறிக்கின்றன.
நிலைப்படியை
தின்கிறது கரையான்
தொலைக்காட்சி
விளம்பரத்தில் குடும்பம்.
விவசாயிகள் வீட்டில்
வெறுமை,
புதுசாக வந்த
ஒரு யூடியூப் ஜோசியனுக்கு
வெள்ளாமை.
கால் வைத்திருக்கும் இடத்தை கவனம் கொள்ளும் படி
கடிக்கிறது சிற்றெறும்பு.
கால் இடுக்கு வழியே
வந்த வேலையை பார்க்கிறது பிள்ளையார் எறும்பு.
இழப்புக்கு உள்ளாகும் போது
எல்லா பக்கத்திலும்
எதிர்ப்பை காட்டுகிறது
இயற்கை,
சிறு மழையிலும்
தன்னை மீட்டுக் கொள்கிறது இயற்கை.
பாழ்படுத்தும் சூழலுக்கு காரணமானவைகளை
கண்டு கொள்ளலாமல்
கவிழ்ந்து கிடக்கிறது
வாழ்க்கை!
சாமானியன்.
ஞா சிங்கராயர் சாமி.
கோவில்பட்டி