ஊருக்கும் உலகிற்கும் - திருத்தந்தை லியோ வழங்கிய கிறிஸ்துமஸ் செய்தி | Veritas Tamil
URBI ET ORBI” (ஊருக்கும் உலகிற்கும்) திருத்தந்தை லியோ வழங்கிய கிறிஸ்துமஸ் செய்தி
அன்பு சகோதர சகோதரிகளே,"ஆண்டவரில் அனைவரும் மகிழ்வோம்; ஏனெனில் நம் மீட்பர் உலகில் பிறந்திருக்கிறார். இன்று. விண்ணகத்திலிருந்து உண்மையான அமைதி நம்மிடம் இறங்கி வந்துள்ளது" என, கிறிஸ்துமஸ் நள்ளிரவுத் திருப்பலி வருகைப் பல்லவி நம்மை நினைவூட்டுகிறது. மேலும் பெத்லகேமின் அறிவிப்பு திரு அவையில் எதிரொலிக்கிறது: கன்னி மரியாவிற்குப் பிறந்த குழந்தை ஆண்டவராகிய கிறிஸ்து, நம்மைப் பாவம் மற்றும் மரணத்திலிருந்து மீட்க தந்தை அனுப்பியவர், உண்மையில், அவரே நம் அமைதி; கடவுளின் இரக்கமுள்ள அன்பின் மூலம் அவர் வெறுப்பையும் பகைமையையும் வென்றுள்ளார். இதனாலேயே, புனித முதலாம் லியோ குறிப்பிடுவதுபோல, "ஆண்டவரின் பிறப்பு அமைதியின் பிறப்பு" என்றே அழைக்கப்படுகிறது.
பயணியர் விடுதியில் அவர்களுக்கு இடமில்லாததால் இயேசு ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார், அவர் பிறந்தவுடனேயே, அவரது தாய் மரியா "அவரைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்" (லூக் 2:7). அனைத்தும் படைக்கப்பட காரணமான இறைமகன் வரவேற்கப்படவில்லை; விலங்குகளுக்கான ஓர் ஏழ்மையான தீவனத் தொட்டியே அவருக்குத் தொட்டிலானது. விண்ணகத்தில் நிறைந்திருந்த தந்தையின் நிலையான வார்த்தை, இவ்வாறே உலகிற்கு வரத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்பில், அவர் ஒரு பெண்ணின் மகனாகப் பிறந்து நமது மனிதத்தன்மையில் பங்குபெற விரும்பினார்; அன்பினால் அவர் வறுமையையும் நிராகரிப்பையும் ஏற்றுக்கொண்டு, கைவிடப்பட்டவர்களோடும் ஒதுக்கப்பட்டவர்களோடும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார்.
இயேசுவின் பிறப்பிலேயே, இறைமகனின் முழு வாழ்க்கையையும் சிலுவை மரணம் வரை வழிநடத்தப்போகும் அடிப்படைத் தீர்மானத்தையும் நாம் காண்கிறோம்: நம்மைப் பாவச் சுமைகளின் கீழ் விட்டுவிடாமல், அதை நமக்காக அவரே சுமக்கவேண்டும் என்பதே அத்தீர்மானம், அதை அவர் ஒருவரால் மட்டுமே செய்ய முடிந்தது. இருப்பினும், அதே நேரத்தில், நாம் மட்டும் செய்யக்கூடியது என்ள என்பதையும் அவர் நமக்குக் காட்டினார்; அதாவது, நமது பொறுப்பில் உள்ள பங்கை நாமே ஏற்றுக்கொள்வது. உண்மையில், நம்மை நம் விருப்பமின்றி படைத்த கடவுள். நம் விருப்பமின்றி நம்மை மீட்க மாட்டார் என்கிறார் புனித அகஸ்டின் (பிரசங்கம் 169); அதாவது, அன்பு செய்ய வேண்டும் என்ற நமது சுதந்திரமான விருப்பம் இன்றி மீட்பு இல்லை, அன்பு செய்யாதவர்கள் மீட்கப்படுவதில்லை; அவர்கள் தொலைந்து போகிறார்கள், கண்ணுக்குத் தெரியும் தன் சகோதரனையோ சகோதரியையோ அன்பு செய்யாதவன், கண்ணுக்குத் தெரியாத கடவுளை அன்பு செய்ய முடியாது (1 யோவான் 4:20).
சகோதர சகோதரிகளே, பொறுப்பேற்பதே அமைதிக்கான உறுதியான வழி நாம் அனைவரும். ஒவ்வொரு நிலையிலும், மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு, மற்றவர்களின் துன்பங்களில் உண்மையாகப் பங்குபெற்று, பலவீனமானவர்களுடனும் ஒடுக்கப்பட்டவர்களுடனும் ஒற்றுமையாக நின்றால், உலகம் மாறும்.
இயேசு கிறிஸ்து முதலாவதாக நம்மைப் அனைத்து பாவத்திலிருந்து விடுவிப்பதாலும், இரண்டாவதாக மோதல்களை, அதாவது, தனிநபர்களுக்கு இடையேயான அல்லது நாடுகளுக்கு இடையேயான மோதல்களையும் முறியடிப்பதற்கான வழியை நமக்குக் காட்டுவதாலும் அவர் நமது அமைதியாக இருக்கிறார். பாவத்திலிருந்து விடுபட்ட இதயம் இன்றி, மன்னிக்கப்பட்ட இதயம் இன்றி, நாம் அமைதியின் மனிதர்களாகவோ அல்லது அமைதியை உருவாக்குபவர்களாகவோ இருக்க முடியாது. இதற்காகவே இயேசு பெத்லகேமில் பிறந்து சிலுவையில் இறந்தார்; தம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்க அவரே மீட்பராணர். அவருடைய அருளால், நாம் ஒவ்வொருவரும் வெறுப்பு, வன்முறை மற்றும் எதிர்ப்பை திராகரிக்கவும். உரையாடல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பயிற்சி செய்யவும் தம் பங்கைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்.
இந்தக் கொண்டாட்ட நாளில், அனைத்துக் கிறித்தவர்களுக்கும் குறிப்பாக, எனது முதல் திருத்தூதுப் பயனாத்தின் போது நான் சந்தித்த மத்திய கிழக்குப் பகுதியில்
வாழும் மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தங்கள் அச்சங்களை வெளிப்படுத்தியபோது நான் செவிமடுத்தேன்; அவர்களை ஆட்கொள்ளும் அதிகாரப் போட்டிகளுக்கு முன்னால் அவர்கள் உணரும் சக்தியற்ற நிலையை நான் நன்கு அறிவேன். இன்று பெத்லகேமில் பிறந்த குழந்தை அதே இயேசுதான்: "என்னிடத்தில் நீங்கள் அமைதி பெறும்பொருட்டே நான் இதை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள்; நான் உலகை வென்றுவிட்டேன்" (யோவான் 16:33) என்றார்.
லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் சிரியாவிற்கு நீதி, அமைதி மற்றும் உறுதிப்பாட்டை வளர்க்க கடவுளிடம் வேண்டுவோம்; "நீதியின் விளைவு அமைதியாய் இருக்கும்; நீதியின் பயன் என்றென்றும் நிலவும் அமைதியும் நம்பிக்கையுமாய் இருக்கும்" (எசாயா 32:17) எனும் இந்தத் தெய்வீக வார்த்தைகளில் நம்பிக்கை கொள்வோம்.
முழு ஐரோப்பிய கண்டத்தையும் அமைதியின் அரசரிடம் ஒப்படைப்போம்; அதன் கிறித்தவ வேர்கள் மற்றும் வரலாற்றிற்கு உண்மையாக இருந்து, சமூக உணர்வையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து ஊக்குவிக்கவும், தேவையிலுள்ளோருடன் ஒற்றுமையாகவும் அவர்களை ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருக்குமாறு அவரிடம் வேண்டுவோம். குறிப்பாக, உக்ரைனில் துயருறும் மக்களுக்காக மன்றாடுவோம்: ஆயுதங்களின் முழக்கம் ஒழியட்டும், சம்பந்தப்பட்ட தரப்பினர் உலகளாவிய சமூகத்தின் ஆதரவுடனும் அர்ப்பணிப்புடனும், நேர்மையான, நேரடியான மற்றும் மரியாதைக்குரிய உரையாடலில் ஈடுபடத் துணிவைப் பெறட்டும்.
பெத்லகேம் குழந்தையிடம், உலகில் தற்போது நடக்கும் அனைத்துப் போர்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் குறிப்பாக, மறக்கப்பட்ட போர்களுக்காகவும், அநீதி, அரசியல் நிலையின்மை, மதத் துன்புறுத்தல் மற்றும் பயங்கரவாதத்தால் அவதிப்படுபவர்களுக்காகவும் அமைதியையும் ஆறுதலையும் இறைஞ்சுவோம்.
சூடான், தெற்கு சூடான், மாலி, புர்க்கினா பாசோ மற்றும் காங்கோ சனநாயகக் குடியரசில் உள்ள நமது சகோதர சகோதரிகளை நான் சிறப்பாக நினைவு கூர்கிறேன்.
இந்த நம்பிக்கையின் யூபிலி ஆண்டின் இறுதி நாள்களில், ஹைட்டியின் அன்புக்குரிய மக்களுக்காக மனித உருவெடுத்த இறைவனிடம் இறைவேண்டல் செய்வோம். அந்த நாட்டில் அனைத்து வகையான வன்முறைகளும் முடிவுக்கு வரவும், அமைதி மற்றும் நல்லிணக்கப் பாதையில் முன்னேற்றம் ஏற்படவும் வேண்டுவோம்.
இலத்தீன் அமெரிக்காவில் அரசியல் பொறுப்புகளில் இருப்பவர்களுக்குக் குழந்தை இயேசு ஊக்கமளிக்கட்டும்; இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் ஏராளமான சவால்களில், கருத்தியல் மற்றும் கட்சி ரீதியான பாரபட்சங்களுக்குப் பதிலாகப் பொது நலனுக்கான உரையாடலுக்கு இடம் கொடுக்கப்படட்டும்.
மியான்மரை நல்லிணக்கத்தின் ஒளியால் ஒளிரச் செய்யவும், இளைய தலைமுறைக்கு நம்பிக்கையை மீட்டுத் தரவும், அதன் மக்கள் அனைவரையும் அமைதிப் பாதையில் வழிநடத்தவும், தங்குமிடம், பாதுகாப்பு அல்லது நாளையப் பொழுதின் மீது நம்பிக்கை இன்றி வாழ்பவர்களுக்குத் துணையாக இருக்கவும் அமைதியின் அரசரிடம் கேட்போம். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான பழமையான நட்பு மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினர் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காகத் தொடர்ந்து பணியாற்றவேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம்.
அண்மையில் முழுச் சமூகங்களையும் பாதித்த பேரழிவுகளான இயற்கைச் சீற்றங்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்ட தெற்காசியா மற்றும் ஓசியானியா மக்களையும் கடவுளிடம் ஒப்படைப்போம்
இத்தகைய சோதனைகளுக்கு முன்னால், துயருறுவோருக்கு உதவுவதில் நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மனமார்ந்த உறுதியுடன் புதுப்பிக்குமாறு அனைவரையும் அழைக்கிறேன்.
அன்பு சகோதர சகோதரிகளே, இருண்ட இரவில், "எல்லா மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது" (யோவான் 1:9); ஆனால், "அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவான் 1:11). துன்பப்படுபவர்களிடம் அலட்சியமாக இருக்க நம்மை அனுமதிக்க வேண்டாம்; ஏனெனில், கடவுள் நமது துயரங்களுக்கு அலட்சியமானவர் அல்ல.
மனிதனாக மாறியதன் மூலம், இயேசு நமது பலவீனத்தை ஏற்றுக்கொண்டார்; நம் ஒவ்வொருவருடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்: காசா குடியிருப்பாளர்களைப் போல எஞ்சியவை எதுவுமின்றி அனைத்தையும் இழந்தவர்களுடன்; ஏமன் மக்களைப் போலப் பசி மற்றும் வறுமைக்கு இரையானவர்களுடன்; மத்திய தரைக்கடலைக் கடந்தோ அல்லது அமெரிக்கக் கண்டத்தைக் கடந்தோ புகலிடம் தேடித் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறும் பல அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருடன்; வேலை இழந்தவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுடன், குறிப்பாக வேலை கிடைக்கப் போராடும் பல இளைஞர்களுடன்; குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களைப் போலச் சுரண்டப்படுபவர்களுடன்; பெரும்பாலும் மனிதாபிமானமற்ற சூழலில் வாழும் சிறைக் கைதிகளுடன் அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
ஒவ்வொரு நிலத்திலிருந்தும் எழும் அமைதிக்கான வேண்டுதல் கடவுளின் இதயத்தை அடைகிறது. ஒரு கவிஞர் எழுதியது போல:
"அது ஒரு போர்நிறுத்தத்தின் அமைதி அல்ல;
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாக இருக்கும் தரிசனமும் அல்ல;
மாறாக,
பரபரப்பு அடங்கிய பின் இதயத்தில் ஏற்படும் உணர்வு போல!
பெரியதொரு களைப்பைப் பற்றி மட்டுமே உன்னால் பேச
அது வரட்டும்
காட்டுப்பூக்களைப் போல,
திடீரென்று, ஏனெனில் அந்த நிலத்திற்கு
அது தேவை: வன அமைதி (wildpeace)."
இந்தப் புனித நாளில், தேவையிலும் வேதனையிலும் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு நமது இதயங்களைத் திறப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், நம்மை இருகரம் நீட்டி வரவேற்றுத் தனது தெய்வீகத்தை நமக்கு வெளிப்படுத்தும் குழந்தை இயேசுவிடம் நமது இதயங்களைத் திறப்போம்: "அவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும்... அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார்" (யோவான் 1:12).
இன்னும் சில நாள்களில், யூபிலி ஆண்டு முடிவுக்கு வரும். புனிதக் கதவுகள் மூடப்படும்; ஆனால், நமது நம்பிக்கையான கிறிஸ்து எப்போதும் நம்மோடு இருப்பார்! அவரே எப்போதும் திறந்திருக்கும் கதவு, நம்மைத் தெய்வீக வாழ்விற்கு அழைத்துச் செல்பவரும் அவரே. இந்த நாளின் மகிழ்ச்சியான அறிவிப்பு இதுதான்: பிறந்த குழந்தை மனித உருவெடுத்த இறைவன்; அவர் தண்டிக்க வரவில்லை, மீட்கவே வந்தார்; அவர் வந்து தங்கித் தன்னைத் தந்துவிட வந்தவர் என்பதால் இது ஒரு தற்காலிகத் தோற்றம் அல்ல. அவரில், ஒவ்வொரு காயமும் குணமடைகிறது; ஒவ்வோர் இதயமும் ஓய்வையும் அமைதியையும் காண்கிறது. "ஆண்டவரின் பிறப்பு அமைதியின் பிறப்பு."