போதைப்பொருள் ஒழிப்பு: கத்தோலிக்கத் திருஅவையின் பங்கேற்பு | Veritas Tamil

இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில், அரசாங்கம் முன்னெடுத்துள்ள தேசியத் திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற சமயங்களுக்கிடையிலான மாநாட்டில், 500-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க அருள்பணியாளர்களும் துறவியரும் பங்கேற்றனர்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள டெம்பிள் ட்ரீஸ் வளாகத்தில், நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இம்மாநாடு, இலங்கை அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்க அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர்களுடன் பௌத்தத் துறவிகள், இந்து சமயத் தலைவர்கள், இஸ்லாமியப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சார்ந்த தலைவர்களும் கலந்துகொண்டனர்.

தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களைப் பெரிதும் பாதிக்கும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், அரசாங்கம் முன்னெடுத்துள்ள “முழு நாடுமே ஒன்றாக” (A Whole Country Together) என்ற தேசியத் திட்டத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போதைப்பொருள் ஒழிப்பு என்பது அரசாங்கத்தின் முயற்சிகளால் மட்டுமே சாத்தியமாகாது என்றும், சமய நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, இளைய தலைமுறையினரைப் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பதில் சமயச் சமூகங்கள் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இம்மாநாட்டில் அருள்பணி ஜேம்ஸ் ஜெனிஸ்டன் OMI அவர்கள், போதைப்பொருள் பயன்பாடு தனிநபர்களைப் பாதிப்பதோடு நின்றுவிடாமல், குடும்பங்களைச் சிதைத்து, சமூகங்களின் அமைதியையும் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தும் தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் கவலை தெரிவித்தார். இதனை மற்றவர்களின் பொறுப்பாகக் கருதாமல், சமயத் தலைவர்கள், அரசாங்க அமைப்புகள் மற்றும் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், போதைப்பொருள் இல்லாத இலங்கையை உருவாக்குவது அனைவரின் பொதுப்பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அருள்பணி சிங்கர் OMI அவர்கள், இளைய தலைமுறையினர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார். இளைஞர்களைப் பாதுகாப்பதற்குத் தண்டனை வழங்குவது மட்டுமே தீர்வாகாது என்றும், அவர்களுக்குத் தேவையான கல்வி, விழிப்புணர்வு, முறையான வழிகாட்டுதல், குடும்ப ஆதரவு மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது அவசியம் என்றும் தெரிவித்தார். இளைஞர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்கு நல்வழிகாட்டுவதில் சமய நிறுவனங்களுக்கு முக்கியப் பொறுப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அருள்பணி ஜூட் அவர்கள், கடந்த ஓராண்டில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். இவ்வளவு அதிகமான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்னும் கண்டறியப்படாமல் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, சமூகங்களைச் சென்றடையும் போதைப்பொருள்களின் அளவு குறித்தும் கவலை எழுப்பினார். எனவே, போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கும், அதன் பிடியிலிருந்து எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாப்பதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் வழிகாட்டுதல் மற்றும் சமூகத்தில் அறநெறி விழுமியங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் சமய நிறுவனங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் இம்மாநாடு எடுத்துரைத்தது.

நம்பிக்கையில் ஒன்றிணைந்து, பொறுப்புணர்வில் ஒருமித்து, போதைப்பொருள் இல்லாத இலங்கையை உருவாக்குவோம் என்ற பொதுவான உறுதிப்பாட்டுடன் இம்மாநாடு நிறைவடைந்தது.

Tamil Survey Popup Image