திருஅவையை புதுப்பிக்க திருத்தந்தை அழைப்பு! | Veritas Tamil

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவதையோ அல்லது சமூக மாற்றங்களையோ கண்டு சோர்வடையாமல், இயேசுவின் பார்வையில் உலகைப் பார்ப்பதே திருஅவையின் முதல் கடமை என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

மே 28, வியாழன்று, இடம்பெற்ற இத்தாலிய ஆயர் பேரவையின் 82-வது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இத்தாலிய ஆயர்கள் தங்களின் நற்செய்திப் பணியை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றும், திருஅவை வாழ்வின் மையமாக நற்செய்தியை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தனிமை, பிளவுகள் மற்றும் நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிரமங்கள் என இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்து உலகை ஒரு பிரச்சினையாகப் பார்க்கவில்லை; மாறாக, இறைவனின் வயலில் வேலை செய்ய உழைப்பாளர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு மாபெரும் "அறுவடையாகவே" பார்க்கிறார் என்று ஆயர்களுக்கு நினைவூட்டினார்.

மேலும் விசுவாச வாழ்வின் தொடக்கப் பயிற்சி என்பது, திருவருட்சாதனங்களைப் பெறுவதற்கான வெறும் ஏற்பாடு மட்டுமல்ல; அது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பயணம் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை,   மேலும், திருமுழுக்கு என்பது கிறிஸ்துவோடும் திருஅவையோடும் கொண்டுள்ள பிணைப்பில் உருவானது என்றும், அது நமது வாழ்வை உருமாற்றும் ஒரு வாழும் உண்மை என்பதை மக்கள் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

செபம், இறைவார்த்தை, நற்கருணை ஆகியவற்றோடு ஏழைகள், குடும்பங்கள் மற்றும் இளைஞர்களை அன்போடு அரவணைக்கும் சமூகங்களில்தான் நம்பிக்கை வளரும் என்று மொழிந்த திருத்தந்தை,திருஅவை எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொள்ளவும், நற்செய்திப் பணியில் ஆர்வமாக இருக்கவும் ஆயர்கள் ஆழமாகச் செவிமடுக்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து  இறைவனின் வார்த்தைக்கும், இறைமக்களின் குரலுக்கும், காலத்தின் மாற்றங்களுக்கும் ஆயர்கள் தங்களின் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, இத்தாலிய திருஅவையின் ஒன்றியப்பயணப் பாதையில் அனைவரும் பங்கேற்பதும் ஒருவரோடு ஒருவர் இணைந்திருப்பதுமே ஒரு கூட்டுப்பயணத் திருஅவையின் அத்தியாவசியமான கூறுகள் என்று எடுத்து க்காட்டினார்.

இறுதியாக, "முக்கியமானவற்றில் கவனம் செலுத்தும் துணிச்சல்" நமக்கு வேண்டும் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை, பங்குகள் மற்றும் திருஅவை அமைப்புகள் தங்களை அப்படியே தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், நற்செய்திப் பணி ஆர்வத்தோடு கிறிஸ்துவை உலகிற்கு அறிவிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஆயர்களுக்கு அழைப்பு விடுத்து தனது உரையை நிறைவு செய்தார். 

நன்றி வத்திக்கான்!

Daily Program

Livesteam thumbnail