வேரித்தாஸ் செய்திகள் || Veritas Tamil News || 14.06.2024

தலைப்பு செய்திகள் 

  1. ஆன்மிக மாற்றத்தின் தொடக்கப் புள்ளி பணிவு என்று உறைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்.
  2. ஒடிசா மாநில கிறித்தவர்களால் உற்றுநோக்கப்படும் புதிய அரசு
  3. ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்விச் சுதந்திரம்!

 

  1. தாழ்மையான மனம் கொண்டவர்கள் மட்டுமே மற்றவர்களை மதிக்கின்றனர் மற்றும் அவர்களின் பங்களிப்பு, அறிவுரை, உள் செல்வத்தை வரவேற்கிறார், என்றும், அவர்களின் சொந்த நலனுக்கான 'நான்' என்பதை விடுத்து, சமூக நலனுக்கான 'நாம்' என்பதை முன்னிறுத்துகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.ஜூன் 13, இவ்வியாழனன்று, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை ஏற்பாடு செய்திருந்த மதிப்பீட்டாளர்களின் கூட்டத்தில் பங்கேற்கும் பொதுநிலையினர்  சங்கங்கள், திருஅவை இயக்கங்கள் மற்றும் புதிய சமூகங்களின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

 

இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி தனது முதல் தலைப்பை விளக்கிய திருத்தந்தை, வெறும் மனித சிந்தனையை தாண்டி கடவுளின் எண்ணத்தை தழுவிக்கொள்ள வேண்டும் என்றும், இதுவே அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் உள்நிலை மாற்றம் என்றும் எடுத்துக்காட்டினார்.

 

அடுத்து, யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்” என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி தனது இரண்டாவது தலைப்பை விளக்கிய திருத்தந்தை, மூடிய வட்டத்தின் சோதனைக்குள் விழுந்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, “உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்ற வார்த்தைகளைத் தனது மூன்றாவது தலைப்புக்கு எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஆன்மிக மாற்றத்தின் தொடக்கப் புள்ளி பணிவு என்றும், இதுவே அனைத்து நற்பண்புகளுக்கும் நுழைவாயிலாக இருக்க வேண்டும் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

--------------------------------------------------------------------------------------------------------------------

2. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் என்பது அங்கு வாழும் கிறித்தவ மக்களால் மிகக் கூர்ந்து கவனிக்கக்கூடியதாக மாறியுள்ளது என்று யூகான் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

2008-ஆம் ஆண்டு கந்தமால் கலவரத்தின் சுவடுகள் இன்னும் முழுமையாக மறையாத நிலையில், பாரதிய ஜனதா கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்பது கிறித்தவ மக்களுக்குக் கவலையளிக்கக்கூடிதாக உள்ளது என்று கூறிய கட்டாக்-புவனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் அஜய் சிங், புதிய அரசை, ஓர் அரசியல் கட்சி அல்லது அதனுடன் இணைந்துள்ள தீவிர வலதுசாரி குழுக்களின் வரலாறைக் கொண்டு மதிப்பிட முடியாது என்பதால், பொறுத்திருந்து பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

நாடளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 272 இடங்கள் கிடைக்காமல் போனதற்கு காரணம், அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொண்ட வெறுப்புணர்வுப் பேச்சு என்றும், அதிலிருந்து ஒடிசாவின் புதிய அரசு பாடம் கற்றுக்கொண்டு அனைவரையும் உண்மையான அரசியல் பண்புடன் நடத்தும் என்று  நம்புவதாகவும் கூறியுள்ளார் அருள்பணியாளர் அஜய் சிங்.

பெயர் வெளியிட விரும்பாத கிறித்தவத் தலைவர் ஒருவர் UCAN செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் கிறித்தவர்கள் தங்கள் பணிகளை எச்சரிக்கையுடனும் கவனமுடனும் தொடர வேண்டும் என்றும், இதற்கு முன்பிருந்த அரசும், பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணியில் இருந்தபோது, அக்கட்சியின்  வலதுசாரி இந்து அமைப்புகளுக்கு, கிறித்தவர்களும் அவர்கள்  செய்கின்ற பணிகளும்தான் இலக்காக அமைந்திருந்தன என்றும், நமக்கு என்ன நிகழக் காத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.இம்மாநிலத்தின் வாழும் 4 கோடியே 20 இலட்சம் மக்களில் 2.77 விழுக்காடு கிறித்தவர்கள், மேலும் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் இந்துக்கள் மற்றும் பழங்குடியினர் ஆவர்.

 

------------------------------------------------------------------------------------------------------------------------------

3. ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் மேல்நிலைப் பள்ளிகளில் சேர தடைவிதிக்கப்பட்டு இன்றோடு 1000 நாட்கள் நிறைவடையும் நிலையில், யுனிசெப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கேத்தரின் ரூசெல் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் தன்னுடைய அறிக்கையில், இன்றைய நாள் ஒரு சோகமான மற்றும் மனச்சோர்வு நிறைந்த நாளாக அமைந்திருக்கிறது என்றும், இந்த 1000 நாட்கள் என்பது பல இலட்சக்கணக்கான மணிநேர பாடங்களை இழந்ததற்குச் சமம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்தடையால் 15 இலட்சம் பெண் குழந்தைகளின், கல்விக்கான அடிப்படை உரிமைகள்  மீறப்பட்டிருக்கின்றன என்றும், அவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்து, மனநலம் பாதிப்படைவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்றும் உரைத்துள்ள கேத்தரின் ரூசெல் அவர்கள், குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகளின் உரிமைகளை, அரசின் கொள்கைகளுக்கு பிணையக்கைதிகளாக மாற்றமுடியாது என்றும், அவர்களின் வாழ்க்கை, எதிர்காலம், நம்பிக்கை மற்றும் கனவுகள் அனைத்தும் சமநிலையில் துவங்கும் நிகழ்வு என்றும் கூறியுள்ளார்.

 

இந்தத் தடையின் தாக்கம் பெண் குழந்தைகளைத் தாண்டி இச்சூழல் மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்குவதோடல்லாமல், ஆப்கானிஸ்தானின் பொருளாதார மற்றும் வளர்ச்சிப்பாதையில் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள ரூசெல் அவர்கள், கல்வி, வாய்ப்புகளை மட்டும் உருவாக்குவதில்லை, மாறாக பெண் குழந்தகளை, இளம் வயது திருமணம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு உடல்நலன் சார்ந்த குறைகளிலிருந்து பாதுகாப்பதோடு, ஆப்கானிஸ்தானை அடிக்கடி பாதிக்கும் வெள்ளம், வறட்சி மற்றும் பூகம்பம் போன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளவும் அவர்களை வலுப்படுத்திடுகிறது என்றும் உரைத்துள்ளார்.

 

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் உதவ யுனிசெஃப் தன்னார்வலர்கள் கடுமையாக உழைப்பதாகவும், 27 இலட்சம் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி மற்றும் 6,00,000 இலட்சம் குழந்தைகளுக்கு சமூக அடிப்படையிலான கல்வி வழங்கப்படுவதை உறுதிப்படுத்திய ரூசெல் அவர்கள், இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவிகள் பயன்பெறுவதாகவும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து, பள்ளி உள்கட்டமைப்பை சிறந்த முறையில் செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.